தமிழில் ரீமேக்காகும் தெலுங்கு சூப்பர் ஹிட் 'ஆர்எக்ஸ் 100'... ஹீரோ யார் தெரியுமா?
தெலுங்கு பட ரீமேக்கில் நடிக்கிறார் நடிகர் ஆதி.
சென்னை: தெலுங்கில் பெரும் வெற்றி பெற்ற ஆர்.எக்ஸ்.100 படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிக்க நடிகர் ஆதி ஒப்பந்தமாகியுள்ளார்.
மிருகம் படத்தின் மூலம் அறிமுகமாகிய நடிகர் ஆதி, தொடர்ந்து ஈரம், அரவான், மரகத நாணயம் உள்ளிட்ட படங்களில் நடித்தார். இதையடுத்து தெலுங்கு பக்கம் கவனத்தை திருப்பிய ஆதி, அங்கு தொடர் வெற்றிகள் மூலமாக ஒரு முக்கிய அந்தஸ்தை அடைந்து இருக்கிறார்.

சமீபத்தில் தெலுங்கில் வெளி வந்து வெற்றி பெற்ற "ஆர் எக்ஸ் 100" படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிக்க ஆதி ஒப்பந்தமாகியுள்ளார். இளைஞர்களை பெருமளவில் கவர்ந்த இந்த படம் தெலுங்கு திரை உலகில் பல்வேறு சாதனைகளை முறியடித்து இருக்கிறது என்பதுக் குறிப்பிடத்தக்கது.
இந்த படத்தின் தமிழாக்கம் உரிமையை பலத்த போட்டிகிடையே பிரபல திரைப்பட விநியோக நிறுவனமும், அரசியலில் இதெல்லாம் சாதாரணமப்பா, அதர்வா ஹன்சிகா இணையாக நடிக்கும் 100 ஆகிய படங்களை தயாரிக்கும் நிறுவனமுமான ஆரா சினிமாஸ் நிறுவனர் மகேஷ் கோவிந்தராஜ் பெற்று உள்ளார்.

" விநியோக துறையில் ஒரு நம்பகத்தன்மையான நிறுவனம் என்று பெயர் பெற்றாலும், திரைப்பட தயாரிப்பில் எனக்கு மிகுந்த ஈடுபாடு உண்டு. ராஜ தந்திரம் வீரா நடிக்கும் "அரசியலில் இதெல்லாம் சாதாரணமப்பா, அதர்வா - ஹன்சிகா நடிப்பில் சாம் அன்டன் இயக்கும் 100 ஆகிய இரு படங்களும் படப்பிடிப்பு முடிந்து வெளிவரும் தருவாயில் உள்ளது.
நடிகர் ஆதியுடன் எனக்கு நீண்ட நாட்களாக பழக்கம். நாங்கள் இருவரும் இணைந்து பணியாற்ற வேண்டும் என்கிற ஆசை எங்கள் இருவருக்கும் இருந்தது. ஆனால் அதற்கேற்ற கதை கிடைக்கவில்லை.இந்த நேரத்தில் தெலுங்கில் ஆர் எக்ஸ் 100 என்ற படம் வெளி வந்து பல சாதனைகளை முறியடித்து ஓடிக்கொண்டு இருந்தது.
ஆதி என்னை அழைத்து படம் பார்க்க சொன்னார்.எங்கள் இருவருக்கும் படம் மிகவும் பிடித்து இருந்தது. தமிழ் உரிமை வாங்க ஏகப்பட்ட போட்டி. தீவிர முயற்சியுடன் இந்தப் படத்தின் உரிமையை நான் பெற்றுக் கொண்டேன். இளைய சமுதாயத்தினருக்கு மிகவும் பிடிக்கும் கதை அம்சம் கொண்டு உள்ள படம் இது.
ரசிகர்களின் நாடி துடிப்பை அறிந்த ஒருவர் தான் இந்த படத்தை இயக்க வேண்டும். அதற்கான தேடல் நடை பெற்றுக் கொண்டு இருக்கிறது. இந்த படத்தின் கதாநாயகி பாத்திரம் மிகவும் சவாலானது. கதாநாயகி தேர்வு கூட நடைபெறவுள்ளது.இந்த மாத இறுதிக்குள் மற்ற தொழில் நுட்ப கலைஞர்கள், மற்ற நடிக நடிகையர் தேர்வு நடைபெறும். செப்டம்பர் மாதம் இறுதியில் படப்பிடிப்பு துவங்க உள்ளது.. அதிவிரைவில் உருவாகி ரசிகர்களின் உள்ளத்தில் சீறி பாயும் " ஆர் எக்ஸ் 100" என்று உற்சாகத்துடன் சொன்னார் ஆரா சினிமாஸ் மகேஷ் கோவிந்தராஜ்.


Click it and Unblock the Notifications











