அச்சச்சோ..கேஜிஎஃப் ஹீரோ யாஷ் பிறந்தநாள் அதுவுமா இப்படியா? பேனர் வைத்த 3 பேர் மின்சாரம் தாக்கி பலி!
சென்னை: கேஜிஎஃப் திரைப்படத்தின் மூலம் பான் ஸ்டார் நடிகராக மாறிய நடிகர் யாஷின் 38வது பிறந்த நாளை அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இந்த பிறந்தநாளை முன்னிட்டு கர்நாடகாவின் கடக் மாவட்டத்தில் அதிகாலை யாஷின் பிறந்தநாளைக் கொண்டாடுவதற்காக ஃப்ளெக்ஸ் அமைத்த போது மின்சாரம் தாக்கி 3 பேர் உயிரிழந்தனர். மேலும நான்கு பேர் படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கன்னட திரையுலகை இந்திய திரையுலகமே திரும்பி பார்க்க வைத்தவர் நடிகர் யாஷ். கடந்த 2007ல் வெளியான ஜம்படா ஹுடுகி எனும் கன்னட படத்தில் ஹீரோவாக அறிமுகமானார். ஆரம்பத்தில் ரொமான்ஸ் ஹீரோவாக வலம் வந்த யாஷ் கேஜிஎஃப் முதல் மற்றும் இரண்டாம் பாகங்களில் தனது மொரட்டுத்தனமான நடிப்பை காட்டி இந்தியாவின் பாக்ஸ் ஆபிஸ் சிஇஓவாக மாறியுள்ளார்.

ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், அஜித் என ஏகப்பட்ட பிரபலங்கள் தமிழ் சினிமாவில் இருந்தும் இன்னமும் 1000 கோடி வசூலை ஈட்ட முடியவில்லை. ஆனால், அதை கன்னட திரையுலகில் இருந்துக் கொண்டு அசால்ட்டாக பிரசாந்த் நீல் உதவியுடன் சாதித்து முடித்துள்ளார் யாஷ். இத்திரைப்படத்தை தொடர்ந்து நடிகர் யாஷ், இயக்குநர் கீது மோகன்தாஸ் இயக்கத்தில் டாக்ஸிக் என்ற படத்தில் நடித்து வருகிறார். பிரம்மாண்ட பொருட் செலவில் உருவாகி உள்ள இப்படத்தில் 2025ம் ஆண்டு ஏப்ரல் 10ம் தேதி வெளியாக உள்ளது.
யாஷின் பிறந்த நாள்: இந்நிலையில், நடிகர் யாஷின் 38வது பிறந்த நாளை அவரது ரசிகர்கள், நண்பர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் என பலரும் தங்களுடைய வாழ்த்துகளை தெரிவித்து வருகிறார்கள். ரசிகர்கள் பலரும் யாஷ் பிறந்த நாளை முன்னிட்டு அவருக்கு பேனர் வைத்து, பட்டாசு வெடித்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். அந்த வகையில் கர்நாடகாவின் கடக் மாவட்டத்தில் மூன்று ரசிகர்கள் யாஷின் பிறந்த நாளை முன்னிட்டு பேனர் வைக்கும் வேளைகளில் ஈடுபட்டு வந்துள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக மூன்று பேரும் மின்சாரம் தாக்கி உயிரிழந்தனர். மேலும் நான்கு பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பிறந்த நாளில் சோகம்: கடக் காவல் கண்காணிப்பாளர் பாபாசாகேப் நேமகவுடா சம்பவ இடத்திற்கு நேரில் வந்து ஆய்வு செய்தார். அதில் இறந்தவர்கள் மூன்று பேரின் உடல் யார் என்று அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அவர்கள் ஹனுமந்த் ஹரிஜன், முரளி நடுவினாமணி மற்றும் நவீன் காஜி என்றார். இந்த விபத்திற்கு காரணம் அந்த பேனரில் ஒரு உலோக கம்பி இருந்ததால், அது மின்சார கம்பியில் உராசி இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











