தெய்வீகத்தன்மைக்கு அடுத்தபடியானது தூய்மை...: பிரதமரின் திட்டத்திற்கு சூர்யா ஆதரவு
சென்னை: பிரதமர் மோடி துவங்கி வைத்துள்ள தூய்மை இந்தியா திட்டத்திற்கு நடிகர் சூர்யா தனது ஆதரவைத் தெரிவித்துள்ளார்.
கடந்த சில தினங்களுக்கு முன்னர், மகாத்மாவின் கனவுத் திட்டத்தில் ஒன்றான தூய்மையான இந்தியா திட்டத்தை துவக்கி வைத்தார் பிரதமர் மோடி. இதன்படி, பள்ளிகள், ரயில் நிலையங்கள் உள்ளிட்ட பொது இடங்களைத் தூய்மையாக பேண வேண்டும் என்ற குறிக்கோள் முன்வைக்கப் பட்டுள்ளது.
வரும் 2019ம் ஆண்டிற்குள் இந்தியாவை தூய்மையானதாக மாற்ற வேண்டும் என அறிவுறுத்தப் பட்டுள்ளது. பிரதமரின் இந்த திட்டத்திற்கு பல்வேறு அமைப்பை சேர்ந்தவர்களும் ஆதரவு அளித்து வருகின்றனர்.
இந்நிலையில், நடிகர் சூர்யாவும் இத்திட்டத்திற்கு தனது ஆதரவைத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

சுத்தம், சுகாதாரம்...
தெய்வீகத் தன்மைக்கு அடுத்தப்படியானது தூய்மை என்றார் தேசப்பிதா மகாத்மா காந்தி. தூய்மை, ஆரோக்கியத்திற்கு முன்னோடி. சுத்தம், சுகாதாரம், தூய்மை ஆகியவையே இன்றைய தேவை.

ஆரோக்கியத்தின் தேவை...
நம்மையும் நமது இல்லத்தையும், சுற்றுப்புறத்தையும் சுத்தமாக வைத்துக்கொள்வது முக்கியமானதாகும். இது ஒவ்வொருவரும் ஆரோக்கியமாக இருக்க உதவும்.

குழந்தைகளுக்கு...
நமது குழந்தைகளுக்கு செல்வத்தை அளிப்பது எவ்வளவு முக்கியமோ, தூய்மையான சுற்றுச்சூழலை அவர்களுக்கு அளிப்பது அதைவிட முக்கியமானது.

ஆதரவு தாருங்கள்...
ஆரோக்கியமான இந்தியாவிற்கு, சுத்தமான இந்தியாவை உருவாக்குவோம். பிரதமர் நரேந்திர மோடியின் தூய்மை பாரத இயக்கத்தில் இணைந்து, அதற்கு ஆதரவு தாருங்கள்' என இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

கமல்...
முன்னதாக இத்திட்டத்திற்கு நடிகர் கமல், சல்மான்கான், அமீர்கான், நடிகை பிரியங்கா சோப்ரா ஆகியோர் ஆதரவு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











