Vishnu Vishal; திடீரென சோஷியல் மீடியாவில் இருந்து விலகிய விஷ்ணு விஷால்.. ஏன் தெரியுமா?
சென்னை: நடிகர் மற்றும் தயாரிப்பாளர் விஷ்ணு விஷால், தனது சமூக வலைதளப் பக்கங்களிலிருந்து தற்காலிகமாக விலகுவதாக அறிவித்துள்ளார். விரைவில் வெளியாகவுள்ள 'இரண்டு வானம்' திரைப்படம் குறித்த புதிய தகவல்களுடன் திரும்புவேன் என அவர் தெரிவித்துள்ளார். இந்த எதிர்பார்ப்பு, ரசிகர்கள் மத்தியில் படத்தின் மீதான ஆவலை அதிகரித்துள்ளது.
'ராட்சசன்' என்ற ப்ளாக்பஸ்டர் வெற்றிப்படத்தை கொடுத்த விஷ்ணு விஷால் நடிப்பில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ஆர்யன் திரைப்படம் வெளியானது. இயக்குநர் பிரவீன் இயக்கத்தில், ஷ்ரத்தா ஸ்ரீநாத், செல்வராகவன்,மானசா சௌத்ரி.வாணி போஜன், கருணாகரன் ஆகியோர் நடித்த திரைப்படம் நல்ல விமர்சனத்தை பெற்றது.

நடிகர் விஷ்ணு விஷால்: இந்நிலையில், நடிகர் விஷ்ணு விஷால் தமது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், "சமூக வலைதளங்களில் இருந்து ஒரு சிறிய இடைவேளை எடுத்துக்கொள்கிறேன். பட அறிவிப்புகளுடன் விரைவில் திரும்புவேன். #IranduVaanam #GattaKusthi2" என்று விஷ்ணு விஷால் குறிப்பிட்டிருந்தார். இந்த அறிவிப்பு அவரது அடுத்த நகர்வு குறித்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 'இரண்டு வானம்' திரைப்படத்தை ராம் குமார் இயக்கியுள்ளார். 'முண்டாசுப்பட்டி' மற்றும் 'ராட்சசன்' போன்ற படங்களின் வெற்றியைத் தொடர்ந்து, ராம் குமார் - விஷ்ணு விஷால் இணையும் மூன்றாவது படமாக இதுவாகும். இப்படத்தில் மமிதா பைஜு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
சோஷியல் மீடியாவில் இருந்து விலகினார்: கடந்த ஜூன் மாதம், 'இரண்டு வானம்' படத்தின் 150 நாள் படப்பிடிப்பு நிறைவடைந்ததை விஷ்ணு விஷால் தெரிவித்திருந்தார். அப்போது, "இது ஒரு நீண்ட பயணம், விரைவில் பெரிய திரையில் நீங்களும் உணர்வீர்கள். இயக்குநர் ராம் குமார் மீண்டும் தனித்துவமான மற்றும் சுவாரஸ்யமான ஒன்றை உருவாக்கியுள்ளார்" என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ஏற்கனவே வெளியாகி பார்வையாளர்களிடம் கவனத்தை ஈர்த்தது.
'இரண்டு வானம்' என்ற தலைப்புக்கு ஏற்றவாறு, இரண்டு முக்கிய கதாபாத்திரங்களும் வானத்தில் எதிரெதிர் திசைகளில் அமர்ந்திருப்பது போல போஸ்டர் வடிவமைக்கப்பட்டிருந்தது. இது, ஒரே மாதிரியாகத் தோன்றும், ஆனால் வேறுபட்ட இரு உலகங்களின் கதைக்களத்தைக் குறிப்பதாகக் கருதப்படுகிறது.'இரண்டு வானம்' படத்திற்கு திபு நினன் தாமஸ் இசையமைக்க, தினேஷ் கே பாபு ஒளிப்பதிவை மேற்கொண்டுள்ளார். படத்தொகுப்பாளர் சான் லோகேஷ், கலை இயக்குனர் கோபி ஆனந்த், சண்டை பயிற்சியாளர் விக்கி மற்றும் ஆடை வடிவமைப்பாளர் கீர்த்திவாசன் போன்ற திறமையான கலைஞர்கள் குழுவில் இணைந்துள்ளனர்


Click it and Unblock the Notifications











