twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    கேட்டார் ஷாரூக்; உதவினார் ரஜினி!!

    By Staff
    |

    Shah Rukh Khan with Deepika Padukone
    குசேலன் இந்தி டப்பிங் படத்தை இப்போதைக்கு ரிலீஸ் செய்தால் அதே கதையைக் கொண்ட தனது தீபாவளி ரிலீஸ் படமான பில்லூ பார்பர் பாதிக்கப்படும். எனவே குசேலன் இந்திப் பதிப்பைத் தாமதமாக ரிலீஸ் செய்யுமாறு ஷாரூக் கான் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    இதனால் இந்தியில் டப் செய்யப்பட்ட குசேலனை இப்போதைக்கு ரிலீஸ் செய்ய வேண்டாம் என்றும், பில்லூ பார்பர் வெளியான பிறகு ரிலீஸ் செய்து கொள்ளுங்கள் என்றும் பிரமிட் சாய்மிரா நிறுவனத்துக்கு அறிவுரை வழங்கியுள்ளார் ரஜினி.

    மம்முட்டி நடித்த கதபறயும் போல் படம்தான் தமிழ், தெலுங்கில் ரஜினி நடிக்க குசேலன் (கதாநாயகுடு) மற்றும் இந்தியில் ஷாரூக்கான் நடிக்க பில்லூ பார்பர் என தயாராகிறது.

    இதில் குசேலன் படம் வருகிற வெள்ளிக்கிழமை உலகமெங்கும் வெளியாகிறது. இந்தப் படத்தை இந்தியில் டப் செய்து வெளியிடுகிறது பிரமிட் சாய்மிரா. ஆரம்பத்தில் இந்தி டப்பிங்குக்கு எதிர்ப்பு தெரிவித்தார் பில்லூ பார்பர் படத்தின் இயக்குநர் ப்ரியதர்ஷன்.

    ஆனால் குசேலனை இந்தியில் டப் செய்துகொள்ள அதன் தயாரிப்பாளரும், கதாசிரியருமான சீனிவாசனிடம் ஏற்கெனவே அனுமதி பெற்றிருந்தார் இயக்குநர் வாசு. எனவே ப்ரியதர்ஷனின் வாதம் எடுபடாமல் போய்விட்டது.

    எனவே திட்டமிட்டபடி, குசேலனின் இந்திப் பதிப்பையும் ஒரு சேர ரிலீஸ் செய்துவிட வாசு முடிவெடுத்திருந்தார். சிவாஜி தமிழ்ப் படம் மும்பை, டெல்லி மற்றும் புனே போன்ற நகரங்களில் 40 பிரிண்டுகளுக்கும் மேல் வெளியாகி வசூலில் புதிய சாதனை படைத்தது.

    எனவே குசேலனை இந்தியில் டப் செய்து ஒரே நேரத்தில் வெளியிடுவது நல்ல பலனைத் தரும் எனத் திட்டமிட்ட வாசு, டப்பிங் வேலையையும் முடித்துவிட்டார் (ஆனால் இப்படி டப் செய்யப்பட்ட சந்திரமுகி எதிர்பார்த்த மாதிரி போகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது)

    ஆனால் இதைக் கேள்விப்பட்ட ஷாரூக்கான் தனிப்பட்ட முறையில் ரஜினியிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். தன்னுடைய தயாரிப்பில், நடிப்பில் உருவாகும் பில்லூ பார்பர் தீபாவளிக்கு வெளியாவதால், அதற்கு முன் அதே கதையைக் கொண்ட குசேலன் இந்திப் பதிப்பை வெளியிடுவது தன் படத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்றும், இரண்டு படங்களையும் வேண்டுமானால் ஒரே நேரத்தில் வெளியிட்டுக் கொள்ளலாம் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

    ஆனால் குசேலனை நேரடியாக தமிழில் ரிலீஸ் செய்வதால் தனக்கு எந்த பிரச்சினையும் இல்லை என்றும் கூறியுள்ளார்.

    இதைத் தொடர்ந்து ஆங்கில சப்-டைட்டில்களுடன் குசேலன் தமிழிலிலேயே வட இந்தியாவெங்கும் ரிலீசாகிறது.

    இத்தகவலை பிரமிட் நிறுவன மேலாண்மை இயக்குநர் சாமிநாதனும் உறுதிப்படுத்தியுள்ளார். ரஜினி சொன்னதால், குசேலன் இந்தி டப்பிங்கை நிறுத்தி வைத்திருப்பதாக அவர் கூறினார்.

    மீண்டும் திறக்கப்பட்ட அரோரா:

    இதற்கிடையே, சில மாதங்களுக்கு முன் இழுத்து மூடப்பட்ட மும்பை அரோரா திரையரங்கம் குசேலன் படத்தைத் திரையிடுவதற்காக மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.

    ஆண்டு இறுதி வரை மட்டுமே செயல்படவுள்ள இத்திரையரங்கம் குசேலன் ஓடி முடிந்ததும் மீண்டும் மூடப்பட்டு, வணிக வளாகத்துடன் கூடிய, மல்டிபிளக்ஸ்ஸாக மாறப்போகிறது.

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X