காந்தாவ யாரும் கண்டுக்கல.. மீண்டும் துப்பாக்கியை தூக்கிய துல்கர் சல்மான்.. ’ஐ அம் கேம்’ தேறுமா?
சென்னை: பிரபல நடிகர் துல்கர் சல்மான் நடிக்கும் "ஐ அம் கேம்" திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. அதிரடி அவதாரத்தில் துல்கர் சல்மான் தோன்றிய இந்த அசத்தலான போஸ்டரை, படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டனர்.
கடந்த ஆண்டு துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான லக்கி பாஸ்கர் திரைப்படம் அவருக்கு மிகப்பெரிய வெற்றிப் படமாக மாறியது. படத்தையும் துல்கர் சல்மான் நடிப்பையும் பலரும் பாராட்டினர். இந்த ஆண்டு துல்கர் சல்மான் தயாரிப்பில் கல்யாணி பிரியதர்ஷன் நடிப்பில் வெளியான லோகா திரைப்படம் 300 கோடி வசூல் ஈட்டி மிகப்பெரிய சாதனையை படைத்தது.

ஆனால், இந்த மாதம் துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான காந்தா திரைப்படம் படுதோல்வியை சந்தித்தது துல்கர் சல்மானை அப்செட்டாக்கியது. இந்நிலையில், தனது அடுத்த படத்தின் புரொமோஷன் வேலைகளை தொடங்கியுள்ளார்.
துப்பாக்கியுடன் துல்கர் சல்மான்: வேஃபேரர் ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் கீழ் துல்கர் சல்மான் மற்றும் ஜோம் வர்கீஸ் இணைந்து இப்படத்தை பெரும் பொருட்செலவில் தயாரிக்கின்றனர். நஹாஸ் ஹிதாயத் இயக்கும் இந்தப் படத்திற்கு, சஜீர் பாபா, இஸ்மாயில் அபூபக்கர், பிலால் மொய்து ஆகியோர் கதை எழுதியுள்ளனர். ஆதர்ஷ் சுகுமாரன் மற்றும் ஷஹபாஸ் ரசீத் ஆகியோர் வசனங்களை எழுதியுள்ளனர். குரூப் படத்திற்கு பிறகு துல்கர் சல்மான் இந்த படத்தில் மீண்டும் கேங்ஸ்டராக நடிக்கிறாரா என ரசிகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
சூப்பர் ஹிட் டைரக்டர்: 'RDX' திரைப்படத்தின் ப்ளாக்பஸ்டர் வெற்றிக்குப் பிறகு, இயக்குனர் நஹாஸ் ஹிதாயத் இயக்கும் அடுத்த திரைப்படம் இது. இப்படத்தில் மற்ற நடிகர்களின் போஸ்டர்கள் ஏற்கனவே வெளியிடப்பட்ட நிலையில், தற்போது துல்கர் சல்மானின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.
40வது படம்: துல்கர் சல்மானின் 40வது திரைப்படமாக உருவாகும் இந்த அதிரடி த்ரில்லர் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டில் வெளியாகும் மிக முக்கியமான படங்களில் ஒன்றாக இது கருதப்படுகிறது. இப்படத்தில் ஆண்டனி வர்கீஸ், பிரபல தமிழ் இயக்குநர் மிஷ்கின், கதிர், பார்த் திவாரி மற்றும் தமிழ் நடிகை சம்யுக்தா விஸ்வநாதன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
ஆக்ஷன் அதகளம்: கபாலி, KGF, கைதி, விக்ரம், லியோ, சலார் போன்ற முன்னணி பான்-இந்தியா படங்களில் பணியாற்றிய அன்பறிவு மாஸ்டர்கள், இந்தப் படத்தின் அதிரடி ஆக்ஷன் காட்சிகளை வடிவமைக்கின்றனர். 'RDX' படத்தின் பிரம்மாண்டமான ஆக்ஷன் வெற்றிக்குப் பிறகு, இயக்குநர் நஹாஸ் மற்றும் அன்பறிவு மாஸ்டர்கள் மீண்டும் இணைந்து பணியாற்றுவதால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.


Click it and Unblock the Notifications











