கடற்கரைல இன்னும் கூட்டத்தைப் பார்க்க முடியுதே... வீட்டுலயே இருங்க..! நடிகர் கார்த்தி அட்வைஸ்!
சென்னை: கொரோனாவுக்காக தடுப்பு நடவடிக்கைகள் எடுத்து வரும் நிலையில், கடற்கரையில் மக்கள் கூட்டத்தை இன்னும் பார்க்க முடிகிறது என்று நடிகர் கார்த்தி தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் வேகமாகப் பரவி வருகிறது. சீனாவை அடுத்து இத்தாலி, ஈரான், உள்ளிட்ட நாடுகளில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது, இந்த வைரஸ்.
இந்தியாவிலும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதைத் தடுக்க தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

தியேட்டர்கள்
அதன் ஒரு கட்டமாக மக்கள் அதிகமாகக் கூடும் மால்கள், தியேட்டர்கள் உள்ளிட்டவற்றை வரும் 31 ஆம் தேதி மூட உத்தரவிடப்பட்டுள்ளன. இதையடுத்து தியேட்டர்கள் மூடப்பட்டன. சினிமா படப்பிடிப்புகள் இன்று முதல் ரத்து செய்யப்பட்டுள்ளன. டிவி சிரீயல்களின் ஷூட்டிங்கும் பாதிக்கப்பட்டுள்ளன. மொத்த சினிமா நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

விழிப்புணர்வு வீடியோ
இந்நிலையில், தங்களது பிரமாண்ட திருமண ஏற்பாடுகளையும் நடிகர், நடிகைகள் தள்ளி
வைத்துள்ளனர். இதற்கிடையே முன்னணி நடிகர், நடிகைகள் கொரோனா விழிப்புணர்வு வீடியோக்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு வருகின்றனர். பொதுமக்கள், அரசும் மருத்துவர்களும் கூறியுள்ள வழிமுறைகளை சரியாக பின்பற்றுமாறு கேட்டுக்கொண்டுள்ளனர். அரசு எடுக்கும் நடவடிக்கைகளையும் பாராட்டி வருகின்றனர்.

நெஞ்சு நெகிழ் நன்றி
நடிகர் விவேக் தனது ட்விட்டரில் பதிவில் "8 கோடி மக்கள். 3 அண்டை மாநில எல்லைகள். தினம் விமான வழியில் ஆயிரக்கணக்கான பயணிகள். சவால்களை எதிர்கொண்டு பணிபுரியும் அமைச்சர், சுகாதாரத் துறை, தங்கள் உயிரைப் பணயம் வைத்து சேவை செய்யும் மருத்துவர்கள், செவிலியருக்கும் நெஞ்சு நெகிழ் நன்றி சொல்வோமா?' என கேட்டுள்ளார். இதையடுத்து ஏராளமான ரசிகர்கள் பாரட்டியுள்ளனர்.

கடற்கரையில்
நடிகர் கார்த்தி வெளியிட்டுள்ள பதிவில், அரசு, மருத்துவமனைகள், முக்கியமாக மருத்துவர்கள், செவிலியர்கள் ஆகியோர் தீவிர முயற்சி செய்து கொரோனாவில் இருந்து நம்மை பாதுகாத்து வருகின்றனர். மக்கள், கடற்கரையில் கூட்டமாக இருப்பதை இப்போதும் பார்க்க முடிகிறது. ஒன்றிணைந்துதான் கொரோனாவை சமாளிக்க வேண்டும். வீட்டிலேயே, சுத்தமாக இருங்கள்' எனத் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











