Lal Salaam - லால் சலாம் படத்தில் ரஜினி நடிக்க இதுதான் காரணம்.. பொண்ணு மட்டும் இல்லை.. செந்தில் ஓபன் டாக்
சென்னை: நடிகர் ரஜினிகாந்த் தனது மூத்த மகள் ஐஸ்வர்யா இயக்கத்தில் லால் சலாம் படத்தில் நடித்திருக்கிறார். படமானது பிப்ரவரி 9ஆம் தேதி ரிலீஸாகவிருக்கிறது. இதில் விஷ்ணு விஷால், விக்ராந்த் உள்ளிட்டோர் லீடு ரோலில் நடித்திருக்கின்றனர். ரஜினிகாந்த் மொய்தீன் பாய் என்ற கேரக்டரில் நடித்திருக்கிறார். இந்தச் சூழலில் நடிகர் செந்தில் லால் சலாம் குறித்து பேசியிருக்கும் விஷயம் இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளது.
ரஜினிகாந்த் நடிப்பில் கடைசியாக ஜெயிலர் திரைப்படம் வெளியாகி சூப்பர் ஹிட்டடித்தது. அந்தப் படத்தில் நடித்துக்கொண்டிருக்கும்போதே தனது மூத்த மகள் ஐஸ்வர்யா இயக்கத்தில் லால் சலாம் படத்தில் நடிக்க கமிட்டானார். ஏற்கனவே ஐஸ்வர்யா இயக்கிய 3, வை ராஜா வை ஆகிய படங்கள் சரியாக போகாததால் இந்தப் படத்தை ஹிட் படமாக்க வேண்டும் என்ற முனைப்பில் ஐஸ்வர்யா பணியாற்றியிருக்கிறார். லைகா நிறுவனம் படத்தை தயாரிக்க ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கிறார்.

மொய்தீன் பாய் ரஜினிகாந்த்: இதில் விஷ்ணு விஷால், விக்ராந்த் உள்ளிட்டோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். ரஜினிகாந்த் மொய்தீன் பாய் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். கெஸ்ட் ரோல் என்றாலும் படத்தில் மொத்தம் ஒரு மணி நேரம்வரை வருவார் என்று கூறப்படுகிறது. மும்பையில் அவர் ஒரு தாதாவாக இருப்பார் என்றும் ஒரு பிரச்னையிலிருந்து விஷ்ணு விஷாலையும், விக்ராந்த்தையும் காப்பாற்றுவது போல் அவர் கதையில் பயணப்படுவார் என்றும் ஒரு பேச்சு ஓடுகிறது.
ஆடியோ லான்ச்: படமானது பிப்ரவரி 9ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது. ஏற்கனவே இப்படம் பொங்கலுக்கு ரிலீஸாகவிருந்தது குறிப்பிடத்தக்கது. ஆனால் சில காரணங்களால் படத்தின் ரிலீஸ் தள்ளிப்போனது. இப்படிப்பட்ட சூழலில் கடந்த சில நாட்களுக்கு முன்னதாக சென்னை சாய்ராம் கல்லூரியில் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா பிரமாண்டமாக நடந்தது. இதில் ரஜினிகாந்த், ஐஸ்வர்யா உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துகொண்டனர்.
செந்தில்: இப்படத்தில் ரஜினிகாந்த் கதாபாத்திரத்தின் மீது உச்சக்கட்ட எதிர்பார்ப்பு இருக்கிறது. அதற்கு அடுத்ததாக இருப்பவர் செந்தில். பிரபல காமெடி நடிகராக வலம் வந்த அவர் தானா சேர்ந்த கூட்டம் படத்தில் நடித்திருந்தார். தற்போது லால் சலாம் படத்திலும் நடித்திருக்கிறார். பல வருடங்கள் கழித்து செந்திலை திரையில் காண்பதற்கும் ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கிறார்கள்.
செந்தில் பேச்சு: இந்நிலையில் லால் சலாம் படத்தில் ரஜினிகாந்த் நடித்ததற்கான காரணம் குறித்து செந்தில் பேசியிருக்கும் விஷயம் இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளது. அதுகுறித்து அவர் பேசுகையில், "தன்னுடைய மகள் இயக்கும் படம் என்பதால் மட்டும் லால் சலாம் படத்தில் ரஜினிகாந்த் நடிக்கவில்லை. அவர் ஒரு படத்தில் நடிக்கிறார் என்றால் அந்தப் படத்தின் கதை ரஜினிகாந்த்துக்கு பிடித்திருக்க வேண்டும். நிறைய பேருக்கு கதை பிடிக்கும் என்று அவருக்கு தோன்ற வேண்டும். அப்போதுதான் நடிப்பார்.
கேமியோ ரோல்தான்: லால் சலாம் படத்தில் ரஜினிகாந்த் கேமியோ ரோலில்தான் நடித்திருக்கிறார். அப்படி அவர் நடிக்க வேண்டும் என்றாலும் அவரது கதாபாத்திரம் மற்றும் கதை சிறப்பாக அமைந்தால் மட்டும்தான் அவர் நடிப்பார். ராகேவேந்திரா மண்டபத்தில் ஒருமுறை ரஜினிகாந்த்தை சந்தித்தேன். அப்போது நீங்கள் என்னை வைத்து ஒரு படம் தயாரியுங்கள். நான் கால்ஷீட் தருகிறேன் என்று சொன்னார். ஆனால் நான் தயாரிக்கவில்லை. அப்படி அவரை வைத்து தயாரித்திருந்தால் பல கோடி ரூபாய் சம்பாதித்திருக்கலாம். எப்போதும் நான் பணத்துக்கு ஆசைப்படுபவன் இல்லை. இருந்தாலும் ரஜினி சொல்லி அதை தவறவிட்டுவிட்டோமே என்ற வருத்தம் இப்போதும் எனக்குள் இருக்கிறது"என்றார்


Click it and Unblock the Notifications











