அஜித்தை காப்பி அடிச்சேனா? வாய் இருக்குனு எதுவேணும்னாலும் சொல்றதா.. ராமராஜன் கொடுத்த பதிலடி!
சென்னை: தமிழ் சினிமாவின் 90 கால கட்டத்தில் ரஜினிகாந்த், கமல், விஜயகாந்த் என பல முன்னணி நடிகர்களுக்கு டஃப் கொடுத்தவர் நடிகர் ராமராஜன். சாமானியன் திரைப்படத்தின் மூலம் சினிமாவில் ரீ என்ட்ரியாகி உள்ள ராமராஜன் யூடியூப் சேனலுக்கு அளித்துள்ள பேட்டி தற்போது பலரின் பார்வைக்கு வந்துள்ளது.
கலர் கலரா சண்டை, உதட்டிற்கு லிப்ஸ்டிக் போட்டுக்கொண்டு தனக்கு என்று தனி ஸ்டைலை நடிகர் ராமராஜன் வைத்து இருந்தார். சிக்ஸ் பேக் உடல்வாகு இல்லை என்றாலும், அந்த உடலையும் அப்பட்டமாக காட்டிக்கொண்டு, அரை டவுசருடன் படம் முழுக்க வலம்வர இவரால் மட்டும் தான் முடியும். அவரின் எதார்த்தமான நடிப்பு மக்களுக்கு பிடித்துப்போக, இவர் நடித்த படங்கள் 100 நாட்களுக்கு மேல் தியேட்டரில் ஓடியது. சினிமாவில் நடிக்க வந்த குறுகிய காலத்திற்குள்ளாகவே முன்னணி நடிகர்களையெல்லாம் பின்னுக்குத் தள்ளி அத்தனை பேரையும் தன் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்தவர் ராமராஜன்.

நடிகர் ராமராஜன்: கங்கை அமரன் இயக்கத்தில் நடித்த ராமராஜன், கனகா நடித்த கரகாட்டக்காரன் திரைப்படம் ஒரு வருடத்திற்கு மேல் தியேட்டரில் ஓடி சாதனை படைத்தது. அந்த படத்தில் வரும் மாங்குயிலே ... பூங்குயிலே பாடல் இன்றை தலைமுறையினருக்கும் பிடித்தமான பாடலாக உள்ளது. அடுத்தடுத்த படங்களில் நடித்துக்கொண்டு வந்த அவர் திடீரென சினிமாவில் காணாமல் போனார்.
சாமானியன்: பல ஆண்டுகளுக்கு பிறகு, நடிகர் ராமராஜன் சாமானியன் என்ற படத்தில் நடித்துள்ளார். ராஜேஷ் இயக்கத்தில் உருவாகி உள்ள இந்த படத்தில், ராதாரவி, எம் எஸ் பாஸ்கர், கே.எஸ். ரவிக்குமார் உட்பட பல நடிகர்கள் நடிக்கின்றனர். இத்திரைப்படம் தமிழ், தெலுங்கு,மலையாளம், இந்தி, கன்னடம் என ஐந்து மொழிகளில் பான் இந்தி திரைப்படமாக உருவாகி வருகிறது. இந்த படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா அண்மையில் நடைபெற்றது. அந்த டிரைலரில் நடிகர் ராமராஜன், தன்னுடைய பாணியில் மக்களை கவரும் வகையில் நடிப்பை பிரமாதமாக கொடுத்திருக்கிறார்.
அப்படி நடிக்கவே மாட்டேன்: இந்நிலையில் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்த ராமராஜன், சிகரெட், குடி போன்ற போதை தரும் பொருட்களை சினிமாக்களில் பயன்படுத்துவதால் தான் நிஜ வாழ்க்கையிலும் அவை அதிகமாக பயன்படுத்தப்படுகிறது. இது இளம் தலைமுறையினரை பாதிக்கும். இது போன்ற காட்சிகளை என் படத்தில் நான் ஒரு போதும் அனுமதிக்க மாட்டேன், 500 கோடி கொடுத்தாலுமே நான் படங்களில் சிகரெட், சரக்கடிக்கும் காட்சிகளில் நடிக்கவே மாட்டேன் என்றார்.
அஜித்தை காப்பி அடித்தாரா: இதையடுத்து, சாமானியன் டிரைலரை பார்க்கும் போது, துணிவு பட ஃபைட் சீன் மாதிரியே இருக்கிறதே? என்றும் அஜித்தை காப்பி அடித்தாரா ராமராஜன் என்று பல விமர்சனங்கள் வருகின்றன என்ற கேள்விக்கு பதில் அளித்த அவர், ஏங்க என் பட சூட்டிங் நடந்தப்போதான் அஜித்தின் துணிவு பட சூட்டிங்கும் மௌண்ட் ரோட்டில் நடந்தது. ஒரே நேரத்தில்தான் இரண்டு பட சூட்டிங்கும் நடந்தது. இதுல எப்படிங்க நான் அந்த சீனை காப்பி அடிப்பேன், வாய் இருக்குனு எதுவேணும்னாலும் சொல்றதா என்று அவருக்கே உரித்தான அந்த கிராமத்து மொழியில் பேசினார்.
நளினி பிரிந்தார்: நடிகர் ராமராஜன் நடிகை நளினியை காதலித்து 1987 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் இருந்த நிலையில், இருவரும் கருத்துவேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று பிரிந்தனர். ராமராஜனும் நளினியும் விவாகரத்து செய்து கொண்டாலும் தங்கள் பிள்ளைகளின் திருமணத்தை சேர்ந்தே நடத்தி வைத்தனர். தற்போது நளினி சீரியல் மற்றும் சின்னத்திரை என இரண்டும் பிஸியாக நடித்து வருகிறார்.


Click it and Unblock the Notifications











