நான் நன்றாக நடித்திருப்பதாக நீங்கள் நினைத்தால் அதற்கு ஜோதிகாதான் காரணம்!
காற்றின் மொழி படம் பற்றி நடிகர் விதார்த் பகிர்ந்துகொண்டார்
சென்னை: காற்றின் மொழியில் நன்றாக நடித்திருந்தால் அதற்கு ஜோதிகாவே காரணம் என விதார்த் தெரிவித்துள்ளார்.
ராதாமோகன் இயக்கத்தில் ஜோதிகா, விதார்த், எம்.எஸ்.பாஸ்கர், மனோபாலா மற்றும் பலர் நடித்திருக்கும் படம் காற்றின் மொழி. இப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது.

அப்போது பேசிய நடிகர் விதார்த் கூறியதாவது...
ராதாமோகன் சார் படத்தில் நடிக்க வேண்டுமென்று எனக்கு நீண்ட நாள் ஆசை இருந்தது. ஒரு நாள் திடீரென தயரிப்பாளர் தனஞ்செயன் போன் செய்து, இப்படி ஒரு படம் பண்ணுகிறோம். அதில் ஒரு முக்கிய கதாபாத்திரம் இருக்கிறது நடிக்கிறீர்களா எனக் கேட்டார். ராதாமோகன் படம், ஜோதிகா நடிக்கிறாங்க எனும்போது எப்படி வேண்டாம்னு சொல்ல முடியும்? உடனே ஒகே என சொல்லிவிட்டேன்.
ஆனால், படத்தின் கதையை கேட்டபிறகுதான் பயம் வந்தது. ஏண்டா இந்த படத்துல ஒத்துகிட்டோம் என பயந்தேன். இயக்குனர் ராதாமோகன் முதலில் நீளமான காட்சியை படமாக்க வேண்டும் என்றார். நான் தயக்கத்தோடு கொஞ்சம் சின்ன சீன் எடுக்கலாமே அப்போதுதான் உங்களை நானும் என்னை நீங்களும் புரிந்துகொள்ள முடியும் என்றேன். உடனே சரி என்று சொல்லிவிட்டார்.
படப்பிடிப்பில் ஜோதிகா மற்றும் எம். எஸ். பாஸ்கரின் நடிப்பைப் பார்த்தவுடன் இன்னும் பயம் அதிகரித்தது. ஜோதிகாவின் ஒவ்வொரு ஆக்ஷனுக்கும் ராதாமோகன் அருமை என சைகையில் பாராட்டிக்கொண்டே இருந்தார். மிகச் சாதாரணமாக எனதருகில் உட்கார்ந்திருந்த எம்.எஸ்.பாஸ்கர் சார், ஷாட் சொன்னதும் சட்டென்ன அழுது நடித்தது மிக ஆச்சர்யாமாக இருந்தது. நான் இப்படத்தை நன்றாக நடித்து முடிப்பதற்கு ஒட்டுமொத்த படக்குழுவும் காரணம்.
அவ்வளவு பெரிய நடிகையாக இருக்கும் ஜோதிகா என்னுடன் பேசுவாரா என்ற தயக்கம் ஆரம்பத்தில் இருந்தது. ஆனால் அவர், நீங்க 'ஜோ' ந்னு கூப்பிடுங்க எனச் சொல்லி அதிர்ச்சியூட்டினார். நான் இப்படத்தில் நன்றாக நடித்திருக்கிறேன் என சொன்னால் அதற்கு ஜோதிகா மேடம்தான் காரணம் என்றார்.


Click it and Unblock the Notifications











