Star Box Office: பாக்ஸ் ஆபிஸில் சாதனை படைத்த ஸ்டார்..இதுவரை வசூல் எவ்வளவு தெரியுமா?
சென்னை: பி.வி.எஸ்.என்.பிரசாத் மற்றும் ஸ்ரீநிதி சாகர் இணைந்து தயாரித்துள்ள திரைப்படம் ஸ்டார். இந்தப் படத்தை பியார் பிரேமா காதல் படத்தை இயக்கிய இளன் இயக்கியுள்ளார். கவினின் அதிரடியான நடிப்பில் வெள்ளிக்கிழமை தியேட்டரில் வெளியான இத்திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில், இப்படத்தின் நான்காம் நாள் வசூல் குறித்து இப்போது பார்க்கலாம்.
கோலிவுட் சினிமா டல் அடித்த நிலையில், கடந்த வாரம் வெளியான சுந்தர் சியின் அரண்மனை 4 திரைப்படம் இந்த வாரமும் தியேட்டர்களில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. சுந்தர் சி, தமன்னா, ராஷி கன்னா, யோகி பாபு, கோவை சரளா, விடிவி கணேஷ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவான அரண்மனை 4 திரைப்படத்துக்கு மக்கள் மத்தியில் நல்ல ஆதரவு கிடைத்தது. இந்த படம் 50 கோடி வசூலை தாண்டி உள்ளது.

நடிகர் கவின்: அரண்மனை 4 படத்தைத் தொடர்ந்து கவின் நடிப்பில் இந்த வாரம் வெள்ளிக்கிழமை வெளியானது ஸ்டார் திரைப்படம். ஸ்டார் ஆக வேண்டும் என்று கனவுகளுடன் வளரும் ஒருவன் தான் கவின். தனது லட்சியத்தில் வெற்றி பெற முயன்று, இறுதியில் துவண்டு, மிரண்டு, தோய்ந்து போய் நிற்கிறான் படத்தின் ஹீரோ கவின். சாதாரண நடுத்தர வர்க்க குடும்பத்தை சேர்ந்த கலை (கவின்). சிறுவயதில் இருந்தே சினிமா கனவுகளுடன் வளரும் இவருக்கு வீட்டில் அப்பா, அக்கா பக்கபலமாக இருக்கிறார்கள்.
ஸ்டார் திரைப்படம்: அம்மாவிற்காக இன்ஜினியரிங் படிப்பில் சேர்த்து விட, தன் சினிமா கனவை துரத்தி பிடிக்க அவ்வப்போது பட ஆடிஷன்களில் கலந்து கொள்கிறார். எத்தனை தோல்வி வந்தாலும் அனைத்தையும் எதிர்கொண்டு அடுத்ததை நோக்கி ஓடும் அவனுக்கு எதிர்பாராத விபத்து ஏற்பட்டு முகத்தில் காயம் ஏற்படுகிறது. இறுதியில் கவின் சினிமா கனவு என்ன ஆனது... அதில் ஜெயித்தாரா இல்லையா என்பது தான் ஸ்டார் படத்தின் கதை.
குவியும் பாராட்டு: இதுவரை, நடிகர் கவினை ஒரு ஜாலியான இளைஞரின் கதாப்பாத்திரத்திலும், ரொமான்ஸ் செய்யும் கதாப்பாத்திரத்திலும் பார்த்த நமக்கு ஒரு வித்தியாசமான அனுபவத்தை கொடுத்து இருக்கிறார் கவின். கவினைத்தாண்டி, இந்த படத்தில் வரும் அனைத்து கதாப்பாத்திரங்களுக்கும் நிறைய வேலை கொடுத்திருக்கிறார் இயக்குநர் இளன். கவினின் முதிர்ச்சியான நடிப்பை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.
நான்காம் நாள் வசூல்: ஸ்டார் திரைப்படம் முதல் நாளில் 2.8 கோடி வசூல் செய்த நிலையில், சனிக்கிழமை 4 கோடி ரூபாய் வசூல் செய்தது. இதையடுத்து ஞாயிற்றுக்கிழமையான நேற்று 4 கோடியை வசூலித்துள்ளது. ஒட்டுமொத்தமாக ஸ்டார் திரைப்படம் 10.8 கோடி வசூலித்துள்ளது. பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை என்பதால், இத்திரைப்படம் கணிசமான வசூலை அள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











