Actor Vijayakanth: ஒரே ஆண்டில் 18 படங்கள்.. 1984ல் விஜயகாந்த் செய்த மேஜிக்!
சென்னை: நடிகர் விஜயகாந்த் 30 ஆண்டுகளை கடந்த திரை வாழ்க்கையில் ஏராளமான ரசிகர்களை வசப்படுத்தினார். தன்னுடைய அரசியல் மற்றும் பொது வாழ்க்கையிலும் இவர் செய்த மேஜிக் சிறப்பானது. மிகவும் கடினமான சூழ்நிலைகளை எதிர்கொண்டே இவர் சினிமாவில் நடிக்கும் வாய்ப்பை பெற்றார். வில்லனாகவே இவரது திரைப்பயணம் துவங்கியது. ஆனால் அழுத்தமான கதைக்களங்களை தேர்ந்தெடுத்து நடித்த இவர் ஒரு கட்டத்தில் ஆக்ஷன் அவதாரத்திற்கு தாவினார். இதுவே ரசிகர்களுக்கு பிடித்தமான விஷயமாக அமைந்து, விஜயகாந்தை கொண்டாட வைத்தது.
அடுத்தடுத்த படங்களால் தன்னுடைய ரசிகர்களை கவர்ந்த கேப்டன், கடைக்கோடி மக்களின் வாழ்வாதாரம் குறித்தும் யோசித்தவர். தன்னுடன் நடிக்கும் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட்களுக்காகவும் குரல் கொடுத்தவர். தன்னுடைய அலுவலகத்திற்கு வந்த யாரும் பசியுடன் வெளியில் செல்லக்கூடாது என்பதில் உறுதி காட்டியவர். இறந்த பின்பும் ஒரு மனிதன் கொண்டாடப்படுவதற்கு அவர் வாழும் காலத்தில் செய்த பணிகளே சாட்சியாக அமையும் என்பதற்கு உதாரணமாக இருந்தவர். ஒரு கட்டத்தில் அரசியலிலும் மாஸ் காட்டிய விஜயகாந்த், எதிர்கட்சி தலைவராக அதிரடியாக இருந்தவர்.

நடிகர் விஜயகாந்த்: நடிகர் விஜயகாந்த் நடிப்பு, தயாரிப்பு, அரசியல் என பல தளங்களில் தன்னை சிறப்பாக வெளிப்படுத்தியவர். கடந்த 1979ம் ஆண்டில் துவங்கிய இவரது திரைப்பயணம் 30 ஆண்டுகளை கடந்து சிறப்பாக அமைந்தது. வில்லனாக துவங்கிய இவரது திரைப்பயணம், ஆரம்ப காலத்தில் சிறப்பாக அமையவில்லை. சில ப்ளாப்களை கொடுத்த விஜயகாந்த், தொடர்ந்து வெற்றிப்பட நாயகனாக தன்னை வெளிப்படுத்தினார். சட்டம் ஒரு இருட்டறை போன்ற படங்கள் இவருக்கு சிறப்பாக அமைந்தது. முனனதாக தூரத்து இடி முழக்கம் படமும் விஜயகாந்திற்கு சிறப்பாக கைக்கொடுத்த நிலையில், அதிரடி ஆக்ஷன் ஹீரோவாக தன்னை வெளிப்படுத்தினார்.
அதிரடி ஆக்ஷன் படங்கள்: ஆக்ஷன் படங்களில், குறிப்பாக காவல்துறை அதிகாரியாக விஜயகாந்த் நடித்த படங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வெற்றிப் படங்களாக அமைந்தன. தன்னுடைய படங்களில் டூப் போடாமல் ஸ்டண்ட் காட்சிகளில் தானே நடித்தவர் விஜயகாந்த். இதனால் இவரது தோள்பட்டையில் அதிகமான காயங்கள் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. ஆனாலும் டூப் போடுபவர்களும் மனிதர்கள் தானே என்று கூறிய விஜயகாந்த், தொடர்ந்து ஆக்ஷன் காட்சிகளில் அதிரடியாக நடித்து ரசிகர்களை கவர்ந்தார். புலன் விசாரணை படத்தில் ட்ரெயின் மீது இருந்தபடி இவர் நடித்த சண்டைக்காட்சி ரசிகர்களை அதிகமாக கவர்ந்தது. இந்தப் படம் இவரது 100வது படம்.
ஒரே ஆண்டில் 18 படங்கள்: இத்தகைய சிறப்புகளை கொண்டிருந்த விஜயகாந்த் நடிப்பில் ஒரே ஆண்டில் 18 படங்கள் வெளியாகின. கடந்த 1984ம் ஆண்டில் விஜயகாந்த் நடிப்பில் நூறாவது நாள், குடும்பம், குழந்தை ஏசு, வைதேகி காத்திருந்தாள், நல்ல நாள், வீட்டுக்கு ஒரு கண்ணகி உள்ளிட்ட 18 படங்கள் வெளியாகின. தன்னுடைய நிறம் உள்ளிட்டவற்றால் தன்னை துவக்கத்தில் புறக்கணித்த திரையுலகத்திற்கு பதிலடி கொடுக்கும்வகையில் தொடர்ந்து நிற்கக்கூட நேரமில்லாமல் 18 படங்களை நடித்துக் கொடுத்தார் சாதனை நாயகன் விஜயகாந்த். இந்தத் தகவலை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் இயக்குநரும் சினிமா விமர்சகருமான ப்ளூ சட்டை மாறன்.
பசியை போக்கிய கொடையாளர்: நடிகர் விஜயகாந்தின் மறைவு இந்திய அளவில் அளவிற்கு அதிகமான ரசிகர்கள் துயரத்திற்கு உள்ளாக்கியுள்ளது. அனைத்து தரப்பு மக்களின் பசியை மட்டுமே யோசித்தவர் விஜயகாந்த். தன்னுடைய துவக்கக் காலத்தில் தான் சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது, சூட்டிங் காரணமாக தன்னை இடையிலேயே எழுப்பிய சம்பவத்தை தன்னுடைய பேட்டிகளில் பகிர்ந்துள்ளார் விஜயகாந்த். அதுபோன்ற சூழ்நிலை யாருக்கும் வரக்கூடாது என்பதில் அவர் தீவிரமாக இருந்தார். தன்னை தேடி சினிமா ஆசையில் தன்னுடைய அலுவலகத்திற்கு வரும் அனைவரின் பசியை போக்கியவர் விஜயகாந்த்.


Click it and Unblock the Notifications











