ஜூன் 4ல் ஜெயம் ரவி -ஆர்த்தி திருமணம்!
பிரபல நடிகர் ஜெயம் ரவிக்கும் ஸ்காட்லாந்தில் எம்ஐஎம் பட்டம் பெற்ற ஆர்த்திக்கும் வரும் ஜூன் 4-ம் தேதி சென்னையில் திருமணம் நடக்கிறது.
பிரபல படஅதிபர் எடிட்டர் மோகனின் மகன் ரவி. ஜெயம் என்ற பிரமாண்ட வெற்றிப் படம் மூலம் அறிமுகமாகி இப்போது முதல்நிலை நடிகர்களுள் ஒருவராகத் திகழ்கிறார்.
தொடர்ந்து வெற்றிப் படங்களைத் தந்துவரும் ஜெயம் ரவியின் அடுத்த வெளியீடு பேராண்மை திரைப்படம். எஸ்பி ஜனநாதன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படம் மிகப் பெரிய எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் இவருக்கும், சென்னையை சேர்ந்த விஜயகுமார்-சுஜாதா தம்பதியின் மகள் ஆர்த்திக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு இருக்கிறது. ஆர்த்தி, சென்னை ஸ்டெல்லா மேரி கல்லூரியில் படித்து பட்டம் பெற்றவர். ஸ்காட்லாந்தில், 'இண்டஸ்ட்ரியல் மானேஜ்மெண்ட்'டில் (எம்.ஐ.எம்.) முதுகலைப் பட்டம் பெற்றுள்ளார்.
பெற்றோர்கள் சம்மதத்துடன் நடைபெறும் காதல் திருமணம் இது.
ஜுன் 4-ந் தேதி சென்னை அடையாரில் உள்ள பார்க் ஷெரட்டன் ஓட்டலில் காலை 7.30 மணியிலிருந்து 9 மணிக்குள் திருமணம் நடக்கிறது.
திருமண வரவேற்பு நிகழ்ச்சி, ஜுன் 7-ந் தேதி மாலை 6.30 மணிக்கு, சென்னை சாந்தோமில் உள்ள மேயர் ராமநாதன் மண்டபத்தில் நடக்கிறது.
தேனிலவு
திருமணம் பற்றி நடிகர் ஜெயம் ரவி நிருபர்களிடம் சனிக்கிழமை கூறியதாவது:
என்னைப் புரிந்து கொண்டவரே எனக்கு வாழ்க்கைத் துணையாக வரப்போகிறார்.
திருமணம் முடிந்ததும் இருவரும் தேன்நிலவுக்காக, ஆஸ்திரேலியா செல்ல முடிவு செய்து இருந்தோம். ஆனால், அங்கு இப்போது கலவரம் நடப்பதால், வேறு ஒரு வெளிநாட்டுக்கு செல்வது என்று திட்டமிட்டு இருக்கிறோம்.
திருமணம் செய்துகொண்டால் ஒரு நடிகரின் 'இமேஜ்' பாதிக்கப்படும் என்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை. என் ரசிகர்கள் என் மீது மிகுந்த பாசம் கொண்டவர்கள். திருமணத்துக்கு பிறகும் தொடர்ந்து அவர்கள் எனக்கு ஆதரவு அளிப்பார்கள் என்றார் ரவி.


Click it and Unblock the Notifications











