இரண்டு விஜய்கள்.. பக்கா ஆக்ஷன்..GOAT ரகசியம் பகிர்ந்த நடிகர்.. வேற லெவல்
சென்னை: தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கியிருக்கும் விஜய் சினிமாவிலிருந்து ஒதுங்க முடிவு செய்திருக்கிறார். ஒரு படத்தில் மட்டும் நடிப்பேன் என்று அறிவித்துவிட்டார். இது அவரது ரசிகர்களுக்கு பெரும் வருத்தத்தை கொடுத்திருக்கிறது. இப்போது அவர் GOAT படத்தில் நடித்துவருகிறார். படத்தின் இறுதிக்கட்ட பணிகள் அமெரிக்காவில் இப்போது நடந்துவருகின்றன. தனக்கான பணிகளை முடித்துவிட்டு விஜய் நேற்றிரவு அமெரிக்காவிலிருந்து சென்னைக்கு திரும்பினார்.
வெங்கட் பிரபு இயக்கத்தில் GOAT படத்தில் நடித்துவருகிறார் விஜய். அஜித்துக்கு எப்படி வெங்கட் பிரபு மெகா ஹிட்டை கொடுத்தாரோ அதேபோல் விஜய்க்கும் கொடுப்பார் என்று அவரது ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கிறார்கள். அதுமட்டுமின்றி தனது நடிப்பில் கடைசியாக வெளியான லியோ விமர்சன ரீதியாக அடி வாங்கியது. அதன் காரணமாக கண்டிப்பாக இந்தப் படத்தை விமர்சன ரீதியாகவும் நல்ல படமாக கொடுக்க வேண்டுமென்று விஜய்யும் மும்முரமாக உழைத்துவருகிறார்.

விறுவிறு ஷூட்டிங்: முதலில் படத்தின் பூஜை சென்னை பிரசாத் ஸ்டூடியோவில் போடப்பட்டு அங்கு ஒரு பாடல் காட்சியும் ஷூட் செய்யப்பட்டது. அதனையடுத்து தாய்லாந்து, துருக்கி நாடுகளில் ஷூட்டிங் நடத்தப்பட்டது. தொடர்ந்து வேறு ஒரு லொக்கேஷனில் ஷூட்டிங் நடத்த படக்குழு திட்டமிட்டது. ஆனால் யுவன் ஷங்கர் ராஜா மற்றும் வெங்கட் பிரபு ஆகியோரின் சகோதரி பவதாரிணி உயிரிழந்ததால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. இதனையடுத்து மீண்டும் தொடங்கிய ஷூட்டிங் கடைசியாக ரஷ்யாவில் நடந்தது. சில நாட்களுக்கு முன்புதான் அமெரிக்காவில் படத்தின் கிராஃபிக்ஸ் பணிகள் நிறைவடைந்தன. படமானது செப்டம்பர் 5ஆம் தேதி ரிலீஸாகிறது.
டைம் ட்ராவல்: இந்தப் படம் டைம் ட்ராவல் ஜானரில் உருவாகிறது என்றும் விஜய் இரட்டை வேடங்களில் நடிக்கிறார் என்றும் கூறப்படுகிறது. படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் விஜய், பிரசாந்த், பிரபுதேவா, அஜ்மல் ஆகியோ கமாண்டோ ட்ரெஸ்களில் கையில் துப்பாக்கியுடன் வந்ததை பார்த்த ரசிகர்கள் ஒருவேளை இதில் விஜய் கமாண்டோவாக நடிக்கிறாரோ என்ற கேள்வியை எழுப்பிவருகின்றனர். அதுமட்டுமின்றி, தந்தை விஜய்க்கு நடக்கும் துரோகத்தை மகன் விஜய் டைம் ட்ராவல் செய்து முறியடிப்பதுதான் ஒன்லைன் என்றும் சொல்லப்படுகிறது.
ஃபர்ஸ்ட் சிங்கிள்: இதற்கிடையே படத்திலிருந்து முதல் சிங்கிள் சில மாதங்களுக்கு முன்பு வெளியானது. பல வருடங்களுக்கு பிறகு விஜய் படத்துக்கு யுவன் இசையமைப்பதால் உச்சக்கட்ட எதிர்பார்ப்பு நிலவியது பாடலுக்கு. பார்ட்டி ஒன்னு தொடங்கட்டுமா என்று ஆரம்பிக்கும் அந்தப் பாடலை விஜய் பாட, மதன் கார்க்கி எழுதியிருந்தார். பாடலின் ஆரம்ப வரிகள் விஜய்யின் அரசியல் வருகையை குறிக்கும் வகையில் இருந்தன. பாடலுக்கு கலவையான விமர்சனங்களே கிடைத்தன.
வைபவ் பேட்டி: இந்நிலையில் கோட் படத்தில் நடித்துவரும் வைபவ் படம் குறித்து சில விஷயங்களை பேசியிருக்கிறார். அவர் கூறுகையில், “கோட் படம் பக்கா ஆக்ஷன் ட்ரீட்டாக இருக்கும். வேற லெவலில் திருப்திப்படுத்தும். படத்தில் தளபதி விஜய்யுடன் பல காட்சிகளில் நடித்திருக்கிறேன். இரண்டு விஜய்யை பார்த்ததில் நான் மிகவும் அதிர்ஷ்டசாலி. நடிப்பு மிரட்டல்” என்று குறிப்பிட்டிருக்கிறார். தற்போது அந்த வீடியோ சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியுள்ளது.


Click it and Unblock the Notifications











