மனைவியுடன் விவாகரத்து.. மன அழுத்தம்.. ஒரு நாளைக்கு ஒரு லிட்டர் மது.. அமீர் கான் வாழ்வில் இப்படியா?
மும்பை: பாலிவுட் திரையுலகின் சூப்பர் ஸ்டார்களில் ஒருவர் அமீர் கான். முக்கியமாக தன்னுடைய ஒவ்வொரு படத்திலும் தனது நடிப்பில் ஏதோவொரு வித்தியாசத்தை காண்பிக்கக்கூடியவர். அவர் முதலில் ரீனா தத்தா என்பவரை திருமணம் செய்துகொண்டார். அவரை பிரிந்த அமீர் அடுத்ததாக கிரண் ராவை திருமணம் செய்துகொண்டார். அவரையும் சில காரணங்களால் விவாகரத்து செய்த அவர் சமீபத்தில்தான் தனது மூன்றாவது காதலியை பொதுவெளிக்கு அறிமுகப்படுத்தி வைத்தார்.
பாலிவுட் திரையுலகம்தான் உலக அளவில் இந்திய திரைத்துறையின் அடையாளமாக பலரால் பார்க்கப்படுகிறது. அந்தத் திரையுலகத்தின் அடையாளங்களில் ஒருவர் அமீர் கான். குழந்தை நட்சத்திரமாக நடிக்க ஆரம்பித்த அவர் வளர்ந்த பிறகு உதவி இயக்குநராகவும் பணியாற்றியிருக்கிறார். சில படங்கள் மற்றும் குறும்படங்களில் உதவி இயக்குநராக இருந்த அவர் Qayamat Se Qayamat Tak என்கிற படத்தில்தான் முதலில் லீடு ரோலில் நடித்தார். அந்தப் படம் கடந்த 1988ஆம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.தொடர்ந்து அமீருக்கும் வாய்ப்புகள் கிடைத்தன.

வரிசையாக ஹிட்டுகள்: அதன்படி ராக், லவ் லவ் லவ், அவ்வால் நம்பர், தில், ஜவானி சிந்தாபாத் என வரிசையாக நடித்தார். அந்தப் படங்கள் அனைத்துமே நல்ல வரவேற்பை பெற்று அமீர் கானுக்கு ஒரு நிலையான இடத்தை பாலிவுட்டில் பெற்றுக்கொடுத்தது. ஒருகட்டத்தில் தவிர்க்க முடியாத நடிகராகவும் அவர் மாறினார். மேலும் வெறும் கமர்ஷியல் படங்களில் மட்டும் நடிக்காமல் அவ்வப்போது பரிசோதனை முயற்சிகள் செய்யப்படும் கதைகளிலும் நடிக்க ஆரம்பித்து நல்ல நடிகர் என்ற பெயரையும் பெற்றார் அவர்.
முன்னணி ஹீரோ: தொடந்து ஹிட்டுகளை கொடுத்துவந்த அவர் பாலிவுட்டின் முன்னணி ஹீரோவாகவும் மாறினார். அவர் நடித்த பிகே, தங்கல், லகான் உள்ளிட்ட படங்கள் உலக அளவில் இந்திய சினிமாவை அடையாளப்படுத்தின. லகான் படம் ஆஸ்கர் ரேஸிலும் கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது. ஆனால் அந்தப் படத்தால் விருதுகளை வெல்ல முடியவில்லை. அதேபோல் தமிழில் வெளியாகி மிகப்பெரிய ஹிட்டடித்த கஜினி படத்தின் ஹிந்தி ரீமேக்கிலும் நடித்து அசத்தினார் அவர்.

தமிழில் அமீர் கான்: தொடர்ந்து ஹிந்தி படங்களில் நடித்துவந்த அவர் இப்போது தமிழிலும் நடிக்க ஆரம்பித்திருக்கிறார். அதன்படி லோகேஷ் கனகராஜ் ரஜினிகாந்த்தை வைத்து இயக்கியிருக்கும் கூலி படத்தில் முக்கியமான வேடத்தில் நடித்திருக்கிறார் அமீர். கண்டிப்பாக இது அமீருக்கு தமிழில் தரமான என்ட்ரியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இரும்புக்கை மாயாவி படத்தின் கதையையும் அமீரிடம் லோகேஷ் சொன்னதாகவும் சமீபத்தில் ஒரு தகவல் வெளியானது கவனிக்கத்தக்கது.
இரண்டு திருமணங்கள்: இதற்கிடையே அவர் முதலில் ரீனா தத்தா என்பவரை திருமணம் செய்தார். சில காரணங்களால் விவாகரத்து பெற்ற அவர்; அடுத்ததாக கிரண் ராவை திருமணம் செய்தார். அவர்களுக்கு ஒரு மகள் இருக்கிறார். அவரின் திருமணம் அண்மையில்தான் முடிவடைந்தது. ஆனால் கிரணையும் பிரிந்த அவர் சமீபத்தில் தனது 60ஆவது பிறந்தநாளின்போது கௌரி ஸ்ப்ராட்டை பொதுவெளியில் அறிமுகப்படுத்தி வைத்தார். மேலும் விரைவில் கௌரியை திருமணம் செய்துகொள்ளப்போவதாகவும் அறிவித்திருக்கிறார்.
அமீர் கானின் பேட்டி: இந்நிலையில் அவர் கொடுத்திருக்கும் பேட்டி ஒன்று சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியிருக்கிறது. அதில் பேசிய அவர், "நான் எனது முதல் மனைவியான ரீனாவை விவாகரத்து செய்தபோது கடுமையான மன அழுத்தத்துக்கு சென்றேன். ஒன்றரை வருடங்களுக்கு வீட்டில் நான் மட்டும் தனியாக இருந்தேன். அந்தக் காலகட்டத்தில் தினமும் ஒரு லிட்டர் மது அருந்தினேன். எந்த ஒரு கெட்ட பழக்கங்களும் இல்லாத அமீர் கானைத்தான் அதுவரை பலர் பார்த்திருந்தார்கள். ஆனால் அப்போது நான் கடுமையாக மது பழக்கத்துக்கு அடிமையாகியிருந்தேன்" என்றார்.


Click it and Unblock the Notifications











