அம்மாவின் தாலியை வித்து.. வீட்டில் இருந்த வறுமை கற்றுக்கொடுத்த பாடம்.. பார்த்திபன் ஓபன் டாக்!
சென்னை: இயக்குநரும் நடிகருமான பார்த்திபன் புதிய பாதை படத்தை இயக்கி இயக்குநர் அவதாரம் எடுத்தார். கடந்த 35 ஆண்டு காலமாக தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத இயக்குநராக இருக்கும் பார்த்திபன், யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் தனது வாழ்க்கையில் கடந்து வந்த கஷ்டத்தை மனம் திறந்து பேட்டி அளித்துள்ளார்.
அதில், சிறு வயதிலேயே எனக்கும் என் தம்பிக்கும் பல விஷயத்தை என் அப்பா கற்றுக்கொடுத்துவிட்டார். அப்பா சம்பளம் வாங்கியதும் முதல் ஐந்து தேதிக்குள் அனைத்தையும் செலவு செய்து விடுவார். இதனால், ஒன்றாம் தேதியில் இருந்து ஐந்தாம் தேதி வரை நாங்கள் பணக்காரர்களாக இருப்போம். பின் பிச்சைக்காரர்களாகி விடுவோம். வீட்டில் கரண்ட் பில் கட்டக்கூட பணம் இருக்காது. இதனால், மூன்று மாதத்திற்கு ஒருமுறை பில் கட்டாததால், ஈபி ஆட்கள் கரண்டை கட் செய்துவிடுவார்கள். அந்த தெருவிலேயே எங்கள் வீடு தான் இருட்டாக இருக்கும். பின் அம்மாவின் தாலியை விற்று, இன்னும் சில பொருட்களை எல்லாம் விற்று அம்மா கட்டுவார்கள்.

பார்த்திபன் பேட்டி: அப்பா, ஒரு நாளைக்கு பத்து பாக்கெட் சிகரெட் பிடிப்பார். இதனால், இதுவரைக்கும் நான் சிகரெட்டை பிடித்ததே இல்லை. அப்பாவிடம் இருந்து முதலில் கற்றுக்கொண்டது இதுபோல இருக்கக்கூடாது என்பது தான். குடும்பத்தில் இருந்த வறுமை காரணமாக எனக்குள் ஒரு தாழ்வு மனப்பான்மை வந்துவிட்டது. இதனால் மற்ற குழந்தைகளை போல நான் எப்போதும் விளையாடியதில்லை, அவ்வளவு ஏன் சைட் அடித்ததுக்கூட இல்லை, சைட் அடிக்க எனக்கு தகுதி இல்லை என்று நினைத்து, எப்போதுமே, தலை குனிந்து கொண்டு தான் செல்வேன்.ஆனால், அந்த நேரத்திலும் ஒரு சில காதல் என்னை கடந்து சென்றது. என் இளமை காலத்தில் வந்த பல காதலை நான் மிஸ் செய்ததற்கு காரணம் என் குடும்பத்தில் இருந்த வறுமை தான். நல்ல வேளை நான் அந்த காதலை மிஸ் செய்தேன். இல்லை என்றால், இந்நேரம் நான் எங்காவது கூஜா தூக்கிக்கொண்டு இருந்து இருப்பேன். என் குடும்பத்தில் இருந்த வறுமை தான் என்னை செழுமைப்படுத்தியது அதற்கு என் அப்பாவிற்கு நன்றி என்றார்.

வாடகை வீட்டில் இருக்கிறேன்: தொடர்ந்து பேசிய பார்த்திபன், சினிமாவும் நானும் மட்டுமே தனி குடித்தனம் நடத்திக்கொண்டு இருக்கிறோம். யாருடைய எந்த ஒரு உதவியும் எனக்கு இல்லை, யாருடைய பெரிய பங்களிப்பும் இல்லை. நான் ஒவ்வொரு படம் எடுக்கும்போதும், அடுத்த படத்தில் வீடு வாங்கி விடலாம் என நினைப்பேன். ஆனால், இப்போது வரைக்கும் வாடகை வீட்டில் தான் வாழ்ந்து வருகிறேன். படம் எனக்கு வெறும் படம் கிடையாது. யாரோ ஒருவர் கொடுத்த பணத்தில், என்னுடைய கிரியேட்டிவிட்டியை சொறிந்து விட்டுப் போகும் படமாக அது இருக்கக் கூடாது. லைஃப் அண்ட் டெத் படமாக இருக்க வேண்டும் என்று நினைப்பவன் நான். புதிய பாதை படம் வெளியான போது நான் எந்த மாதிரியான விளம்பரத்தை பயன்படுத்தினேனோ அதையே இப்போது வரை பயன்படுத்தி வருவதை நினைத்து வருத்தமாக இருக்கிறது. இருந்தாலும், இந்த சினிமாவில் 35 வருடம் பயணித்து இருப்பதை நினைத்து மகிழ்ச்சி அடைகிறேன். இங்கு நிலைத்து இருப்பது என்பது உண்மையில் பெரிய கஷ்டமான விஷயம் என்று பார்த்திபன் அந்தபேட்டியில் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











