Actor Vijay Antony: பணத்திற்காக வாக்கை விற்காதீர்கள்.. தெளிவுபடுத்திய நடிகர் விஜய் ஆண்டனி!
சென்னை: மக்களவை தேர்தலையொட்டி இன்றைய தினம் தமிழகம், புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில் முதல் கட்டமாக வாக்குப்பதிவு நடந்து வருகிறது. இதில் பிரபலங்கள், பொதுமக்கள் திரளாக பங்கேற்று தங்களது வாக்குகளை பதிவு செய்தனர். நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், அஜித், சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி, சூர்யா, கார்த்தி, தனுஷ், விஷால் என முன்னணி நடிகர்கள் தங்களது வாக்குகளை பதிவு செய்துள்ளனர்.
நடிகர் விஜய் ஆண்டனியும் இன்றைய தினம் தன்னுடைய வாக்கினை பதிவு செய்துள்ளார். வாக்குகளை வீணடிக்காமல் கண்டிப்பாக வாக்களியுங்கள் என்று அவர் மீண்டும் வலியுறுத்தியுள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்பு ரோமியோ படத்தின் பிரமோஷனுக்காக பேசிய அவர், இதே கருத்தை வலியுறுத்தியிருந்தார். நோட்டாவிற்கு போடுவதை காட்டிலும் யாருக்காவது போடுங்கள் என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.

லோக்சபா தேர்தல் 2024: மக்களவைக்கான தேர்தல் இன்று துவங்கி பல கட்டங்களாக வரும் ஜூன் மாதம் 1ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இன்றைய தினம் முதல் கட்டமாக தமிழகம், புதுச்சேரியில் 40 தொகுதிகளில் நடைபெற்றுள்ளது. காலை 7 மணிக்கே இந்த வாக்குப்பதிவு துவங்கி விறுவிறுப்பாக நடந்தது. திரைத்துறை பிரபலங்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் தங்களது வாக்குகளை பதிவு செய்தனர். நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், அஜித், சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி, விஷால், சூர்யா, கார்த்தி, தனுஷ் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் தங்களது வாக்குகளை பதிவு செய்துள்ளனர். பொதுமக்களையும் வாக்குப்பதிவு செய்ய வலியுறுத்தியுள்ளனர்.
விஜய் ஆண்டனி வாக்குப்பதிவு: இதனிடையே தன்னுடைய வாக்கினை பதிவு செய்த நடிகர் விஜய் ஆண்டனி, வாக்கினை வீணடிக்காமல் பிடித்தவர்கள் யாருக்காவது வாக்களியுங்கள் என்று கேட்டுக் கொண்டார். கூட்டநெரிசல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக வராமல் இருந்திருக்கலாம் என்று குறிப்பிட்ட விஜய் ஆண்டனி, தான் வந்த நேரத்தில் மிகவும் காலியாக இருந்ததாகவும் தான் ஜாலியாக வந்து வாக்கினை பதிவு செய்ததாகவும் கூறினார். தேர்தல் ஆணையத்தினர் சிறப்பான ஏற்பாடுகளை செய்திருந்ததாகவும் அவர் பாராட்டு தெரிவித்துள்ளார். மேலும் வசதி இருப்பவர்கள் ஓட்டிற்காக பணம் வாங்க வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டார்.
அரசியலில் இறங்க திட்டமில்லை: தேர்தலில் போட்டியிட இதுவரை தனக்கு எந்த திட்டமும் இல்லை என்றும் வருங்காலத்தில் இது எப்படி மாறும் என்று தெரியவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். தொடர்ந்து பேசிய அவர் பணத்திற்காக நமது வாக்கினை விற்க வேண்டாம் என்றும் ஆனால் அதிகமான பணத்தேவை இருந்தால் இதை பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் கூறினார். கடந்த சில தினங்களுக்கு முன்பு ரோமியோ பட பிரமோஷனின்போது பேசிய விஜய் ஆண்டனி, ஓட்டுக்கு பணம் கொடுத்தால் வாங்கலாம் என்று சர்ச்சை கருத்தை கூறியிருந்தார். இந்நிலையில் அவசர தேவையிருந்தால் வாங்கலாம் என்று அதை தெளிவுப்படுத்தியுள்ளார்.
ஓட்டுக்கு பணம் வாங்கலாம்: ஓட்டுக்கு பணம் வழங்குவது பெறுவது தவறாக இருந்தாலும் வறுமை சூழல் கருதி ஓட்டுக்கு வழங்கப்படும் பணத்தை வாங்கிக் கொள்ளலாம் என்றும் அது உங்கள் பணம்தான் என்றும் முன்னதாக தனது பேட்டியில் விஜய் ஆண்டனி தெரிவித்திருந்தார். அது உங்கள் பணம்தான் என்று பேசிய அவர், ஆனால் பணம் பெற்றதால் அந்த கட்சிக்குத்தான் ஓட்டு என்பதை முடிவு செய்யாமல் நல்லவர்களுக்கு ஓட்டளிக்கலாம் என்றும் அவர் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











