விஜய்யை தொடர்ந்து மக்களுக்கு உதவ வந்த பிரசாந்த்.. The GOAT படம் பற்றி என்ன சொன்னாரு தெரியுமா?
தூத்துக்குடி: சமீபத்தில் நடிகர் விஜய் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தூத்துக்குடி மற்றும் நெல்லை மக்களுக்கு நேரில் சென்று நிவாரண உதவிகளை வழங்கியது பலரது கவனத்தை வெகுவாக கவர்ந்தது. நடிகர் விஜய் அரசியலுக்கு வரத்தான் இதையெல்லாம் செய்கிறார் என விமர்சனங்களும் கிளம்பின. இந்நிலையில், நடிகர் பிரசாந்த் இன்று தூத்துக்குடிக்கு சென்று நிவாரண உதவிகளை வழங்கி உள்ளார். அதன் வீடியோ காட்சிகளும், புகைப்படங்களும் இணையத்தில் தீயாக பரவி வருகின்றன.
90களில் முன்னணி நடிகராக இருந்தவர் பிரசாந்த். டாப் ஸ்டார் பட்டத்துடன் சலாம் குலாமோ பாடல் எல்லாம் பாடிக் கொண்டு ஷங்கர் இயக்கத்தில் உலக அழகியுடன் அமெரிக்காவில் வலம் வந்துக் கொண்டிருந்த பிரசாந்த் தனது திருமணத்துக்கு பிறகு ஏற்பட்ட விவாகரத்து பிரச்சனை காரணமாக ஆள் அட்ரஸே தெரியாமல் காணாமல் போய் விட்டார்.

அந்தகன் என்ன ஆச்சு?: இந்தியில் ஆயுஷ்மான் குரானா நடிப்பில் வெளியான அந்தாதூன் படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை கைப்பற்றிய தியாகராஜன் தனது மகன் பிரசாந்தை வைத்து அந்த படத்தை இயக்கி முடித்துள்ளார். ஆனால், அந்த படம் ரிலீஸ் இன்னும் நடக்கவில்லை. அடுத்து விஜய் படத்தில் பிரசாந்த் நடிக்க ஆரம்பித்துள்ள நிலையில், அந்தகன் படம் வெளியாகுமா? அந்த படம் என்ன ஆனது என்கிற கேள்விகள் எழுந்துள்ளன.
தூத்துக்குடி மக்களுக்கு உதவி: இந்நிலையில் நடிகர் பிரசாந்த் தூத்துக்குடி மக்களுக்கு இன்று மழை வெள்ள நிவாரண உதவிகளை நேரில் சென்று வழங்கினார். சுமார் 1000 பேருக்கு நிவாரணப் பொருட்களை வழங்கிய பிரசாந்த் மக்களை சந்தித்து இப்படி உதவி செய்வது ரொம்பவே சந்தோஷத்தை கொடுக்கிறது. எப்போதும் உதவி செய்துக் கொண்டு தான் இருக்கிறேன். ஆனால், இன்று தான் மீடியா வந்து பார்க்கிறது என்றார்.
விஜய்யை தொடர்ந்து: சமீபத்தில் நெல்லையில் வெள்ள பாதிப்பால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நடிகர் விஜய் உதவி செய்த நிகழ்வு சோஷியல் மீடியாவில் மிகப்பெரிய அளவில் பேசு பொருளாக மாறியது. விஜய் மக்கள் இயக்கம் சார்பில் நடிகர் விஜய் செய்த உதவியை தொடர்ந்து டி. ராஜேந்தர் தூத்துக்குடி மக்களுக்கு நேரில் சென்று நிவாரண உதவிகளை வழங்கினார். இந்நிலையில், நடிகர் பிரசாந்த் இன்று அந்த பகுதி மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கி உள்ளார்.
கோட் படம் பற்றி: சினிமாவில் மீண்டும் என்ட்ரி கொடுத்து விட்டேன் என்றும் மீண்டும் பழையபடி எல்லாம் மாறும் என்றும் பேசிய பிரசாந்த், தற்போது விஜய்யுடன் The Greatest of All Time படத்தில் இணைந்து நடித்து வருகிறேன், படம் நல்லா வந்துட்டு இருக்கு என்றார். மேலும், மக்களுக்கு பலர் உதவி செய்வதை பார்க்கும் போது சந்தோஷமாக உள்ளது. இதில் இருந்து பாடத்தைக் கற்றுக் கொள்ள வேண்டும் என்றும் அடுத்த முறை இது போல நடக்காமல் தடுக்க என்ன வழி என்பதை ஆலோசனை செய்ய வேண்டும் என்றும் கூறியுள்ளார். அரசு அதற்கேற்பத்தான் பல விஷயங்களை மக்களுக்காக செய்து வருகிறது. நடிகர்களும் தொடர்ந்து உதவிகளை செய்து வருவது சந்தோஷத்தை கொடுக்கிறது என நடிகர் பிரசாந்த் பத்திரிகையாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











