விஜய்க்கு ஆதரவாக இருப்போம்.. சினிமா துறையிலிருந்து வந்த இன்னொரு ஹீரோவின் சப்போர்ட்
சென்னை: தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கியிருக்கிறார் விஜய். இதன் காரணமாக அவர் இன்னும் ஒரே ஒரு படத்தில் மட்டும்தான் நடிக்கவிருக்கிறார். அந்தப் படத்தை ஹெச்.வினோத் இயக்கிவருகிறார். இதில் பூஜா ஹெக்டே ஹீரோயினாகவும், பாபி தியோல் வில்லனாகவும் நடித்துவருகிறார்கள். மேலும் நடிகர் நரேனும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்தச் சூழலில் விஜய் குறித்து அவர் பேசியிருக்கும் விஷயம் ட்ரெண்டாகியிருக்கிறது.
விஜய்யின் நடிப்பில் கடைசியாக GOAT திரைப்படம் வெளியானது. வெங்கட் பிரபு இயக்கியிருந்த அந்தப் படம் சுமாரான வரவேற்பையே பெற்றது. டீ ஏஜிங் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அந்தப் படத்தில் விஜய்யின் கதாபாத்திரத்தை வெங்கட் உருவாக்கியிருந்தாலும் பெரிதாக எந்த ரெஸ்பான்ஸும் கிடைக்கவில்லை. முக்கியமாக திரைக்கதையில் பெரிய ஓட்டை இருந்ததாகவும்; மேக்கிங்கில் எந்தவிதமான புதுமையும் இல்லை என்று ஓபனாகவே பேசினார்கள் ரசிகர்கள்.

தமிழக வெற்றிக் கழகம்: இதற்கிடையே அந்தப் படத்தில் நடித்துக்கொண்டிருந்தபோதே தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கினார் விஜய். மக்களவைத் தேர்தலில் அந்தக் கட்சி போட்டியிடவில்லை. அதேசமயம் 2026ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடவிருக்கிறது. அதற்கான முழு பணிகளில் அவர் இறங்கிவிட்டார். இதன் காரணமாக விஜய் இன்னும் ஒரே ஒரு படத்தில் மட்டுமே நடிக்கிறார். அந்தப் படத்தை ஹெச்.வினோத் இயக்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
தளபதி 69: இப்படத்தை கேவிஎன் நிறுவனம் தயாரிக்கிறது. பூஜா ஹெக்டே, பாபி தியோல், மமிதா பைஜு, நரேன் உள்ளிட்டோர் நடிக்கின்றன. சமீபத்தில்தான் இந்தப் படத்தின் பூஜை போடப்பட்டு ஷூட்டிங் மும்முரமாக நடந்துவருகிறது. விஜய்யோ படத்தின் ஷூட்டிங், அரசியல் மீட்டிங் என பிஸியாக இருந்துவருகிறார். அந்தவகையில் சமீபத்தில்கூட எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர் என்ற புத்தக வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு திமுகவை கடுமையாக விமர்சனம் செய்தார்.
அனல் பறந்த அரசியல்: அந்தப் புத்தக வெளியீட்டு விழாவில் விஜய் பேசியது அரசியல் களத்தில் அனலை கிளப்பியது. திமுகவை இவ்வளவு தைரியமாக ஓபனாக விமர்சனம் செய்கிறாரே என்று அவரது தொண்டர்கள் உற்சாகமடைந்தனர். அதேபோல் விஜய் பாஜகவின் பி டீம்; அதனால்தான் அவர் திமுகவை விமர்சிக்கிறார் என்று திமுகவினரும்; அவர் அவரை நம்பி கட்சி ஆரம்பிக்காமல் விசிகவை நம்பி ஆரம்பித்திருக்கிறார் என்று விசிகவினரும் தொடர்ந்து கூறிவருகிறார்கள்.
நரேன் பேட்டி: இந்நிலையில் விஜய்யின் அரசியல் பிரவேசம் குறித்து நரேன் பேசுகையில், "விஜய் இன்னும் ஒரு படத்தில் மட்டும்தான் நடிப்பார். இனி நடிக்கமாட்டார் என்பது வருத்தம் தரக்கூடியதாக இருக்கிறது. அதேசமயம் அவர் அரசியலில் சாதிக்க விரும்புகிறார். எனவே அவருக்கு நாம் ஆதரவாக இருப்போம்" என்று குறிப்பிட்டிருக்கிறார். முன்னதாக விஜய்க்கு சின்னத்திரை நடிகை ஆலியா மானசாவும் ஆதரவு தெரிவித்திருந்தார். இப்போது நரேனும் திரைத்துறையிலிருந்து ஆதரவை கொடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











