விஜய்யை கொண்டாடும் கேரளா.. தலைக்கனமே இல்லாத மனுஷன்.. மகிழ்ச்சியில் பேன்ஸ்!
சென்னை: கேரளாவுக்கு சென்றுள்ள நடிகர் விஜய்க்கு அங்கு உற்சாக வரவேற்பு கொடுக்கப்பட்டு வருகிறது. விஜய் கேரளாவிற்கு சென்ற நாளில் இருந்தே அவரை தலையில் தூக்கிவைத்து ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.அதற்கு ஈடாக விஜய்யும், தனது ரசிகருக்காக நேரம் காலம் பார்க்காமல் அவர்களை சந்தித்து புகைப்படம் எடுத்து வருகிறார்.
வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் நடிக்கும் GOAT படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு கேரளாவில் நடைபெற்று வருகிறது. இதற்காக 14 ஆண்டுகளுக்குப் பிறகு கேரளா சென்றுள்ளார் நடிகர் விஜய். இவர் இயக்குநர் சித்திக் இயக்கத்தில் வெளியான காவலன் படத்தின் படப்பிடிப்புக்காக 2010ம் ஆண்டு நடிகர் விஜய் கேரளா சென்றார். அதன் பிறகு அவர் எந்த படத்தின் படப் பிடிப்புக்காகவும் கேரளா செல்லவில்லை.

தளபதி விஜய்: தற்போது இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து வரும் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படப்பிடிப்புக்காக கேரளாவில் இருக்கிறார். படப்பிடிப்பு நேரம் போக, தன்னைக் காண குவியும் ரசிகர்களை தினமும் சந்தித்து வருகிறார். கேரள மாநிலம் சென்றபோதே அவருக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு கொடுக்கப்பட்டது. தொடர்ந்து, கடந்த 3 நாட்களாக அங்கிருக்கும் ரசிகர்களின் ஆரவாரமும், விஜய்யின் கியூட் மொமண்ட்ஸ் தொடர்பான வீடியோக்களும் வைரலாகி வருகிறது.
சேச்சி சேட்டன்மார்களே: நேற்றைய தினம் கூட, தன்னை காண வந்த ரசிகர்களிடம் வேன் மீது ஏறி நின்று மலையாளத்தில் பேசினார். அதில்,சேச்சி சேட்டன்மார்களே, உங்களை பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி. ஓணம் பண்டிகையில் நீங்கள் எந்த அளவுக்கு சந்தோஷமாக இருப்பீர்களோ, அதே அளவுக்கு சந்தோஷத்துடன் உங்களை பார்ப்பது மகிழ்ச்சியளிக்கிறது. எல்லோருக்கும் கோடான கோடி நன்றிகள். தமிழ்நாட்டில் என்னுடைய நண்பா, நண்பிகளைப்போல நீங்கள் வேற லெவல். எல்லோருக்கும் கோடான கோடி நன்றிகள் என்றார்.

நெகிழ்ச்சி வீடியோ: விஜய் கேரளாவிற்கு வந்ததில் இருந்து அவரை கேரளா ரசிகர்கள் தலையில் தூக்கிவைத்து கொண்டாடி வருகின்றனர். அதற்கு ஈடுகொடுக்கும் அளவிற்கு விஜய்யும் கொஞ்சம்கூட முகம் சுளிக்காமல், நேரம் காலம் பார்க்காமல் ரசிகர்களுடன் சிரித்த முகத்துடன் புகைப்படம் எடுத்து வருகிறார். நேற்று படப்பிடிப்பை முடித்துவிட்டு விஜய் வந்த போது அவரை பார்க்க நீண்ட நேரமாக காத்திருந்த மாற்றத்திறனாளி இளைஞரின் அருகில் சென்று, முட்டிப்போட்டு புகைப்படம் எடுத்துக்கொண்டார். விஜய்யின் இந்த நெகிழ்ச்சியான செயல் பலரை நெகிழவைத்துள்ளது. இணையத்தில் வைரலாகி வரும் இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் தலைகனமே இல்லாத மனுஷன் என்று கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்


Click it and Unblock the Notifications











