கமல்ஹாசன் நற்பணி இயக்கத்தின் இளைஞர் அமைப்பு தொடக்கம்
கமல்ஹாசன் நற்பணி இயக்கத்தின் சார்பில் இளைஞர் அமைப்பு தொடங்கப்பட்டுள்ளது. இதை நடிகர் கமல்ஹாசன் இன்று தொடங்கி வைத்தார்.
சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள மகாராஷ்டிர நிவாஸ் திருமண மண்டபத்தில் இன்று காலை நடந்த நிகழ்ச்சியில் நல திட்ட உதவிகள் வழங்கும் விழா மற்றும் இளைஞர் அமைப்பு தொடக்க விழா நடைபெற்றது.
ஏழைப் பெண்களுக்கு இலவச தையல் இயந்திரம், அமீனா என்ற 3 மாதக் குழந்தைக்கு இருதய அறுவைச் சிகிச்சைக்காக ரூ. 36,000 நிதியுதவி வழங்கப்பட்டது.
நற்பணி இயக்கத்தைச் சேர்ந்த மறைந்த சீனிவாசனின் மனைவி சந்திராவுக்கு ரூ. 8500 நிதியுதவியும் அளிக்கப்பட்டது. ஊனமுற்ற 3 இளைஞர்களுக்கு மூன்று சக்கர சைக்கிள்களும் அளிக்கப்பட்டன. அனைத்தையும் உரியவர்களுக்கு நடிகர் கமல்ஹாசன் வழங்கினார்.
நிகழ்ச்சியில் புதிதாக தொடங்கப்பட்ட இளைஞர் அமைப்பில் ஏராளமான கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் இணைந்தனர்.
விழாவுக்கான ஏற்பாடுகளை கோவை தங்கவேலு, செய்தித் தொடர்பாளர் நிகில் முருகன் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.


Click it and Unblock the Notifications











