படிக்கிற வயசுல லவ் பண்ணாதீங்க... மாணவ மாணவிகளுக்கு பிரபல நடிகர் அட்வைஸ்!
சென்னை: படிக்கும் வயதில் மாணவ மாணவிகள் காதலிக்க வேண்டாம் என பிரபல நடிகர் கோரிக்கை விடுத்துள்ளார்.
தமிழ் சினிமாவில் வில்லன் நடிகராகவும் குணச்சித்திர நடிகராகவும் வலம் வருபவர் நடிகர் சவுந்தரராஜா. வேட்டை படத்தின் மூலம் சினிமாவுக்கு அறிமுகமானார்.
நடிகராக மட்டுமின்றி தயாரிப்பாளராகவும் வலம் வருகிறார். சுந்தரப்பாண்டியன், வருத்தப்படாத வாலிபர் சங்கம், ஜிகர்தண்டா, அதிதி, பூஜை, தெறி, தர்மதுரை, றெக்க, தொண்டன், சத்ரியன், சிலுக்குவார்பட்டி சிங்கம், பிகில், சங்க தமிழன் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

எஸ்ஆர்எம்மில் மாரத்தான் போட்டி
கடைசியாக ஜகமே தந்திரம் படம் சவுந்தரராஜா நடிப்பில் வெளியானது. இந்நிலையில் உலக இருதய தினம் மற்றும் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு திருச்சி எஸ்.ஆர்.எம் மருத்துவமனை மற்றும் கல்வி குழுமத்தின் சார்பில் மாரத்தான் போட்டி நடைபெற்றது.

மாணவ மாணவிகளுக்கு பரிசுகள்
இதில் நடிகர் சவுந்தரராஜா கலந்துக் கொண்டு மாரத்தான் போட்டியை கொடி அசைத்து தொடங்கி வைத்தார். இந்த போட்டியில், அனைத்து கல்லூரிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் சுமார் 700 பேர் கலந்துக் கொண்டனர். இதில் வெற்றிப் பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

நடிகர் விவேக் வாழ்ந்து கொண்டிருக்கிறார்
இதனை தொடர்ந்து நடிகர் சவுந்தரராஜா கல்லூரி வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டு வைத்தார். தொடர்ந்து பேசிய சௌந்தரராஜா, மறைந்த நடிகரும் சமூக ஆர்வலருமான விவேக் குறித்து நினைவுகூர்ந்தார். விவேக் இறந்தாலும், அவர் இந்த மண்ணில் வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்றும் கூறினார்.

படிக்கும் வயதில் காதல் வேண்டாம்
மேலும் நடிகர் விவேக் நட்டு வைத்த மரக்கன்றுகள் இன்னும் இந்த மண்ணில் வாழ்ந்துக் கொண்டிருக்கிறது என்றார். அவரது இடத்தினை தக்க வைக்க யாராலும் முடியாது. மண்ணுக்கும் மக்களுக்கும் உபயோகமாக வாழ்வதே வாழ்க்கை என்ற நடிகர் சவுந்தரராஜா, படிக்கும் காலத்தில் மாணவ, மாணவிகள் காதலிக்க வேண்டாம் என்று கோரிக்கை விடுத்தார்.

வாழ்க்கையை தீர்மானிக்க முடியாது
படிக்கும் அந்த பருவ வயதில் உங்கள் வாழ்க்கையினை நீங்கள் தீர்மானிக்க முடியாது என்ற சவுந்தரராஜா, படிப்பை முடித்த பிறகு திருமணம் செய்து கொள்ளுங்கள் என்றார்.
மேலும் படித்த இளைஞர்கள் அரசியலுக்கு வரவேண்டும் என்றும் நடிகர் சவுந்தரராஜா வேண்டுகோள் விடுத்தார்.


Click it and Unblock the Notifications











