Actor Vijay: ஹீரோவாக 31 ஆண்டுகளை கடந்த விஜய்.. ரசிகர்கள் கொண்டாடும் தளபதி!
சென்னை: நடிகர் விஜய் கடந்த 1992ம் ஆண்டில் வெளியான நாளைய தீர்ப்பு படம் மூலம் கோலிவுட்டில் ஹீரோவாக என்ட்ரி கொடுத்தவர்.
முன்னதாக தன்னுடைய 10வது வயதிலேயே வெற்றி என்ற படத்தில் நடிக்கத் துவங்கிவிட்டார் விஜய். அந்தப்படத்தை தொடர்ந்து குழந்தை நட்சத்திரமாக சில படங்களில் நடித்துள்ளார்.
இந்நிலையில் தற்போது விஜய் சினிமாவில் தன்னுடைய 31 ஆண்டுகளை கடந்துள்ளார். இதையொட்டி ரசிகர்கள் தற்போது ட்விட்டரில் விஜய் தொடர்பான ஹேஷ்டேக்குகளை தொடர்ந்து ட்ரெண்டிங்கில் வைத்துள்ளனர்.

நடிகர் விஜய்: நடிகர் விஜய் தன்னுடைய 10வது வயதிலேயே படங்களில் நடிக்கத் துவங்கிவிட்டார். விஜய்யின் நடிப்பில் வெற்றி என்ற படம் கடந்த 1984ம் ஆண்டில் வெளியானது. இந்தப் படத்தில் நடித்ததற்காக அப்போதே தயாரிப்பாளரும் நடிகருமான பிஎஸ் வீரப்பாவிடம் இருந்து 500 ரூபாய்க்கான செக்கை பெற்றுள்ளார் விஜய். இந்த வெற்றிப் படத்தை தொடர்ந்து விஜய்யின் வாழ்க்கையில் வெற்றி அத்தனை எளிதாக கிடைத்துவிடவில்லை. அதிகமான முயற்சிகளை தொடர்ந்தே தற்போது ரசிகர்கள் கொண்டாடும் தளபதியாக நடைபோட்டு வருகிறார்.
நாளைய தீர்ப்பு படம்: நாளைய தீர்ப்பு கடந்த 1992ம் ஆண்டு டிசம்பர் 4ம் தேதி வெளியானது. இந்நிலையில் தற்போது 31 ஆண்டுகளை திரையுலகில் அவர் பூர்த்தி செய்யவுள்ளார். விஜய்யின் ஆரம்ப கால திரைப்படங்கள் அதிகமான விமர்சனங்களை பெற்றன. இவருடைய கேரியரை மாற்றிய படங்கள் என்றால் பூவே உனக்காக, லவ் டுடே, காதலுக்கு மரியாதை, நினைத்தேன் வந்தாய், பிரியமுடன் ஆகிய படங்கள்தான். வித்தியாசமான இயக்குநர்களின் வித்தியாசமான கதைக்களத்தில் தன்னை சிறப்பாக நிலைநிறுத்திக் கொண்டார் விஜய்.
கொண்டாடிய ரசிகர்கள்: துள்ளாத மனமும் துள்ளும் போன்ற படங்கள் விஜய்யை ரசிகர்கள் கொண்டாட செய்த படங்கள். விஜய்யின் 25வது படமான கண்ணுக்குள் நிலவு படம் கடந்த 2000ம் ஆண்டில் வெளியானது. தொடர்ந்து பத்ரி, ஷாஜகான் போன்ற படங்களும் விஜய்யின் சினிமா கேரியரில் மறக்க முடியாத படங்களாக அமைந்தன. தொடர்ந்து வசீகரா உள்ளிட்ட படங்களின்மூலம் தனக்கு காமெடி மிகவும் சிறப்பாக வரும் என்பதை நிரூபித்தார் விஜய்.
விஜய்யின் அதிரடி சரவெடி: அடுத்தடுத்து தன்னுடைய படங்களில் காமெடி, ஆக்ஷன், நடனம், சென்டிமெண்ட் என அனைத்து அம்சங்களும் இருக்கும்படி பார்த்துக் கொண்டார். தொடர்ந்து இளைய தளபதியாக ரசிகர்களிடையே மாஸ் காட்டி வந்த விஜய், தற்போது தளபதியாகவும் கொண்டாடப்படுகிறார். அவரது அடுத்தடுத்த படங்கள் ரசிகர்களை கொண்டாட செய்து வருகின்றன. அவரது படங்கள் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் படங்களை வெற்றிப்படமாக்க அவரது ரசிகர்கள் மிகச்சிறப்பாக துணை நிற்கின்றனர்.
விஜய்யின் தளபதி 68 படம்: அவரது அடுத்தடுத்த பீஸ்ட், வாரிசு, லியோ படங்கள் கலவையான விமர்சனங்களை பெற்ற போதிலும் வசூல்மழை பொழிய தவறுவதில்லை. இந்நிலையில் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் தளபதி 68 படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படம் டைம் டிராவலை மையமாக கொண்டு உருவாகி வருகிறது. சென்னை உள்ளிட்ட இடங்களில் படத்தின் சூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அடுத்த ஆண்டு கோடை கொண்டாட்டமாக படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
31 ஆண்டுகளை கடந்த விஜய்: இந்நிலையில் விஜய் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமாகி 31 ஆண்டுகளை நாளை நிறைவு செய்யவுள்ளார். இதையொட்டி ரசிகர்கள் தொடர்ந்து விஜய் சம்பந்தப்பட்ட விஷயங்களை ட்ரெண்டாக்கி வருகின்றனர். #31yearsofVijayism, #thalapathyvijay உள்ளிட்ட ஹேஷ்டேக்குகள் தொடர்ந்து ட்ரெண்டிங்கில் இருந்ததை பார்க்க முடிந்தது. ஹீரோவாக 31 ஆண்டுகளை கடந்துள்ள விஜய் சினிமாவில் சிறுவனாக நடிக்கத் துவங்கி ஏறக்குறைய 40 ஆண்டுகளை நெருங்கியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











