துபாயின் கோல்டன் விசாவை பெற்ற முதல் தமிழ் நடிகர் பார்த்திபன்... குவியும் வாழ்த்து!
சென்னை: ஐக்கிய அரபு அமீரகத்தின் கோல்டன் விசா பெறும் முதல் தமிழ் நடிகர் என்ற பெருமையை நடிகரும் திரைப்பட இயக்குநருமான ஆர் பார்த்திபன் பெற்றுள்ளார்.
தமிழ் சினிமாவின் முக்கிய ஆளுமைகளில் ஒருவர் நடிகர் பார்த்திபன். நடிகராக மட்டுமின்றி இயக்குநர், தயாரிப்பாளர், எழுத்தாளர் என பல முகங்களை கொண்டுள்ளார்.
60க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள பார்த்திபன், 14 படங்களை இயக்கியுள்ளார். 12 படங்களை தயாரித்துள்ளார்.

துபாயின் கோல்டன் விசா
இந்நிலையில் தேசிய விருது பெற்ற திரைப்பட ஆளுமையான பார்த்திபனுக்கு துபாயின் அடையாள மற்றும் குடியுரிமைக்கான ஆணையத்தின் (ICA) அதிகாரிகள் கோல்டன் விசாவை வழங்கினர். தனக்கு கோல்டன் விசா வழங்கிய துபாய் அரசுக்கு நடிகர் பார்த்திபன் நன்றி தெரிவித்துள்ளார்.
துபாயில் இருந்து பேசிய அவர், "எனக்கு கோல்டன் விசா வழங்கப்பட்டதற்கு மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். துபாய் அரசாங்கத்திற்கு எனது மனமார்ந்த நன்றிகள். இந்த சிறப்புரிமைக்கு தகுதியானவன் என்று என்னை கருதியதற்காக துபாய் அரசுக்கு அன்பும் நன்றியும்," என்று கூறினார்.

கோல்டன் விசா என்பது..
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் கோல்டன் விசா என்பது நீண்ட கால குடியிருப்பு விசா முறையாகும். இது ஐந்து முதல் 10 ஆண்டுகள் வரை நீட்டிக்கப்படுகிறது. மேலும் தானாகவே புதுப்பிக்கப்படும் வசதியையும் கொண்டதாகும். பல்வேறு துறைகளைச் சேர்ந்த சாதனையாளர்கள், தொழில் வல்லுநர்கள், முதலீட்டாளர்கள் மற்றும் அரிய திறன்களைக் கொண்டவர்களுக்கு இது வழங்கப்படுகிறது.

ஒத்த செருப்பு சைஸ் 7
சமீபத்தில் நடைபெற்ற தேசிய திரைப்பட விருதுகள் விழாவில் ஒத்த செருப்பு சைஸ் 7 படத்திற்காக ஸ்பெஷல் ஜூரி விருதை பெற்ற பார்த்திபன், தற்போது அப்படத்தின் இந்தி ரீமேக்கில் ஈடுபட்டுள்ளார். மேலும் இரவின் நிழல் என்ற தமிழ் திரைப்படத்தையும் அவர் இயக்கியுள்ளார்.

ஏஆர் ரஹ்மான் இசை
ஒரே ஷாட்டில் படமாக்கப்பட்ட முதல் திரைப்படமான இரவின் நிழலுக்கு ஆஸ்கர் நாயகன் ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார். மேலும் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் பொன்னியின் செல்வன் படத்தில் சின்ன பழுவேட்டயர் கதாப்பாத்தில் நடிக்கிறார். கவுதம் மேனனின் துருவ நட்சத்திரம் படத்திலும் நடித்து வருகிறார் நடிகர் பார்த்திபன் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications