'டியர்' கதையை கேட்டு அழுதுவிட்டேன்.. ஜிவி பிரகாஷ் சொன்ன சுவாரசியத் தகவல்!
சென்னை: ஜிவி பிரகாஷ், ஐஸ்வர்யா ராஜேஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள டியர் படம் வரும் 11ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் பேசிய ஜிவி பிரகாஷ் கதை கேட்டு அழுதுவிட்டேன் என்றார். இப்படத்தில் காளி வெங்கட், இளவரசு, ரோகிணி, தலைவாசல் விஜய், கீதா கைலாசம், அப்துல் லீ, ப்ளாக் ஷீப் நந்தினி என பலர் நடித்துள்ளனர்
இசையமைப்பாளர், நடிகர் என பன்முகம் கொண்ட ஜிவி பிரகாஷ் தொடர்ந்து நல்ல கதையம்சம் கொண்ட அதேசமயம் தயாரிப்பாளர்களுக்கு லாபம் தரக்கூடிய திரைப்படங்களில் நடித்து வருகிறார். அவர் நடிப்பில் இரண்டு வாரத்திற்கு முன் ரெபல் திரைப்படம் வெளியான நிலையில் ஏப்ரல் 4ந் தேதி கள்வன் திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது

ஜீவி பிரகாஷின் டியர்: கள்வன் திரைப்படத்தை தொடர்ந்து ஜிவி பிரகாஷ், ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த டியர் திரைப்படம் வெளியாக உள்ளது. இந்த படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. இதில் பேசிய ஜீவி பிரகாஷ், என்னடா வாரா வாரம் ஒரு படம் வருதுனு நினைக்காதீங்க. இது 4 வருடமாக உழைத்து உருவான படங்கள், தியேட்டர் ரிலீஸ், ஓடிடி ரிலீஸ் போன்ற சில காரணங்களால் அனைத்து படடும் ஒன்றன் பின் ஒன்றாக வெளியாகிறது. இதை நினைத்து வருத்தப்பட வேண்டாம். அண்மையில் வெளியான மூன்று படத்திலும் ஒரு விஷயம் இருக்கு நான் கதையை தேர்வு செய்து தான் நடிக்கிறேன்.
கதை கேட்டு அழுது விட்டேன்: டியர் திரைப்படம் ஒரு நல்ல படம். இந்த படத்தின் கதையை ஐஸு ஃபிளைட்டிட் என்னிடம் சொன்னார். ஐஸ் எனக்கு பிடித்தமான நடிகை அவங்க நடித்த காக்கா முட்டை படத்திற்கு நான் தான் இசை அமைத்தேன். கதை கேளுங்க என்றதும், இவர் படத்தில் நமக்கு என்ன ரோல் இருக்கும் எனத் தயங்கினேன், ஆனால் கதை கேட்டவுடன் அழுது விட்டேன். உடனே நான் நடிக்கிறேன் என்று சொல்லி விட்டேன்
கண்டிப்பா பிடிக்கும்: இந்த படம் நல்ல குடும்ப கதை, தம்பதிகளுக்கும் நடக்கும் சண்டை மனஸ்தாபம், கருத்து வேறுபாடு ஆகியவை படத்தில் அழகாக சொல்லப்பட்டுள்ளது. விவாகரத்து பெறுபவர்கள் குறித்து சமுதாயம் என்ன சொன்னாலும், ஒரு கணவன் மனைவிக்கு தான் உண்மை என்ன என்பது தெரியும். லைவ் சவுண்ட் டப்பிங் இல்லை என்பதால் அனைவரும் போட்டிப் போட்டுக்கொண்டு நடித்திருக்கிறார்கள். படம் கண்டிப்பாக உங்களுக்குப் பிடிக்கும். படத்தை தியேட்டரில் போய் பார்த்துவிட்டு படம் எப்படி இருக்கு என்று சொல்லுங்கள் என்றார்.

டிரைலர்: இதையடுத்து வெளியான டியர் டிலைலரில், ஜிவி பிரகாஷ் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் இருவருக்கும் பெற்றோர் பார்த்து திருமணம் செய்து வைக்கின்றனர். ஆனால் திருமணமான முதல் இரவில் தான் ஐஸ்வர்யா ராஜேஷ் குறட்டை விடும் பழக்கம் உடையவர் என்று தெரியவருகிறது. அந்த குறட்டையால் ஜிவி பிரகாஷுக்கும் ஐஸ்வர்யாவிற்கும் ஏற்படும் சிக்கல், கோபம், அதனால் ஏற்படும் சண்டை ஆகியவைகளை இருவரும் எப்படி சமாளித்தார்கள் என்பதுதான் இந்த படத்தின் காமெடியான கதை. நடிகர் மணிகண்டன் நடித்த குட் நைட் திரைப்படத்தில் ஹீரோ குறட்டை விடுவார். இந்த படத்தில் ஹீரோயின் குறட்டை விடுவது போல கதை அமைக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











