அன்னைக்கு தண்டவாளத்தில் தலை.. இன்னைக்கு மார்கெட்டில் அலப்பறை செய்த மன்சூர் அலி கான்!
சென்னை: திருச்சி லால்குடி தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட திரைப்பட நடிகர் மன்சூர் அலிகான் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். இதையடுத்து லால்குடியில் பிரச்சாரம் செய்து வரும் மன்சூர் அலிகான் மார்க்கெட்டிற்குள் புகுந்து வாக்காளர்களை ஈர்க்க வித்தியாசமான பிரச்சாரத்தை செய்தார்.
தமிழகத்தில் ஏப்ரல் 23ந் தேதி தேர்தல் நடைபெற உள்ளதால், அனைத்து கட்சிகளும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழக சட்டமன்ற தேர்தலில் நடிகர் மன்சூர் அலிகானின் இந்திய ஜனநாயக புலிகள் கட்சி திருச்சி மாவட்டத்தில் லால்குடி, திருச்சி கிழக்கு, திருவெறும்பூர், மணப்பாறை என 4 தொகுதிகளில் போட்டியிட உள்ளது. இதில் லால்குடி தொகுதியில் மன்சூர் அலிகான் வேட்புமனுவை தாக்கல் செய்து பிரச்சாரம் செய்து வருகிறார்.

நடிகர் மன்சூர் அலிகான்: ஏப்ரல் 1ந் தேதி அந்த பகுதியில் பிரச்சாரம் செய்த மன்சூர் அலிகான், திடீரென கல்லக்குடி என்ற பெயர்ப்பலகை முன்பு ரயில் தண்டவாளத்தில் தலையை வைத்து படுத்துக்கொண்டார். இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய மன்சூர் அலிகான், வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வை நினைவுகூரும் விதமாக மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவாக தண்டவாளத்தில் தலைவைத்து படுத்தேன் என்றார். மேலும், முதல்வர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி ஆகியோரை சந்தித்து தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கேட்டேன். இருவரும் தராததால் லால்குடியில் சுயேச்சையாக போட்டியிடுகிறேன் என்றார். திடீரென மன்சூலி அலிகான் தண்டவாளத்தில் தலைவைத்து படுத்தது குறித்து திருச்சி ரயில்வே பாதுகாப்புப் படையினர் நடிகர் மன்சூர் அலிகான் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
மார்க்கெட்டில் பிரச்சாரம்: இந்நிலையில், கல்லக்குடி சந்தையில் நேற்று பிரச்சாரம் செய்த மன்சூர் அலிகான், ஒவ்வொரு காய்கறி கடையாக சென்று அங்கு இருக்கும் தக்காளி, கேரட், பூசணிக்காய், வெள்ளரிகாய்களை பணம் கொடுத்து வாங்கி சாப்பிட்டவாறே, பொதுமக்களுக்குத் துண்டுப்பிரசுரங்களை விநியோகித்து வாக்குகளைச் சேகரித்தார். கீரை வியாபாரிடம் புளிச்சகீரையை வாங்கி அதே இடத்திலேயே பிச்சி பிச்சி சாப்பிட்ட மன்சூர் அலிகான், நீங்க எல்லாம் எனக்கு ஓட்டு போட்டு என்னை ஜெயிக்கவைத்துவிடுங்கள் என்றார். இவரின் இந்த வித்தியாசமான தேர்தல் பிரச்சாரம் மக்களிடம் கவனத்தை ஈர்த்துள்ளது.


Click it and Unblock the Notifications











