Mahat Raghavendra: அடடே நம்ம மங்காத்தா மகத்தா இது?.. மெக்கானிக்கா மாறிட்டாரே.. வெர்ஷன் 2.0 ரெடி!
சென்னை: சிம்பு நடித்த வல்லவன் மற்றும் காளை உள்ளிட்ட படங்களில் நண்பராக நடித்து சினிமாவில் அறிமுகமானவர் தான் மகத் ராகவேந்திரா. வெங்கட் பிரபு இயக்கத்தில் அஜித் குமார் நடித்த மங்காத்தா படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் நன்கு பிரபலமானார். விஜய்யின் ஜில்லா படத்திலும் நடித்திருந்தார்.
சிம்புவின் நண்பரான மகத் ராகவேந்திரா அன்பானவன் அசராதவன் அடங்காதவன், வந்தா ராஜாவாதான் வருவேன், மாநாடு, மஹா என தொடர்ந்து பல சிம்பு படங்களில் நட்புக்காகவே நடித்திருந்தார். தமிழ், தெலுங்கு மொழிகளில் மகத் நடித்த படங்கள் பெரிதாக போகவில்லை.

இந்தியில் டபுள் எக்ஸல் எனும் படத்தில் ஹூமா குரேஷியுடன் இணைந்து நடித்திருந்தார். இந்நிலையில், தமிழ் சினிமாவில் தனது புதிய அத்தியாத்தை தொடங்கப் போவதாக அறிவித்துள்ள மகத் ராகவேந்திரா ஆளே அடையாளம் தெரியாத அளவுக்கு தனது தோற்றத்தை மாற்றி மகத் 2.0வாக மாறியுள்ளார்.
மகத்தின் அறிவிப்பு: "ஊடக நண்பர்களுக்கும் நலம் விரும்பிகளுக்கும், எனது கலைப்பயணத்தின் தொடக்கத்தில் இருந்தே, உங்கள் ஆதரவு எனக்கு என்றும் நிலையான பலத்தையும், ஊக்கத்தையும் அளித்து வருகிறது. ஒரு கலைஞராகவும், தனிநபராகவும் எனது வாழ்க்கைப் பயணத்தை வடிவமைத்ததில் உங்கள் ஆதரவுக்கு முக்கியப் பங்குண்டு.
கடந்த சில மாதங்களாக நான் ஒதுங்கி இருந்து, சுய பரிசோதனை செய்து, என்னை நானே செதுக்கிக் கொண்டேன். தற்போது, புதிய நோக்கத்துடன், மேம்பட்ட ஒரு நபராகவும் மீண்டும் களம் இறங்குவதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன்.
அந்தப் பயணத்தின் வெளிப்பாடே, நான் வெளியிட்டுள்ள 'Mechanic' என்ற புகைப்படத் தொகுப்பு. இது வெறும் உடலின் அழகியல் காட்சி மட்டுமல்ல. நான் கடினமாக உழைத்த மனம், உடல் மற்றும் ஆன்மா ஆகியவற்றுக்கு இடையேயான தொடர்பை இது வெளிப்படுத்துகிறது.
இனிவரும் காலங்களில், நல்ல கதைகளை ரசிகர்களுக்குக் கொண்டு சேர்க்கும் படைப்புகளில் நான் ஒரு அங்கமாக இருக்க வேண்டும் என்பதே எனது முதன்மை நோக்கம். அதன் மூலம் கிடைக்கும் வெற்றியை, மீண்டும் சமூகத்திற்குக் கொண்டு சேர்ப்பதில் எனது கவனம் இருக்கும்.
கடவுள் ஆசீர்வாதத்துடன், எனது கலைப்பயணத்தின் அடுத்த கட்டத்திற்குள் நுழைய நான் ஆவலுடன் காத்திருக்கிறேன். இந்த புதிய அத்தியாயத்திலும், நான் எப்போதும் மதிக்கும் உங்கள் ஆதரவைத் தேடுகிறேன்." என நடிகர் மகத் ராகவேந்திரா பதிவிட்டு தனது புதிய புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











