வொர்க் அவுட்டில் மிரட்டும் விஷால்; அடுத்த படம் பாக்ஸிங் கதையா? வீடியோ வெளியிட்டு சொன்னது என்ன?
சென்னை: இயக்குநர் ஹரி இயக்கத்தில் விஷால் நடிப்பில் அண்மையில் வெளியாகி இருந்த படம் ரத்னம். இந்த படத்தின் புரோமோசன் வேலைகளுக்காக படத்தின் இயக்குநர் ஹரி வேலூர் மாவட்டம் முழுவதும் நடையோ நட என நடந்தார். விஷால் பல்வேறு யூட்டூப் சேனல்களுக்கு பேட்டி கொடுத்து தீவிரமாக புரோமசன் செய்து வந்தார். ஆனால் படம் ஓ.கே. ரகமாக இருந்ததால் பெரிய அளவில் வசூலைக் குவிக்கவில்லை. இதற்கிடையில் சுந்தர்.சி-யின் அரண்மனை 4 வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றதால், ரத்னம் திரைப்படத்தின் பக்கம் ரசிகர்கள் பெருமளவு செல்லவில்லை.
தமிழ் சினிமாவில் தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தைக் கொண்டுள்ள நடிகர்களில் விஷாலும் ஒருவர். இவரின் ஆரம்ப காலகட்டங்களில் வெற்றிப் படங்கள் மக்கள் மத்தியில் விஷாலைக் கொண்டு சேர்த்ததால், இன்றைக்கும் விஷால் படம் என்றால் மக்கள் மத்தியில் ஒரு சிறிய எதிர்பார்ப்பு இருந்து வருகின்றது. ஆனால், விஷால் தன்னை ஒரு ஆக்ஷன் ஹீரோவாக நிலைநிறுத்தவேண்டும் என்ற நோக்கில் கதைகளைத் தேர்வு செய்து வருவதால், சில படங்கள் கை கொடுக்கின்றது. பல படங்கள் எடுபடுவதில்லை.

சொதப்பும் விஷால்: சமீப காலத்தில் விஷால் நடிப்பில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பரவலாக பேசப்பட்ட படம் என்றால் அது, இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரனின் இயக்கத்தில் வெளியான, மார்க் ஆண்டனி திரைப்படம் ஜனரஞ்சகமான படமாக அமைந்தாலும் அந்த படத்தின் வெற்றிக்கு மிகப்பெரிய காரணமாக இருந்தது, எஸ்.ஜே சூர்யாதான். படம் வெளியான பின்னர் ரசிகர்கள் அனைவரும் எஸ்.ஜே சூர்யாவைக் கொண்டாடித் தீர்த்தனார்.
துப்பறிவாளன் 2: இப்படியான நிலையில் விஷால் நடிப்பில் வெளியான ரத்னம் திரைப்படம் எடுபடாததால், விஷால் தனது அடுத்த படத்தில் தீவிரமாக கவனம் செலுத்தி வருகின்றார். இயக்குநர் மிஷ்கினிடம் இருந்து உரிமையை வாங்கி வைத்துள்ள துப்பாறிவாளன் படத்தின் இரண்டாம் பாகத்தை தானே இயக்கி நடிப்பது குறித்து தனது நெருங்கிய வட்டாரங்கள் மத்தியில் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு வருகின்றாராம். படத்தின் பட்ஜெட் அதிகமாக வாய்ப்பிருப்பதால் பெரிய புரொடெக்ஷன்ஸ் யாரையாவது அணுகலாமா எனவும் யோசித்து வருகின்றாராம். அதேபோல், குட்டிப்புலி, கொம்பன், மருது மற்றும் விருமன் உள்ளிட்ட படங்களை இயக்கிய முத்தையா இயக்கத்திலும் நடிக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படுகின்றது.
வொர்க்-அவுட் வீடியோ: இந்நிலையில், நடிகர் விஷால், தீவிரமாக உடற்பயிற்சி செய்து வரும் வீடியோவை தனது சமூகவலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோவை அவரது ரசிகர்கள் லைக் செய்து வருகின்றனர். வீடியோவில் விஷால் பாக்ஸிங் செய்வதைப் போன்று கைகளை வீசுவதால் விஷாலின் அடுத்த படம் பாக்ஸிங் கதையை மையமாக வைத்து இருக்குமோ என்ற பேச்சுகள் கோலிவுட்டில் பரவி வருகின்றது. அந்த வீடியோவில் நடிகர் விஷால், " உடற்தகுதி எப்போதும் முக்கியமானது. காலை அல்லது மாலை என எதாவது ஒரு நேரத்தில் உடற்பயிற்சி செய்வதால், அது உடலுக்கும் மனதிற்கும் ஆன்மாவிற்கும் புத்துணர்வை எப்போதும் கொடுக்கும். ஒவ்வொரு நாள் காலையிலும் நடப்பதும் அதைத்தொடர்ந்து சைக்கிள் ஓட்டுவதும் உடலுக்கு நல்லது. நமது வாழ்க்கையில் நமது லட்சியங்களை அடையவும், ஆன்மாவிற்கு நேர்மறையான எண்ணங்களை ஏற்படுத்தவும் உடற்பயிற்சி மிகவும் முக்கியம்"என தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











