Ajith: “போஸ்டர்லயே இப்படின்னா... அந்தப் படம் வந்திருந்தா...?” ட்ரெண்டாகும் அஜித்தின் அல்டிமேட் லுக்
சென்னை: அஜித் தற்போது விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் ஷூட்டிங் அஜர்பைஜான் நாட்டில் நடைபெற்று வருகிறது. முன்னதாக அஜித் வித்தியாசமான கதைகள் கொண்ட படங்களில் நடித்து வந்தார். அப்படி அவர் நடிக்கவிருந்த ஒரு படத்தின் போஸ்டர்ஸ் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.
ட்ரெண்டாகும் அஜித்தின் தாறுமாறு போஸ்டர்ஸ்
விளம்பர மாடலாக இருந்து சினிமாவில் ஹீரோவானவர் அஜித். சினிமாவில் அறிமுகமான ஆரம்பத்திலேயே பைக் ரேஸிலும் கலந்துகொண்டு வந்தார். இதனால் அடிக்கடி ஆக்ஸிடெண்ட்டாகி சிகிச்சை எடுத்துக்கொள்வதும் வழக்கமாக இருந்தது. அதேநேரம் சினிமாவிலும் வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து வெரைட்டியாக நடித்து வந்தார்.

அதாவது ஒரு கட்டத்தில் விஜய் சூப்பர் ஸ்டார் ரஜினியை போல ஸ்டைலில் கலக்குவதாகவும், அஜித் உலக நாயகன் கமல்ஹாசன் ரூட்டில் நடிப்பதில் தனித்து காணப்படுகிறார் என பலரும் பாராட்டியது உண்டு. காதல் கோட்டை, வாலி, வரலாறு, வில்லன், கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், முகவரி, சிட்டிசன் போன்ற படங்களில் அஜித்தின் யதர்த்தமான நடிப்பும் அவர் வித்தியாசமான கெட்டப்புகளில் நடித்ததும் ரசிகர்களை கொண்டாட வைத்தது.
அதனால் சேது மூலம் இயக்குநராக அறிமுகமான பாலா, தனது இரண்டாவது படத்தின் ஹீரோவாக அஜித்தை தான் தேர்வு செய்தார். கதைக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து படங்கள் இயக்குவது தான் பாலாவின் வழக்கம். அதேநேரம் பாலாவின் இயக்கத்தில் நடித்துவிட்டால் அது பல விருதுகள் வாங்கியதற்கு சமம் என பலரும் சொல்வதுண்டு. இன்னொரு பக்கம் பாலா தனது படத்தின் ஹீரோவாக யாரை தேர்வு செய்கிறார் என்பதே திரையுலகில் ஆச்சரியமாக பார்க்கப்படும்.
அதன்படி, பாலா இயக்கவிருந்த நந்தா படத்தில் அஜித் தான் நடிக்கவிருந்தார். இதனால் நந்தா படத்திற்கு அதிக எதிர்பார்ப்பு காணப்பட்டது. ஆனால், அஜித் நந்தா படத்தில் இருந்து விலகியதால், சூர்யா அதில் ஹீரோவாக நடித்தார். நந்தா சூர்யாவின் சினிமா கேரியரையே மாற்றியமைத்தது. அதேபோல், மீண்டும் அஜித்துடன் இணைய முடிவு செய்தார் பாலா. அப்படி பாலாவின் நான் கடவுள் படத்தில் அஜித் நடிப்பதாக அறிவிக்கப்பட்டது.
நான் கடவுள் படத்திற்கான பூஜை நடைபெற்றதோடு ஷூட்டிங்கும் தொடங்கியது. அப்போது அஜித்தின் சில போஸ்டர்களை படக்குழு ரிலீஸ் செய்திருந்தது. நான் கடவுள் லுக்கில் சாமியாராக ஆக்ரோஷம் காட்டும் அஜித்தின் அந்த போஸ்டர்கள் தமிழ்த் திரையுலகையே திரும்பிப் பார்க்க வைத்தது. நான் கடவுள் அறிவிப்பு வெளியான நேரம் அஜித் மட்டுமின்றி பாலாவும் உச்சத்தில் இருந்தனர்.
இதனால் நான் கடவுள் படத்திற்கு நாளுக்கு நாள் எதிர்பார்ப்பு எகிறியது. ஆனால், திடீரென நான் கடவுள் படத்தில் இருந்தும் அஜித் விலகினார். அதன்பின்னர் ஆர்யாவை வைத்து இந்தப் படத்தை இயக்கினார் பாலா. அப்போது ஏற்பட்ட பிரச்சினையில் அஜித்தை இயக்குநர் பாலா மிரட்டியதாகவும் செய்திகள் வெளியாகியிருந்தன. ஆனால், அதுபற்றியெல்லாம் சரியான தகவல்கள் வெளியாகவில்லை.
இந்நிலையில் நான் கடவுள் படத்துக்காக அஜித்தை வைத்து ஷூட் செய்யப்பட்ட புகைப்படங்கள் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த போஸ்டரை பார்த்த 2கே கிட்ஸ் அஜித் ரசிகர்கள், நான் கடவுள் படத்தில் அஜித் நடித்திருந்தால் செம்மையாக இருந்திருக்கும் என கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











