விதை நீங்க போட்டது.. ஜெய்பீம் படத்தை மனதார பாராட்டிய கமலுக்கு சூப்பரா நன்றி சொன்ன சூர்யா!
சென்னை: ஜெய்பீம் படத்தை பார்த்தேன் கண்கள் குளமானது என கமல்ஹாசன் பாராட்டிய நிலையில், அவரது ட்வீட்டுக்கு நன்றி கூறியுள்ளார் நடிகர் சூர்யா.
Recommended Video
அமேசான் பிரைமில் வெளியாகி உள்ள சூர்யாவின் ஜெய்பீம் திரைப்படத்தை பார்த்த பலரும் பாராட்டி வருகின்றனர்.
கடுமையாக விமர்சிக்கும் விமர்சகர்கள் கூட இந்த படத்தை கை தட்டி கொண்டாடி உள்ளனர்.

எளியோரின் வலி
சூர்யாவின் ஜெய்பீம் படத்திற்கு கிடைத்துள்ள இந்த மாபெரும் வரவேற்புக்கு காரணமே எளியோரின் வலியை மிகவும் ஆழமாகவும் அழுத்தமாகவும் பதிவு செய்தது மட்டும் தான். நடிகர் சூர்யா இயக்குநர் டி.ஜே. ஞானவேலுவிடம் தன்னை முழுமையாக அர்பணித்து வழக்கறிஞர்கள் சந்துருவாகவே திரையில் மாறி உள்ளார்.

எத்தனை சந்துருக்கள் இருக்காங்க
பணம் படைத்தவர்களுக்கும் அதிகாரவர்க்கத்தினருக்கும் வாதாடும் வழக்கறிஞர்கள் மத்தியில் சந்துரு போன்ற நீதியரசர்கள் எத்தனை பேர் உள்ளனர் என்கிற கேள்வி தான் எழுகிறது. பல குற்றவாளிகள் கூட தப்பிக்கலாம் ஆனால், ஒரு நிரபராதி கூட தண்டிக்கப்படக்கூடாது என்பது நிஜத்தில் நடக்கிறதா? சில நிரபராதிகளுக்கு தீர்ப்பு கிடைக்கவே 13 ஆண்டுகளுக்கு மேல் போராட வேண்டி இருக்கிறது.

குவிகிறது பாராட்டு
அத்தனை ராஜாக்கண்ணுகளின் துயரங்களையும் இழப்புகளையும் திரை மொழி வாயிலாவது காண்பித்தாக வேண்டும் அப்படியாவது மேலும், சில சந்துருக்கள் தோன்றுவார்களா? என்கிற நோக்கத்துடனே இந்த படத்தை இயக்குநர் ஞானவேல் இயக்கி உள்ளார் என்பதற்காகவே இந்த படத்திற்கு இப்படி பாராட்டுக்கள் குவிகின்றன.

குரல் அற்றவர்களின் குமுறல்கள்
"#JaiBhim பார்த்தேன்.கண்கள் குளமானது.பழங்குடியினரின் இன்னல்களை அழுத்தமாக வெளிப்படுத்தி இருக்கிறார் இயக்குனர் டி.ஜே. ஞானவேல் பொதுச் சமூகத்தின் மனசாட்சிக்குக் குரலற்றவர்களின் குமுறல்களைக் கொண்டு சேர்த்த சூர்யா, ஜோதிகா மற்றும் படக்குழுவினருக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள்." என கமல் ஜெய்பீம் படக்குழுவினரை நேரில் சந்தித்து பாராட்டி இருந்தார்.

விதை நீங்க போட்டது
ஜெய்பீம் படக்குழுவினருடன் கமல் சந்தித்து எடுத்துக் கொண்ட புகைப்படத்தில் சூர்யா எங்கே காணவில்லை என ரசிகர்கள் கேள்வி எழுப்பி இருந்தனர். இந்நிலையில், கமலின் ட்வீட்டுக்கு நடிகர் சூர்யா நன்றி தெரிவித்துள்ளார். அதில், "நீங்கள் வகுத்த பாதை.. விதை நீங்க போட்டது! உங்கள் வாழ்த்துக்கும் அன்புக்கும் மனமார்ந்த நன்றி!!" என சூர்யா கூறியுள்ளார்.

தேசிய விருது
சூரரைப் போற்று திரைப்படத்திற்காக சூர்யாவுக்கு பல விருதுகள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டு வரும் நிலையில், அடுத்ததாக ஜெய்பீம் படத்திற்கு தேசிய விருது கொடுத்தே ஆக வேண்டும் என ரசிகர்கள் குரல் எழுப்பி வருகின்றனர். இப்படியொரு படம் தியேட்டரில் வெளியாகி இருந்தால் மேலும், சிறப்பாக அமைந்திருக்கும் என்பதே ரசிகர்களின் ஆசை.


Click it and Unblock the Notifications











