Sivakarthikeyan: புல்லட்டை விட வலிமையானது வாக்கு.. ஆப்ரஹாம் லிங்கன் வாசகத்தை கூறிய சிவகார்த்திகேயன்!
சென்னை: இன்றைய தினம் தமிழகம் மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் முதல் கட்டமாக மக்களவை தேர்தல் நடந்து வருகிறது. காலை 7 மணியளவில் துவங்கிய இந்த வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இன்று துவங்கும் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் ஜூன் 1ம் தேதிவரை பல கட்டங்களில் நடக்கவுள்ளது.
தமிழகத்தில் இந்த தேர்தலையொட்டி ரஜினிகாந்த், அஜித்குமார், விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் உள்ளிட்ட திரைப்பிரபலங்கள் தங்களது வாக்குகளை பதிவு செய்துள்ளனர். நடிகர் சிவகார்த்திகேயன் தனது மனைவியுடன் வரிசையில் நின்று தன்னுடைய வாக்கினை பதிவு செய்துள்ளார். சென்னை வளசரவாக்கத்தில் உள்ள வாக்குச்சாவடியில் அவர் தனது வாக்கினை பதிவு செய்துள்ளார்.

மக்களவை தேர்தல் 2024: மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் இன்றைய தினம் முதல்கட்டமாக நடந்து வருகிறது. காலை 7 மணிக்கு துவங்கிய வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில் இந்த வாக்குப்பதிவு நடந்து வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் ரஜினிகாந்த், அஜித்குமார், விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் உள்ளிட்ட நடிகர், நடிகைகள் தங்களது வாக்கினை பதிவு செய்துள்ளனர். சென்னை வளசரவாக்கத்தில் உள்ள வாக்குச்சாவடிக்கு தன்னுடைய மனைவியுடன் வந்திருந்த சிவகார்த்திகேயன் வரிசையில் நின்று தன்னுடைய வாக்கை பதிவு செய்தார்.
நடிகர் சிவகார்த்திகேயன் வாக்குப்பதிவு: வாக்கினை பதிவு செய்வதற்கு முன்னதாக தன்னுடைய விரலை தூக்கிக்காட்டி தான் வாக்குப்பதிவு செய்வதை வெளிப்படுத்தினார் சிவகார்த்திகேயன். தொடர்ந்து தன்னுடைய மனைவியுடன் வெளியில் வந்த அவர், ரசிகர்களுடன் இணைந்து செல்ஃபி எடுத்துக் கொண்டார். தொடர்ந்து செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார். வாக்கு நமது உரிமை என்றும் வாக்களிப்பது நமது கடமை என்றும் தெரிவித்தார். இந்த தேர்தலில் முதல்முறையாக வாக்களிப்பவர்கள் அனைவருக்கும் தன்னுடைய வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொண்டார். மேலும் அவரவர் மனசாட்சிப்படி வாக்களிக்கவும் கேட்டுக் கொண்டார்.
புல்லட்டை விட வலிமையானது வாக்கு: நாம் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பது குறித்து குடும்பத்தினரிடமும் விவாதிக்க வேண்டியதில்லை என்றும் கூறினார் சிவகார்த்திகேயன். நமக்கு யாரை பிடிக்கிறதோ, யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்று நினைக்கிறோமோ அவர்களுக்கு வாக்களிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். ஆப்ரஹாம் லிங்கன் கூறியதைபோல புல்லட்டை விட வலிமையானது வாக்கு என்று கூறிய சிவகார்த்திகேயன், அதனால் அதை நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று தான் கருதுவதாகவும் குறிப்பிட்டார்.
கண்டிப்பாக வாக்களிக்க வேண்டும்: கண்டிப்பாக நாம் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்று தன்னுடைய ரசிகர்களிடம் கூறிக் கொள்வதாகவும் சிவகார்த்திகேயன் கூறினார். நாம் நம்முடைய ஊர் இப்படி இருக்கிறது என்று நமது கருத்தை கூறுவதற்கு முன்னதாக நம்முடைய கடமையான வாக்களிப்பதை செய்திருக்க வேண்டும் என்று தன்னுடைய ரசிகர்களுக்கு மட்டுமில்லாமல் அனைவருக்கும் கூறிக் கொள்வதாக தெரிவித்துள்ளார். வாக்களிப்பதை மிகவும் எளிமையாக தேர்தல் ஆணையம் ஆக்கியுள்ளதாகவும் அனைவருக்கும் விடுமுறையும் விடப்பட்டுள்ளதால் அனைவரும் கண்டிப்பாக வாக்களிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











