ப்ளூ சட்டை மாறன் விமர்சனம் செய்ய காசு கேட்டாரு.. இல்லைனு சொல்ல சொல்லுங்க.. பிரபல நடிகர் கொடுத்த ஷாக்
சென்னை: தமிழ்நாட்டின் திரை விமர்சகர்களில் ப்ளூ சட்டை மாறன் பிரபலமானவராக இருக்கிறார். அவரது விமர்சனங்கள் பல சமயங்கள் கடுமையாக இருந்திருக்கின்றன. அதற்காக அவர் கண்டனங்களையும் சந்தித்திருக்கிறார். இருப்பினும் தனது ஸ்டைலை அவர் பெரிதாக மாற்றிக்கொள்ளவில்லை. இந்நிலையில் அவர் குறித்து நடிகர் ஆர்.எஸ்.கார்த்திக் தனியார் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டி ஷாக்கை கொடுத்திருக்கிறது.
ப்ளூ சட்டை மாறன் என்றாலே அவரது அசால்ட்டான உடல் மொழியும், மோசமான படத்தை கிண்டல் செய்வது போன்றவை நினைவுக்கு வரும். அவரது ட்ரோல் செய்யும் விதம் ஆரம்பத்தில் பெரிதாக கொண்டாடப்பட்டது. ஆனால் போகப்போக அவர் விமர்சனம் செய்யும் விதத்தை பார்த்து பலரும் கண்டனம் தெரிவிக்க ஆரம்பித்தார்கள்.மேலும் அவரால் ஒரு படம் எடுக்க முடியுமா என்ற கேள்வியும் எழ; அவர் ஆண்டி இந்தியன் என்ற படத்தை இயக்கினார்.
சமீபமாய் பலத்த எதிர்ப்புகள்: அந்தப் படம் தோல்வியைத்தான் சந்தித்தது. தொடர்ந்து அவர் விமர்சனம் செய்வதையும் வழக்கமாகவே வைத்திருக்கிறார். ப்ளூ சட்டையை மட்டுமின்றி இன்னும் பல திரை விமர்சகர்களுக்கு எதிராக கருத்துக்கள் நிலவ ஆரம்பித்திருகின்றன. அவர்கள் ஒரு படத்தை விமர்சனம் என்கிற பெயரில் காலி செய்துவிடுகிறார்கள் என்பதுதான் பலரின் குரலாக எதிரொலிக்க ஆரம்பித்திருக்கிறது.

பிரபலங்களும் அதே நிலைப்பாடுதான்: ரசிகர்கள், சினிமா ஆர்வலர்கள் மட்டுமின்றி திரை பிரபலங்களுமே விமர்சகர்களை பற்றி ஓபனாகவே பேச ஆரம்பித்திருக்கிறார்கள். நேற்றுகூட இயக்குநர் சுசீந்திரன், "சில யூடியூபர்கள் வருமானத்துக்காக தவறான விமர்சனத்தை கொடுக்கிறார்கள். சினிமாவுக்குள் இருந்துகொண்டே சினிமாவை கொலை செய்கிறார்கள். இப்போது பல டீம்கள் வந்துவிட்டன. ஒரு டீம், பணம் கொடுத்து 100 பேரை அனுப்புவோம்; அவர்கள் படத்தை பற்றி புகழ்வர்கள் என ஐடியா கொடுக்கிறது, இன்னொரு டீமோ தங்களுக்கு வேண்டியவர்களை படத்துக்கு அனுப்பி படத்தை பற்றி தவறாக சொல்ல் வைக்கிறது.
புகழும் அதேதான்: மக்கள்தான் எந்தப் படத்தை பார்க்க வேண்டும் பார்க்கக்கூடாது என்பதை முடிவு செய்ய வேண்டும். யூடியூபில் வரும் விமர்சனங்கள் மீது கடும் விமர்சனங்கள் தமிழ் சினிமாவில் வருகின்றன. விமர்சனம் செய்யக்கூடாது என்று தயாரிப்பாளர்கள் சங்கம் வழக்கு தொடர்ந்தது. நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது. போலியாக ஒரு படத்தை பற்றி புகழ்வதை தடுக்க முடியாதுதான்; ஆனால் கட்டுப்படுத்தலாம்" என்று கூறியிருந்தார். நடிகர் புகழும் விமர்சனம் என்கிற பெயரில் சினிமாவை அழிக்காதீர்கள் என்று பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.
ஆர்.எஸ்.கார்த்திக் பேட்டி: இப்படி திரைத்துறையினர் விமர்சகர்களுக்கு எதிராக ஓங்கி குரல் கொடுக்க ஆரம்பித்திருக்கும் நிலையில் நடிகர் ஆர்.எஸ்.கார்த்திக் தனியார் யூடியூப் சேனலுக்கு பேட்டியளித்திருக்கிறார். அந்தப் பேட்டியில் அவர், "பீச்சாங்கை படத்தை விமர்சனம் செய்வதற்கு ப்ளூ சட்டை மாறன் டீம் என்னிடம் பணம் கேட்டார்கள்தான். பணம் தரமாட்டேன்; டிக்கெட் தருகிறேன் என்று சொன்னேன். இதை மறுக்க சொல்லுங்கள் பார்க்கலாம்.
ப்ளூ சட்டையின் செயல்: வந்தார் படம் பார்த்தார். நான் விமர்சனம் செய்யமாட்டேன் என்று சொல்லிவிட்டு சென்றார். ஆனால் சிலர் விமர்சனம் செய்த பிறகு இவரும் விமர்சனம் செய்தார். யாரும் இங்கே ரிவ்யூவே செய்யக்கூடாது என்று நான் சொல்லவில்லை. படம் பார்க்க வரும்போது ப்ளைன் பேப்பராக வந்து; படத்தில் இருக்கும் குறைகள் குறித்து சொல்லுங்கள். பெர்சனலாக யாரையும் அட்டாக் செய்யாதீர்கள். ப்ளூ சட்டை மாறன் மற்ற படங்களில் சொன்ன குறைகளைவிடவும் அவர் இயக்கிய படத்தில் அதிக குறைகள் இருந்தன" என்றார்.


Click it and Unblock the Notifications











