சூப்பர்ஹிட் இயக்குநரோட இணையும் ஜெயம் ரவி... சூப்பர் காம்பினேஷனா இருக்கே!
சென்னை : நடிகர் ஜெயம் ரவி தற்போது மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் படத்தில் நடித்து முடித்துள்ளார்.
இதையடுத்து சில படங்களும் இவரது கைவசம் உள்ளது. படங்களின் சூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் பிரபல இயக்குநரோடு ஜெயம் ரவி இணையும் புதிய படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

நடிகர் ஜெயம் ரவி
நடிகர் ஜெயம் ரவி அடுத்தடுத்த படங்களில் பிசியாக நடித்து வருகிறார். இவரது நடிப்பில் சமீபத்தில் நேரடியாக ஓடிடியில் வெளியான பூமி படம் இவருக்கு சிறப்பான விமர்சனங்களை பெற்றுத் தந்துள்ளது. இந்நிலையில் அடுத்ததாக மணிரத்னத்தின் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் பார்ட் 1ல் இளவரசனாக நடித்துள்ளார்.

அகிலன் படத்தில் ஜெயம் ரவி
இதனிடையே பிரியா பவானி சங்கர் ஜோடியாக அகிலன் படத்தில் நடித்து வருகிறார். இதன் டைட்டில் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றது. இந்தப் படத்தை பூலோகம் இயக்குநர் கல்யாண் இயக்கி வருகிறார். ஜெயம் ரவியின் 28வது படமாக இந்தப் படம் உருவாகி வருகிறது.

ராஜேஷ் இயக்கத்தில் ஜெயம் ரவி
இதனிடையே சிவா மனசுல சக்தி உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குநர் எம் ராஜேஷ் இயக்கத்தில் இணைந்துள்ளார் ஜெயம் ரவி. இது இவருடைய 30வது படமாகும். காமெடி மற்றும் காதல் இரண்டுமே ஜெயம் ரவிக்கு கைவந்த கலை. இந்நிலையில் இந்த இரண்டிற்கு முக்கியத்துவம் கொடுத்து படங்களை இயக்கிவரும் ராஜேஷுடன் இவர் இணைந்துள்ளது எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு
இந்தப் படம் குடும்ப சென்டிமெண்டை மையமாக கொண்டு உருவாகவுள்ளதாக கூறப்படுகிறது. கடந்த மாதத்திலேயே இதுகுறித்த தகவல்கள் வெளியான நிலையில் இன்றைய தினம் படம் குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஸ்கிரீன் சீன் நிறுவனம் இந்தப் படத்தை தயாரிக்கவுள்ளது.

ஹாரீஸ் ஜெயராஜ் இசை
இந்த காம்பினேஷனே சிறப்பாக பார்க்கப்படும் நிலையில், படத்தில் கூடுதலாக தற்போது பிரபல இசையமைப்பாளர் ஹாரீஸ் ஜெயராஜ் இணைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவர் முன்னதாக ராஜேஷின் ஒரு கல் ஒரு கண்ணாடி படத்திற்கு இசையமைத்துள்ளார். மேலும் ஜெயம் ரவிக்கு 4வது முறையாக அவர் இசையமைக்கிறார்.

ஜெயம் ரவி ஆர்வம்
காதல் பாடல்களை சிறப்பான முறையில் தந்துவரும் ஹாரீஸ் ஜெயராஜ், இந்தப் படத்தில் இணைந்துள்ளது எதிர்பார்ப்பை மேலும் அதிகரிக்க செய்துள்ளது. இதனிடையே, இந்த கலக்கல் டீமுடன் இணைந்து பணியாற்ற தான் காத்திருப்பதாக நடிகர் ஜெயம் ரவியும் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். விரைவில் படத்தின் சூட்டிங் துவங்கவுள்ளது.


Click it and Unblock the Notifications











