Vijay - விஜய்க்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள்.. எனக்கும் ஆசை இருந்தது.. நடிகை கொடுத்திருக்கும் ஆதரவு
சென்னை: தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை தொடங்கியிருக்கிறார் விஜய். நடக்கவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் யாருக்கும் ஆதரவு தெரிவிக்காமலும் போட்டியிடாமலும் இருக்கப்போகும் தவெக 2026ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் களமிறங்கவிருக்கிறது. விஜய் அரசியல் கட்சி தொடங்கியிருப்பதுதான் கடந்த சில நாட்களாக டாக் ஆஃப் தி இன்ட்டெர்நெட்டாக இருக்கிறது. இந்தச் சூழலில் நடிகை வாணி போஜன் விஜய்யின் அரசியல் வருகை குறித்து பேசியிருப்பது சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியுள்ளது.
விஜய் ரசிகர் மன்றம் என்று இருந்ததை ஏறத்தாழ 15 வருடங்களுக்கு முன்னதாக விஜய் மக்கள் இயக்கம் என்று மாற்றினார் விஜய். அதன் மூலம் பொதுமக்களுக்கு ஏராளமான நலத்திட்ட உதவிகள் செய்யப்பட்டன. இதனையடுத்து விஜய் அரசியலுக்கு வர வேண்டும் என்று அவரது ரசிகர்கள் தொடர்ந்து கூறிவந்தனர். ஆனால் விஜய் மௌனம் சாதித்திருந்தார். அதேசமயம் நலத்திட்ட உதவிகள் செய்வதை விஜய் மக்கள் இயக்கம் நிறுத்தவில்லை. எனவே விஜய் விரைவில் அரசியலுக்கு வருவார் என்று கணிக்கப்பட்டது.

அரசியல் என்ட்ரி: இந்தச் சூழலில் விஜய்யின் அரசியல் பிரவேசம் சமீபத்தில் நடந்தது. எந்த வித அலப்பறையும் இல்லாமல் சிம்ப்பிளாக தனது ட்விட்டர் பக்கத்தின் மூலம் தனது அரசியல் வருகையை அறிவித்தார். அதன்படி கட்சிக்கு தமிழக வெற்றி கழகம் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. கட்சியை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யும் வேலைகளும் தொடங்கிவிட்டன. விஜய்யின் இந்த அதிரடி முடிவின் காரணமாக விஜய் ரசிகர்கள் உச்சக்கட்ட மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்.
மக்களவைத் தேர்தலுக்கு நோ: கட்சியை இப்போது ஆரம்பித்தாலும் நடக்கவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடப்போவதில்லை; எந்தக் கட்சிக்கும் ஆதரவும் இல்லை என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதேசமயம் 2026ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழக வெற்றி கழகம் போட்டியிடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அந்தத் தேர்தலில் தமிழக வெற்றி கழகம் தனித்து போட்டியிடவே அதிகளவு வாய்ப்புகள் இருப்பதாக பெரும்பாலானோர் கூறிக்கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
சினிமாவுக்கு நோ: விஜய்யின் அரசியல் வருகை அவரது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறதுதான். ஆனால் அவர் சினிமாவிலிருந்து ஒதுங்குவது சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அவரது ரசிகர்கள் மட்டுமின்றி மற்ற நடிகர்களின் ரசிகர்கள்கூட விஜய் சினிமாவிலிருந்து ஒதுங்குவதை அவ்வளவாக விரும்பவில்லை. சிறந்த எண்ட்டெர்டெயினர் விஜய். அதற்குள் அவரது ERA முடிந்துவிட்டதா என்று நம்ப முடியாமல் சமூக வலைதளங்களில் கேள்விகள் எழுவதையும் பார்க்க முடிகிறது.
வாணி போஜன் ஆதரவு: விஜய்யின் அரசியல் எண்ட்ரி பெரும் பேச்சு பொருளாக மாறியிருக்கும் சூழலில் நடிகை வாணி போஜன் அதுகுறித்து கருத்து தெரிவித்திருக்கிறார். அவர் கூறுகையில், "நடிகர் விஜய்யின் அரசியல் வருகையை நான் மனதார வரவேற்கிறேன். அவருக்கும் ஒரு வாய்ப்பு கொடுக்கலாம். அவர் என்ன செய்கிறார் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம். செங்களம் வெப் சீரிஸில் நடிக்கும்போது அரசியலில் இருக்க வேண்டும் என்ற ஆசை எனக்கும் இருந்தது. அரசியலுக்கு வர வேண்டும் என்ற ஆசை இப்போதும் எனக்கு இருக்கிறது" என்றார்.
வாணி போஜன்: நடிகை வாணி போஜன் சின்னத்திரையில் தோன்றியவர். சின்னத்திரையில் ஜொலித்தால் வெள்ளித்திரையின் கதவுகள் திறக்கும் என்பதற்கு சான்றாக இப்போது சினிமாவில் நடித்துவருகிறார். தொடர்ந்து அவருக்கு சினிமாவில் நடிக்கும் வாய்ப்புகள் கிடைத்துவந்தாலும் பெரும் திருப்புமுனை கிடைக்காமல் தவித்துவருகிறார். அவரது நடிப்பில் கடந்த வருடம் செங்களம் வெப் சீரிஸ் வெளியானது. விருதுநகர் மாவட்ட அரசியலை மையமாக வைத்து உருவாகியிருந்த அந்த வெப் சீரிஸை சுந்தரபாண்டியன் பட இயக்குநர் பிரபாகரன் இயக்கியிருந்தார். ஏறத்தாழ ஜெயலலிதா - சசிகலாவின் அரசியல் பயணத்தை தழுவி அந்தத் தொடர் எடுக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











