பாங்காக்ல இருந்து பறந்து வந்தும் இப்படியாயிடுச்சே... 'தம்பி' கார்த்தி அப்செட்!
சென்னை: பாங்காக்கில் இருந்து பறந்து வந்தும் தம்பி படத்தின் புரமோஷனல் நிகழ்ச்சியில் நடிகர் கார்த்தியால் கலந்துகொள்ள முடியவில்லை.
கார்த்தி- ஜோதிகா அக்கா-தம்பியாக முதல் முறையாக இணைந்து நடித்திருக்கும் படம், தம்பி. பாபநாசம் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான மலையாள இயக்குநர் ஜீத்து ஜோசப் டைரக்டு செய்து இருக்கிறார்.

சவுகார் ஜானகி, சத்யராஜ், நிகிலா விமல் உட்பட பலர் நடித்துள்ளனர். ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்துள்ளார். கோவிந்த் வசந்தா இசை அமைத்துள்ளார். வயாகாம் 18 மற்றும் பேரலல் மைண்ட்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படம் வரும் 20 ஆம் தேதி வெளியாகிறது.
இந்தப் படத்துக்கான புரமோஷன் நிகழ்ச்சிகள் தொடங்கியுள்ளன. தெலுங்கு, மலையாளத்திலும் இந்தப் படம் ரிலீஸ் ஆகிறது.
இதற்காக கேரளாவில் நேற்று பத்திரிகையாளர் சந்திப்பு நடந்தது. பாங்காக்கில், மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் படப்பிடிப்பில் இருந்த கார்த்தி, இதில் கலந்து கொள்ள, வருவதாக இருந்தது.
அந்த ஷூட்டிங்கிற்கு பிரேக் கொடுத்துவிட்டு நேராக பிளைட் பிடித்த கார்த்தி, சென்னை வந்து சேர்ந்தார். இங்கிருந்து கொச்சி செல்ல வேண்டும்.
இந்நிலையில் கொச்சி விமான நிலையத்தில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை பராமரிப்பு பணிகள் நடப்பதால் அந்த நேரத்தில் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
அதற்குள் செல்ல வேண்டும் என்பதால் கார்த்தி, காலையிலேயே ஏர்போர்ட் வந்தார். அவர் செல்ல வேண்டிய விமானம் தாமதமானதால், செல்ல முடியவில்லை.
இதனால் பத்திரிகையாளர் சந்திப்பில் அவர் கலந்துகொள்ளவில்லை. கார்த்தி இல்லாமல், நிகிலா விமல், டைரக்டர் உள்ளிட்டவர்கள் இந்தச் சந்திப்பில் கலந்துகொண்டனர். பின்னர் நேற்று இரவு அங்கு சென்ற கார்த்தி, சில சேனல்களுக்கு பேட்டி கொடுத்துள்ளார்.


Click it and Unblock the Notifications











