Vijayakanth - ரசிகர் செய்த திருட்டு வேலை.. விஜயகாந்த் என்ன செய்தார் தெரியுமா?.. தியாகு சொன்ன செம ஃப்ளாஷ்பேக்
சென்னை: Vijaykanth (விஜயகாந்த்) தன்னுடைய ரசிகர் செய்த திருட்டு வேலையை பார்த்து விஜயகாந்த் கொந்தளித்துவிட்டதாக நடிகர் தியாகு தெரிவித்திருக்கிறார்.
புரட்சி கலைஞர், கேப்டன் என்று ரசிகர்களால் அழைக்கப்படுபவர் விஜயகாந்த். மதுரையிலிருந்து சினிமா கனவுகளோடு தனது திறமை மற்றும் நண்பர் இப்ராஹிம் ராவுத்தரின் துணையோடு சென்னைக்கு வந்தவர். ரஜினிகாந்த், கமல் ஹாசன் ஆகியோர் பீக்கில் இருந்தபோது சினிமாவுக்குள் நுழைந்த விஜயகாந்த் ஆரம்பத்தில் வில்லனாகவே அறிமுகமானார்.

ஹீரோ: விஜயகாந்த்துக்கு கருத்த உருவம் இருக்கிறது ரஜினி போன்ற கலை இல்லை என்ற கமெண்ட்ஸ்கள் அப்போது எழுந்தன. ஆனால் ஹீரோவாக மாறியே தீருவேன் என உறுதிபூண்டு ஹீரோவாகவும் மாறிவிட்டார். ஹீரோவாக மாறியதும் சில படங்களிலேயே காணாமல் போய்விடுவார் என்றே பலரும் பேசினர். ஆனால் அதையெல்லாம் தனது திறமை மற்றும் ஆக்ஷனால் தவிடுபொடியாக்கினார் விஜயகாந்த்.
கிராமத்து அரசன்: முக்கியமாக தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் விஜயகாந்த்துக்கென்று தனி மவுசு இருந்தது. சொல்லப்போனால் ரஜினிகாந்த், கமல் ஹாசனைவிடவும் அதிகம் அவருக்கென்று ரசிகர்கள் இருந்தனர். அதற்கு ஒரே காரணம் விஜயகாந்த்திடம் இருந்த பாமரத்தனமான உடலும் குணமும்தான். விஜயகாந்த்தின் வளர்ச்சி அப்போது உச்சத்தில் ரஜினியையும், கமலையும் உறுத்தத்தான் செய்தது என்று இன்றுவரை சினிமாவில் இருக்கும் சீனியர்கள் சொல்வார்கள்.
நடிகர் சங்க தலைவர்: வெறும் நடிகராக மட்டுமின்றி பொது விஷயங்களிலும் அவர் ஆர்வம் காட்டியவர். ஈழ தமிழர்கள் படுகொலை செய்தபோது நடிகர்கள் சார்பாக உண்ணாவிரதம் இருக்க வேண்டும் என்று முடிவெடுத்து அதை செயல்படுத்தியவர் விஜயகாந்த்தான். அதேபோல் பிரபாகரன் மீது இருந்த பற்றின் காரணமாக தனது மகனுக்கும் பிரபாகரன் பெயரை சூட்டினார்.
நடிகராக கலக்கிவந்த விஜயகாந்த் ஒருகட்டத்தில் நடிகர் சங்க தலைவராக மாறினார். அந்தப் பதவியை பொறுப்பாக பார்த்த விஜி சங்கத்துக்கு இருந்த ஒரு கோடி ரூபாய் கடனை அடைத்து கூடுதலாக ஒன்றரை கோடி ரூபாயை வங்கியில் டெபாசிட் செய்துவிட்டு அப்பதவியிலிருந்து விலகினார். அதனாலேயே அவரை சினிமா நடிகர்கள் இன்று மதிப்பதற்கான காரணங்களில் ஒன்றாகும்.
அரசியல் என்ட்ரி: அரசியலில் நுழைந்த விஜயகாந்த் கருணாநிதிக்கும், ஜெயலலிதாவுக்கும் பெரும் போட்டியாக உருவெடுத்தார். ஒருகட்டத்தில் இரண்டு கட்சிகளுமே விஜயகாந்த்துடன் கூட்டணி வைத்துக்கொள்வது நலம் என்ற முடிவுக்கு வந்தன. அதன்படி அதிமுகவுடன் கூட்டணி வைத்த விஜயகாந்த் எதிர்க்கட்சி தலைவராக மாறி பிறகு அரசியலில் சறுக்கினார். பிறகு உடல்நிலையும் சரியில்ல்லாமல் போக அறுவை சிகிச்சை செய்துகொண்டு இப்போது ஓய்வில் இருக்கிறார். சில நாட்களுக்கு முன்புதான் மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜும் ஆனார்.
தியாகு பேட்டி: இந்நிலையில் விஜயகாந்த்தின் நெருங்கிய நண்பர்களில் ஒருவரான தியாகு எமோஷனலாக அவர் குறித்து பேசியிருக்கிறார். தனியார் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், "விஜயகாந்த் மாதிரி ஒரு தைரியசாலியை பார்க்க முடியாது.ஒருமுறை விஜயகாந்த்தின் அலுவலகத்திலிருந்து நானும் அவரும் வெளியே வந்தபோது ஒரு பெண்ணின் செயினை அறுத்துக்கொண்டு ஒருவன் ஓடினான்.
அய்யோ திருடன் என்று அந்த பெண் கத்தியதும் விஜயகாந்த் அந்த திருடனை பிடித்து செயினை வாங்கி உரிய பெண்ணிடம் ஒப்படைத்தார். அந்தப் பெண் உடனடியாக விஜியின் காலில் விழுந்துவிட்டார். அந்தப் பெண்ணை அனுப்பிவிட்டு என்னிடம் அந்த திருடனை காண்பித்து இவனை என்னடா பண்ணலாம் என்று கேட்டார். நான், டேய் விட்ருடா என்று சொன்னேன்.
உடனே அந்த செயின் அறுத்த நபர், 'அண்ணே நான் உங்கள் பெரிய ரசிகன் அண்ணே' என்று அழுதபடி விஜயகாந்த்தை பார்த்து சொன்னான். இவர் உடனடியாக அந்த திருடனுக்கு பளார் பளார் என 2 அறைகளை கொடுத்துவிட்டு என் ரசிகனாக இருந்துகொண்டு ஏன் டா இப்படி பண்ணின என்று கோபமாக திட்டி துரத்திவிட்டுட்டான். அப்படி இருந்தவனை இப்போ இப்படி பார்க்குறதுக்கே ரொம்ப கஷ்டமா இருக்கு" என்றார்.


Click it and Unblock the Notifications











