Actor Vijay: மம்முட்டிக்காக ஆப்ரகாம் ஆஸ்லர் படத்தை பார்க்க விரும்பிய விஜய்.. ஜெயராம் பகிர்ந்த தகவல்!
சென்னை: நடிகர் ஜெயராம் அடுத்தடுத்து தமிழ், தெலுங்கு, மலையாள படங்களில் கமிட்டாகி பிசியாக நடித்து வருகிறார். கடந்த ஆண்டில் தமிழில் அவர் நடித்திருந்த பொன்னியின் செல்வன் 2 படம் வெளியான நிலையில் ஜெயராமின் கேரக்டர் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. கார்த்தியுடன் அவரது காம்பினேஷன் காட்சிகள் வரவேற்பை பெற்றன. சமீபத்தில் நானியுடன் இணைந்து அவர் நடித்திருந்த ஹாய் நானா படமும் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ள நிலையில், அடுத்ததாக தற்போது விஜய் -வெங்கட் பிரபு காம்பினேஷனில் உருவாகிவரும் GOAT படத்தில் முக்கியமான கேரக்டரில் நடித்து வருகிறார்.
ஜெயிலர் படத்தில் சிவராஜ்குமாரின் கேரக்டரை போல தன்னுடைய கேரக்டரும் இந்தப் படத்தில் மாஸ் காட்டும் என்று அவர் முன்னதாக தன்னுடைய பேட்டியொன்றில் தெரிவித்திருந்தார். இதனால் இந்த கேரக்டருக்கான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது. ஜெயராமின் மகன் காளிதாஸ் ஜெயராமும் நடிகராக விக்ரம் உள்ளிட்ட பல படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் அவருக்கு திருமணம் நடந்த நிலையில், அடுத்ததாக ஜெயராமின் மகள் திருமணமும் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் விஜய்யுடன் நடித்துவரும் GOAT படம் குறித்தும் விஜய் குறித்தும் ஜெயராம் சுவாரஸ்யங்களை பகிர்ந்துள்ளார்.

நடிகர் ஜெயராம்: நடிகர் ஜெயராம் தமிழ், தெலுங்கு, மலையாளம் என அடுத்தடுத்த மொழிப் படங்களில் முன்னணி ஹீரோக்களுடன் இணைந்து நடித்து வருகிறார். மலையாளத்தில் பல ஆண்டுகள் ஹீரோவாக அடுத்தடுத்த வெற்றிப் படங்களை கொடுத்த ஜெயராம், தமிழிலும் நடித்து வந்தார். கடந்த ஆண்டில் தமிழில் இவரது நடிப்பில் பொன்னியின் செல்வன் 2, ஹாய் நானா என அடுத்தடுத்த படங்கள் தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகி, பான் இந்தியா படமாக வெளியானது. இந்தப் படங்கள் ரசிகர்களை அதிகமாக கவர்ந்து வெற்றிப்படங்களாகியுள்ளன.
ஆப்ரகாம் ஆஸ்லர் படம்: இந்நிலையில் தற்போது ஜெயராம் நடிப்பில் ஆப்ரகாம் ஆஸ்லர் படம் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது.முன்னதாக டிசம்பர் 25ம் தேதி இந்தப் படம் வெளியாகவிருந்த நிலையில், தவிர்க்க முடியாத காரணங்களால் பொங்கலையொட்டி வெளியாகியுள்ளது. இந்தப் படத்தில் நடிகர் மம்முட்டியும் அழுத்தமான கேமியோ ரோலில் நடித்துள்ளார். படம் கலவையான விமர்சனங்களை பெற்றபோதிலும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. மிதுன் மானுவல் தாமஸ் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். க்ரைம் திரில்லராக இந்தப் படம் வெளியாகியுள்ளது.
ஜெயராம் -மம்முட்டி கூட்டணி: படத்தில் உதவி கமிஷனராக டைட்டில் ரோலில் ஜெயராம் நடித்துள்ளார். இந்தப் படம் ரசிகர்கள் எதிர்பார்ப்பை அதிகமாக பூர்த்தி செய்யவில்லை என்ற விமர்சனங்கள் எழுந்துள்ளன. இருப்பினும் படத்தில் மம்முட்டியும் அவருடன் இணைந்துள்ளது படத்திற்கு மிகப்பெரிய பலத்தை கொடுத்துள்ளது. இதனிடையே இந்தப் படம் குறித்து விஜய், The greatest of All time பட சூட்டிங்கின்போது தன்னிடம் உற்சாகமாக பேசியது குறித்து தனது பேட்டியொன்றில் பகிர்ந்துள்ளார். விஜய்யுடன் ஜெயராம் முக்கியமான கேரக்டரில் GOAT படத்தில் நடித்துவரும் நிலையில், சூட்டிங் ஸ்பாட்டில் விஜய் ஆப்ரகாம் ஆஸ்லர் படம் குறித்து கேட்டறிந்துள்ளார்.

விஜய் ஆச்சர்யம்: ஆப்ரகாம் ஆஸ்லர் படத்தில் மம்முட்டியும் நடித்துள்ளது குறித்து தன்னிடம் விஜய் கேட்டதாகவும், தான் ஆமாம் என்று கூறியநிலையில், அதுகுறித்து அவர் வியப்படைந்ததாகவும் ஜெயராம் கூறியுள்ளார். இதையடுத்து படத்தை பார்க்க விஜய் விரும்பியதாகவும், தொடர்ந்து படத்தை அவர் பார்க்க தான் ஏற்பாடு செய்ததாகவும் ஜெயராம் குறிப்பிட்டுள்ளார். விஜய் தனக்கு விருப்பமான காம்பினேஷனில் வெளியாகும் படங்களை உடனடியாக பார்க்க விரும்புவார் என்றும் அவர் பாராட்டியுள்ளார்.


Click it and Unblock the Notifications











