Actor Manikandan: மாஸ் இயக்குநருடன் இணையும் மணிகண்டன்.. விரைவில் அறிவிப்பு!
சென்னை: நடிகர் மணிகண்டன் குட்நைட் படம்மூலம் தமிழில் ஹீரோவாக அறிமுகமானார். இயக்குநர் கனவுடன் கோலிவுட்டை வலம்வந்துக் கொண்டிருந்த அவருக்கு கிடைத்ததென்னவோ நடிகர் வாய்ப்புதான். அதை சிறப்பாகவே பயன்படுத்திக் கொண்டார். குறைவான பட்ஜெட்டில் எடுக்கப்பட்டிருந்தாலும் சிறப்பான கதைக்களம் மற்றும் காட்சி அமைப்புகளால் கவனம் ஈர்த்தது குட்நைட். இந்தப் படத்தை தொடர்ந்து தற்போது அவரது நடிப்பில் லவ்வர் படம் வெளியாகியுள்ளது. கடந்த 9ம் தேதி நடிகர் ரஜினிகாந்தின் லால் சலாம் படத்துடன் மோதியது லவ்வர் படம். நவீனகால காதல் மற்றும் காதலர்கள் சந்திக்கும் பிரச்சினைகளை இந்தப் படம் கதைக்களமாக கொண்டுள்ளது.
படத்தில் மணிகண்டனுக்கு நாயகியாகியுள்ளார் ஸ்ரீகௌரி பிரியா. பிரபுராம் வியாஸ் இயக்கத்தில் எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் மணிகண்டனின் முதல் படமான குட்நைட் படத்தின் வெற்றியை மட்டுமே மனதில் கொண்டு இந்தப் படத்தை திரையரங்குகளில் ரசிகர்கள் எதிர்கொண்டார்கள். ஆனாலும் படம் கலவையான விமர்சனங்களையே பெற்றது. ஆனாலும் படத்தில் மணிகண்டனின் கேரக்டர் ரசிகர்களுக்கு பிடித்தமானதாகவே அமைந்தது. படம் கலவையான விமர்சனங்களை பெற்ற போதிலும் வசூலில் சிறப்பாகவே அமைந்தது. காதலர் தினத்தை முன்னிட்டு வெளியான லவ்வர் படத்திற்கு காதலர் தினமும் சிறப்பான பிரமோஷனாக அமைந்தது.

நடிகர் மணிகண்டன்: நடிகர் மணிகண்டன், ஸ்ரீகௌரி பிரியா உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்து கடந்த 9ம் தேதி திரையரங்குகளில் ரிலீசானது லவ்வர் படம். மில்லியன் டாலர் ஸ்டூடியோஸ் மற்றும் எம்ஆர்பி என்டர்டெயின்மெண்ட் நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருந்த இந்தப் படத்தை இயக்கியிருந்தார் பிரபுராம் வியாஸ். ஷான் ரோல்டன் இசையில் படத்தின் பாடல்கள் ஓரளவிற்கு ரசிகர்களை ஈர்த்தது. தற்போதைய இளைஞர்களிடையே நிலவும் காதலை மையமாக கொண்டு இந்தப் படத்தின் கதைக்களம் உருவாகியுள்ளது. கல்லூரி காலத்திலிருந்து 6 ஆண்டுகளாக தொடர்ந்துவரும் காதல் எப்படி பிரச்சினைகளை உண்டு செய்கிறது என்பதாக இந்தப் படம் உருவாகியுள்ளது.
லவ்வர் படம்: தன்னுடைய காதலியிடம் தன்னுடைய ஆதிக்கத்தை நிலைநிறுத்த முயலும் ஆண், அதிலிருந்து தப்பித்து தன்னுடைய சுதந்திரத்தை விட்டுக் கொடுக்காமல் வாழ நினைக்கும் பெண் இவர்களை சுற்றியே கதைக்களம் உருவாகியிருந்தது. உணர்வுபூர்வமான காதல் கதையை எடுக்கும் முனைப்பில் சிறப்பாக செயல்பட்டுள்ளார் இயக்குநர். ஆனாலும் சில இடங்களில் அவரது தடுமாற்றம் வெளிப்படையாக தெரிவதுதான் துரதிர்ஷ்டம். படத்தில் மணிகண்டன், ஸ்ரீ கௌரி பிரியா உள்ளிட்ட நடிகர், நடிகைகள் தங்களது கேரக்டரை உணர்ந்து சிறப்பாக நடித்துள்ளது மிகப்பெரிய ஆறுதல்.
அடுத்தடுத்த வெற்றிகள்: முன்னதாக மணிகண்டன் நடிப்பில் வெளியான குட் நைட் படமும் அவருக்கு சிறப்பாக கைக்கொடுத்தது. இந்நிலையில் அடுத்தடுத்து முன்னணி இயக்குநர்களுடன் இணைந்து வருகிறார் மணிகண்டன். மேலும் இயக்குநர் கனவையும் விட்டுவிடாமல் விஜய் சேதுபதிக்காக ஒரு ஸ்கிரிப்டை ரெடி செய்து வருகிறார். இதனிடையே அடுத்ததாக பா ரஞ்சித் தயாரிப்பில் மணிகண்டன் இணையவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. பா ரஞ்சித்தின் நீலம் புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின்கீழ் இந்தப் படம் உருவாகவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. படத்தின் இயக்குநர் மற்ற நடிகர், நடிகைகள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
சம்பளத்தை உயர்த்திய மணிகண்டன்: மணிகண்டனின் குட் நைட் மற்றும் லவ்வர் படங்கள் அடுத்தடுத்து அவருக்கு சிறப்பான வரவேற்பை கொடுத்துள்ளன. இதையடுத்து அவர் தனது சம்பளத்தை கணிசமாக உயர்த்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர் தனது சம்பளத்தை லட்சங்களிலிருந்து 2 கோடி ரூபாய் வரை உயர்த்தியுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளன. தன்னுடைய இயல்பான நடிப்பால் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்து வருகிறார் மணிகண்டன். சிறந்த நடிப்பை கொடுப்பதுடன் அவரது இயக்கத்திலும் சிறந்த படங்கள் வெளியாக வேண்டும் என்பதே ரசிகர்களின் விருப்பமாக உள்ளது.


Click it and Unblock the Notifications











