கேஜிஎஃப் இயக்குநர் படத்தில் அஜித்?.. கேட்கவே நல்லா இருக்குதே.. நிஜத்துல சாத்தியமாகுமா பாஸ்!
சென்னை: நடிகர் அஜித் குமார் அடுத்ததாக கேஜிஎஃப் பட இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் நடிக்கப் போவதாகவும் கேஜிஎஃப் யூனிவர்ஸிலும் நடிகர் அஜித் இணையப் போவதாகவும் பரபரப்பான தகவல்கள் கோலிவுட்டில் பரவலாக பேசப்பட்டு வருகிறது. விடாமுயற்சி படத்தை நிறைவு செய்யவுள்ள நடிகர் அஜித் குமார் அடுத்ததாக குட் பேட் அக்லி படத்தையும் விரைவில் முடிக்க திட்டமிட்டுள்ளார்.
விடாமுயற்சி படத்தை போல வருடக் கணக்கில் நேரத்தை விரையம் ஆக்காமல் ஆதிக் ரவிச்சந்திரன் பக்காவாக பிளான் போட்டு ஒவ்வொரு ஷெட்யூலாக முடித்து வருவதாக கூறுகின்றனர்.

மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் அந்த படம் நிச்சயம் இந்த ஆண்டு இறுதிக்குள் ஷூட்டிங் மற்றும் போஸ்ட் புரொடக்ஷன் முடிவடைந்து அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகைக்கு வெளியாகும் என்கின்றனர்.
பிரசாந்த் நீல் இயக்கத்தில் அஜித்?: கேஜிஎஃப் 1 மற்றும் 2 படங்களின் மூலம் இந்தியளவில் பிரபலமானவர் இயக்குநர் பிரசாந்த் நீல். யஷ் நடித்த படங்கள் பாக்ஸ் ஆபிஸில் மிரட்டிய நிலையில், தெலுங்கில் பிரபாஸ் நடித்த சலார் 1 படத்தை இயக்கியும் வெற்றிக் கண்டார். அடுத்து சலார் 2 படத்தை இயக்கி வரும் பிரசாந்த் நீல் அடுத்து அஜித்தை இயக்கப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
கேஜிஎஃப் யூனிவர்ஸ்: கேஜிஎஃப் யூனிவர்ஸில் அஜித் குமார் ஒரு முக்கிய அங்கமாக இணையப் போவதாகவும், கேஜிஎஃப் 3 படத்தில் யஷ் மற்றும் அஜித் குமார் இணைந்து நடிக்கப் போவதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. ஆனால், இதெல்லாம் எந்தளவுக்கு சாத்தியம் என்கிற கேள்வியும் எழத்தான் செய்கிறது.
ராம்சரண், ஜூனியர் என்டிஆர் படங்கள்: பிரசாந்த் நீலை ஏற்கனவே டோலிவுட் நடிகர்களான ராம்சரண் மற்றும் ஜூனியர் என்டிஆர் புக் செய்து விட்டதாக கூறுகின்றனர். கேம் சேஞ்சர் படத்தை முடித்து விட்டு இன்னொரு படத்தில் நடித்து வரும் ராம் சரண் அடுத்ததாக பிரசாந்த் நீல் படத்தில் நடிக்கப் போகிறார் என்கின்றனர். அதே போல தேவரா படத்தை முடித்த கையோடு பிரசாந்த் நீல் இயக்கத்தில் ஜூனியர் என்டிஆர் நடிக்கப் போவதாகவும் கூறுகின்றனர். கேஜிஎஃப் 3ம் பாகம் வெளியாக இன்னும் பல ஆண்டுகள் ஆகும் என்கின்றனர். இதற்கிடையே அஜித்தை பிரசாந்த் நீல் எப்படி இயக்கப் போகிறார் என்று தெரியவில்லை. மல்டி ஸ்டார் படமாக பிரசாந்த் நீல் உருவாக்கினால் மட்டுமே சாத்தியம் என்கின்றனர்.


Click it and Unblock the Notifications











