Dhanush; பார்க்க தான் சிம்பிள்.. ஆனால் பல கோடிக்கு அதிபதி.. தனுஷின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?
சென்னை: துள்ளுவதோ இளமை திரைப்படத்தில் மீசை முளைக்காத இளம் அரும்பாக தனது திரைப்பயணத்தை தொடங்கிய தனுஷ் ராஜா இன்று ஹாலிவுட், பாலிவுட் படங்களில் நடித்து இந்திய அளவில் புகழ்பெற்று சர்வதேச திரைப்படங்களில் நடித்து உலகத்தின் கவனத்தை ஈர்த்து உயர்ந்து நிற்கும் நடிகராக மாறி இருக்கிறார். இன்று நடிகர் தனுஷின் 42வது பிறந்த நாள் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நாளையில் அவருக்கு திரைப்பிரபலங்கள் ரசிகர்கள் என பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
துள்ளுவதோ இளமை திரைப்படத்தில் தனுஷ் ஹீரோவாக நடித்த போது, இதெல்லாம் ஒரு மூஞ்சினு வெச்சிகிட்டு ஹீரோவா நடிக்க வந்துடுச்சு' என கேவலமாக பேசப்பட்ட தனுஷ். அடுத்த 7, 8 ஆண்டுகளில் தேசிய விருது நாயகன் ஆனார். கஸ்தூரிராஜா கடைசியாக எடுத்த இரண்டு படங்கள் சரியாக தோல்வி அடைந்ததால், முழுக்க முழுக்க இளமை ததும்பும் ஒரு படத்தை எடுக்க திட்டமிட்டு துள்ளுவதோ இளமை படத்தை எடுத்தார். அந்த படத்தில் வேறொரு நடிகர் தான் நடிக்க இருந்தார். ஆனால், செல்வராகவன், கதை எழுதும் போதே, தனுசை மனதில் வைத்துத்தான் எழுதினார் என்பதால், அவரின் வற்புறுத்தலால் தான் தனுஷ் அந்த படத்தில் நடித்தார். ஆனால், செல்வராகவனின் கணிப்பு பொய்யாகவில்லை. விடலை பையனாக அந்த கதாபாத்திரத்தில் கனகச்சிதமாக நடித்து அப்ளாஸை அள்ளினார் தனுஷ்.

நடிகர் தனுஷ்: அதைத்தொடர்ந்து அடுத்த ஆண்டான 2003 ஆம் ஆண்டு தனுஷுக்கு மறக்க முடியாத ஆண்டாக அமைந்தது. தனுஷின் நடிப்பாற்றலை முழுவதுமாக காட்டியது காதல் கொண்டேன் படம். அந்த படத்தில் கிளைமாக்ஸ் காட்சியில் 'திவ்யா... திவ்யா' என வெறித்தனமாக ஆடி யாருடா இவன் என அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தார். அதன் பின் திருடா திருடி, புதுக்கோட்டையில் இருந்து சரவணன், சுள்ளான், தேவதையை கண்டேன் என அடுத்தடுத்து காதல் படத்தில் நடித்து வந்த தனுஷ், மீண்டும் அண்ணன் இயக்கத்தில் புதுப்பேட்டை படத்தில் ரௌடியாக நடித்திருந்தார். இந்த திரைப்படம் தனுஷின் திரைப்பயணத்தில் இன்று வரை மறக்க முடியாத படமாகவே உள்ளது.
மாஸ் ஹீரோ: சினிமாவில் நடிக்க வந்த சில ஆண்டுகளிலேயே ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ரஜினியின் மருமகன் என்ற அடையாளத்தோடு சினிமாவில் பயணித்தாலும், அந்த அகந்தையை தலைக்கு ஏற்றிக்கொள்ளாமல், தனக்கு ஏற்ற கதைகளாக தேர்ந்தெடுத்து நடிக்க ஆரம்பித்தார். இவரின் திரைவாழ்க்கையும், நடிப்பையும் வியந்து பார்க்க வைத்த பெருமை வெற்றிமாறனையே சேரும். இவர் இயக்கத்தில் தனுஷ் நடித்த பொல்லாதவன், ஆடுகளம், அசுரன் இவருக்கு பல விருதுகளை பெற்றுத்தந்ததோடு இவரை ஒரு மாஸ் ஹீரோவாக அடையாளப்படுத்தியது.
சொத்து மதிப்பு: நடிப்பு, தயாரிப்பு, இயக்கம், பாடலாசிரியர், பாடகர் என பல திறமைகளை கொண்ட தனுஷ் நடிப்பில் கடந்த மாதம் வெளியான குபேரா படம் தமிழில் கலவையான விமர்சனத்தை பெற்றாலும், தெலுங்கில் நல்ல வசூலை அள்ளியது. நடிகர் தனுஷ் இன்று தனது 42வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு ரசிகர்கள், திரைப்பிரபலங்கள், நண்பர்கள் என பலரும் வாழ்த்துக்கைள தெரிவித்து வருகின்றனர். இந்த நேரத்தில் அவரின் சொத்து எவ்வளவு என்பதை பார்க்கலாம். தனுஷின் சொத்து மதிப்பு ₹230 கோடி என கூறப்படுகிறது. தி நகரில் வாடகை வீட்டில் வசித்து வந்த தனுஷ் தற்போது போயஸ் கார்டனில் பிரம்மாண்டமான பங்களா ஒன்றை கட்டி குடியேறி உள்ளார். ரூ.150 கோடி மதிப்புள்ள போயஸ் கார்டன் வீட்டு 19,000 சதுர அடியில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ளது. ரஜினிகாந்தின் இல்லத்திற்கு அருகில் இந்த வீடு அமைந்துள்ளது.
கார் பிரியரான தனுஷ், ரோல்ஸ் ராய்ஸ், பென்ட்லி, மஸ்டாங் மற்றும் ஸ்டைல் ஆகிய உயர் ரக கார்களை வைத்து இருக்கிறார். தனுஷ் ஒரு படத்திற்கு ரூ 20 கோடி முதல் 35 கோடி வரை சம்பளம் வாங்குகிறார். சொந்தமாக வுண்டர்பார் பிலிம்ஸ் என்கிற தயாரிப்பு நிறுவனத்தை வைத்து இருக்கும் இவர் அதன் மூலமாக பல வெற்றிப்படத்தை கொடுத்து வருகிறார். பல்வேறு நிறுவனங்களுக்கான பிராண்ட் தூதராக உள்ளார். பின்னணிப் பாடகராக அவர் ராயல்டிகளைப் பெறுகிறார்.


Click it and Unblock the Notifications











