லப்பர் பந்தை தங்கப் பந்தாக மாற்றிக் கொடுத்துடு ஐய்யப்பா.. சபரிமலைக்குச் சென்ற ஹரீஷ் கல்யாண்
சபரிமலை: தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் கதாநாயகர்கள் வரிசையில் அதிகம் கவனிக்கப்படும் இடத்தில் நடிகர் ஹரீஷ் கல்யாண் உள்ளார். தனது சினிமா வாழ்க்கையை, பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் கிடைத்த வெளிச்சத்தை வைத்து மெருகேற்றிக் கொண்டவர், தொடர்ந்து ஹிட் படங்களைக் கொடுத்து வருகின்றார். இன்றை இளைஞர்கள் மத்தியில் ஹரீஷ் கல்யாண் என்றாலே, ஒரு ஃபீல் குட் மூவியைக் கொடுப்பார் என்ற நம்பிக்கையை ஏற்படுத்திவிட்டார். இவரது நடிப்பில் கடைசியாக வெளியான பார்க்கிங் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. மேலும் படத்தில் இவரது நடிப்பு, நடிப்பில் கைதேர்ந்தவர் என பாராட்டப்படும், எம்.எஸ். பாஸ்கரின் நடிப்புக்கு போட்டி போடும் அளவிற்கு சிறப்பாக இருந்ததாக பலரும் பாராட்டினர்.
இந்நிலையில் இவரது நடிப்பில் அடுத்து வெளியாகவுள்ள படம், லப்பர் பந்து. இந்தப் படம் வரும் வெள்ளிக்கிழமை அதாவது செப்டம்பர் 20ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது. இந்நிலையில் லப்பர் பந்து படம் வெற்றி பெறவேண்டும் என, சபரிமலை ஐய்யப்பனுக்கு மாலை அணிந்து சென்று தரிசனம் செய்துள்ளார். இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண், சஞ்சனா, அட்டகத்தி தினேஷ் என பலர் நடிக்கும் திரைப்படம். இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஷேன் ரோல்டன் இசையமைத்துள்ளார்.

லப்பர் பந்து: பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள லப்பர் பந்து திரைப்படம் கிரிக்கெட் விளையாட்டை மையமாக கொண்ட கதை. குறிப்பாக கிராமங்களில் விளையாடப்படும் லப்பர் பந்து கிரிக்கெட்டினை மையமாகக் கொண்ட கதை. இப்படத்தின் மூலம் இயக்குநராக தமிழரசன் பச்சமுத்து அறிமுகமாகின்றார். லப்பர் பந்து திரைப்படத்தில் அட்டகத்தி தினேஷ், ஹரிஷ் கல்யாண் ஆகியோர் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். மேலும் இப்படத்தில் சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி, பால சரவணன், காளி வெங்கட், ஸ்வாசிகா விஜய் உள்ளிட்ட பலர் நடித்து உள்ளனர். படத்தின் ட்ரைலர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.
பாராட்டு: குறிப்பாக படத்தின் கதைக்களம் கிராமப் புறங்களில் நடைபெறும் கதைக்களம் என்பதால், கிராமத்தில் கிரிக்கெட் விளையாடும் இளைஞர்களுக்கு இந்தப் படம் மிகவும் பிடிக்கும் என கூறப்படுகின்றது. படத்தைப் பார்த்த இந்திய கிரிக்கெட் வீரர் வருண் சக்ரவர்த்தி படத்தை மனதாரா பாராட்டினார். குறிப்பாக, “ லப்பர் பந்து படம் பார்த்தேன். இது தமிழ் சினிமாவில் முக்கியமான படமாக இருக்கும் என நம்புகின்றேன். கிரிக்கெட்டை மையப்படுத்தி இந்தப் படத்தை அற்புதமாக எடுத்துள்ளனர். ஊரில் விளையாடும் கிரிக்கெட்டை மிகவும் சிறப்பாக படம் பிடித்துள்ளார்கள். நானும் ரப்பர் பந்து, டென்னிஸ் பந்து ஆகியவற்றில் கிரிக்கெட் விளையாடித்தான் இப்போது கிரிக்கெட் வீரராக உருவாகியுள்ளேன். இதனால், படம் பார்க்க பார்க்க பல காட்சிகளில் என்னால் எல்லாவற்றையும் தொடர்புபடுத்திக்கொள்ள முடிந்தது. இந்த படம் வெற்றி அடைய படக்குழுவினருக்கு வாழ்த்துகள். தமிழ்ப் படங்களில் இந்தப்படம் நல்ல படமாக இருக்கும்” என தெரிவித்திருந்தார்.
சபரி மலை: ஏற்கனவே படத்தின் புரோமோசன்களில் கலந்து கொண்டபோது, சபரிமலைக்கு மாலை அணிந்த நிலையில் பேட்டி அளித்து வந்தார். இந்நிலையில், இன்று அதாவது செப்டம்பர் 18ஆம் தேதி, தனது எக்ஸ் பக்கத்தில் சபரிமலை ஐய்யப்பனை தரிசனம் செய்யச் சென்றபோது எடுத்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். அதில் ஒரு புகைப்படத்தில், தலையில் இருமுடியுடன் ஐய்யப்பன் சன்னிதானத்தை பார்த்து ஹரிஷ் கல்யாண் நின்றுகொண்டு உள்ளார். இந்தப் புகைப்படம் தற்போது இணையத்தில் ட்ரெண்டாகி வருகின்றது.


Click it and Unblock the Notifications











