அமீர் கான் திருமணத்துக்கு புதிய சிக்கல்.. இஸ்லாமிய விதிகளுக்கு எதிரானது என சர்ச்சை.. விபரம் இதோ
மும்பை: பாலிவுட்டின் முன்னணி நடிகரான அமீர் கான், தனது நீண்ட நாள் காதலியான கௌரி ஸ்பிராட்டை கடந்த ஜூலை 5-ம் தேதி மிகவும் எளிமையான முறையில் குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்கள் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டார். இரண்டு விவாகரத்துகளுக்குப் பிறகு நடைபெற்ற அவரது மூன்றாவது திருமணம் ரசிகர்கள் மத்தியில் பேசுபொருளாக மாறிய நிலையில், தற்போது அந்த திருமணத்தைச் சுற்றி புதிய சர்ச்சை வெடித்துள்ளது.
திருமணம் நடைபெற்ற நாள் முதல் சமூக வலைதளங்களில் வாழ்த்துகள் குவிந்தாலும், மறுபுறம் ஒரு இந்து பெண்ணை அமீர் கான் திருமணம் செய்திருப்பதை விமர்சித்து சில அரசியல் மற்றும் மத அமைப்புகள் தொடர்ந்து கருத்து தெரிவித்து வந்தன. (ஆனால் ஜௌரி ஸ்பிராட் அடிப்படையில் இந்து மதத்தைச் சார்ந்தவர் அல்ல. அவர் ஒரு தமிழ்நாட்டு அம்மாவுக்கும் அயர்லாந்து அப்பாவுக்கும் பிறந்தவர்) சிலர் இதை 'லவ் ஜிகாத்' விவகாரத்துடன் இணைத்து விமர்சித்ததும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், அமீர் கானுக்கு எதிராக ஃபத்வா பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இணையத்தில் பகிரப்படும் தகவலின்படி, 'முஸ்லிம் பெர்சனல் தருல் இஃப்தா' அமைப்பின் ஷாஹி தலைமை முஃப்தி மௌலானா இப்ராகிம் ஹுசைன், இந்த திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஃபத்வா பிறப்பித்துள்ளார்.

இஸ்லாமிய விதிகளுக்கு எதிரானது?: அவரது விளக்கத்தில், இஸ்லாமிய ஷரியத் சட்டத்தின்படி முஸ்லிம் அல்லாத பெண் ஒருவர் இஸ்லாமிய மதத்திற்கு மாறாமல் முஸ்லிம் ஆணை திருமணம் செய்வது அனுமதிக்கப்படாது என்றும், அந்த அடிப்படையில் அமீர் கானின் திருமணம் ஷரியத் விதிகளுக்கு முரணானது என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும் சமூக வலைதளங்களில் வைரலாகும் வீடியோ ஒன்றில், இந்த திருமணத்தை 'ஹராம்' என்றும் அவர் குறிப்பிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் இவர்களின் திருமணம் சிறப்பு திருமணச் சட்டத்தின் படி, பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது கவனத்திற்குரியது.
முதல் திருமணம்: இந்த விவகாரம் சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை கிளப்பியுள்ள நிலையில், இதுவரை அமீர் கானோ அல்லது அவரது மனைவி கௌரி ஸ்பிராட்டோ இந்த சர்ச்சை குறித்தும், ஃபத்வா குறித்தும் எந்தவித அதிகாரப்பூர்வ விளக்கத்தையும் வெளியிடவில்லை. இதற்கிடையில், அமீர் கானின் திருமண வாழ்க்கை மீண்டும் பேசுபொருளாகியுள்ளது. 1986-ம் ஆண்டு ரீனா தத்தாவை திருமணம் செய்த அமீர் கான், 16 ஆண்டுகள் இணைந்து வாழ்ந்த பிறகு 2002-ல் விவாகரத்து பெற்றார். இந்த தம்பதிக்கு ஜுனைத் கான் மற்றும் ஈரா கான் என இரு குழந்தைகள் உள்ளனர்.
மூன்றாவது திருமணத்தால் சர்ச்சை: அதன்பிறகு 2005-ம் ஆண்டு இயக்குநரும் தயாரிப்பாளருமான கிரண் ராவை திருமணம் செய்தார். இந்த தம்பதிக்கு ஆசாத் ராவ் கான் என்ற மகன் உள்ளார். பின்னர் 2021-ம் ஆண்டு இருவரும் பரஸ்பர சம்மதத்துடன் பிரிவை அறிவித்தனர். விவாகரத்துக்குப் பிறகும் முன்னாள் மனைவிகள் மற்றும் குழந்தைகளுடன் அமீர் கான் நல்லுறவை பேணி வருவது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், மூன்றாவது திருமணத்திற்குப் பிறகு எழுந்துள்ள இந்த புதிய சர்ச்சை பாலிவுட்டில் மட்டுமல்லாமல் நாடு முழுவதும் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த விவகாரத்தில் அமீர் கான் தரப்பில் இருந்து விளக்கம் வெளியாகுமா என்ற எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.


Click it and Unblock the Notifications