தல சொல்லவே வேணாம்.. நாங்களே உறுதிமொழி எடுப்போம்ல.. பேனர் விவகாரத்தில் கெத்து காட்டிய அஜித் ரசிகர்கள்
இனி பேனர் வைக்க மாட்டோம் என மதுரையைச் சேர்ந்த அஜித் ரசிகர்கள் உறுதிமொழி எடுத்து போஸ்டர் ஒட்டியுள்ளனர்.
Recommended Video
சென்னை: நடிகர் அஜித் நடிக்கும் படங்களுக்கு இனி பேனர் வைக்க மாட்டோம் என மதுரையைச் சேர்ந்த அஜித் ரசிகர்கள் உறுதிமொழி எடுத்து போஸ்டர் ஒட்டியுள்ளனர்.
சென்னை சாலையில் வைக்கப்பட்டிருந்த பேனரால் விபத்தில் சிக்கி உயிரிழந்த சுபஸ்ரீயின் மரணம் தமிழகத்தையே உலுக்கியுள்ளது. அதன் எதிரொலியாக அரசியல் கட்சித் தலைவர்கள் இனி பேனர், கட் அவுட்டுகளை அமைக்க வேண்டாம் என தங்களது தொண்டர்களுக்கு அறிக்கை வாயிலாக வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.

ஆனால், இது அரசியல் கட்சிகளால் மட்டும் சாத்தியப்பட்டு விடுமா என்பது சந்தேகமே. ஏனென்றால், அரசியலுக்கு இணையாக பேனர் கலாச்சாரம் கொடி கட்டிப் பறப்பது திரைத்துறையிலும் தான். தங்களுக்குப் பிடித்தமான நடிகர்களின் பட விழாக்களின் போது, ரசிகர்கள் பேனர்கள், கட் அவுட்கள் வைப்பதை வாடிக்கையாக வைத்துள்ளனர்.
எனவே, இந்த விவகாரத்தில் நடிகர்களும் தங்களது ரசிகர்களுக்கு பேனர் வைக்கக் கூடாது என வலியுறுத்த வேண்டிய நிலையில் உள்ளனர். சில நடிகர்கள் அதனை ஏற்கனவே செய்யத் தொடங்கி விட்டனர். இந்நிலையில் பேனர் விவகாரம் தொடர்பாக மதுரை அஜித் ரசிகர்கள் தாமாகவே முன் வந்து தரமான முடிவு ஒன்றை எடுத்துள்ளனர்.
அதாவது, மதுரை வீதிகளில் அஜித் ரசிகர்கள் சார்பாக ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களில், 'சுபஸ்ரீயின் மரணம் மிகுந்த வேதனை அளிக்கிறது. தவறுகள் நடப்பதற்கு முன்னாள் அதை நாம் சிந்தித்துச் செயல்படத் தவறுவதால் தான் ஒரு இழப்பு நமக்கு அறிவுறுத்துகிறது. இனிமேலாவது சிந்தித்துச் செயல்படுவோம். அந்த சகோதரியின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிராத்திக்கின்றோம்' என கூறப்பட்டுள்ளது.
அஜித் ரசிகர்கள் ஒட்டியுள்ள இந்த போஸ்டர்கள் இணையத்தில் வைரலாகியுள்ளது. மற்ற மாவட்டங்களைச் சேர்ந்த அஜித் ரசிகர்களும், மதுரை அஜித் ரசிகர்களின் இந்த செயலை பாராட்டி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











