சினிமாவிலிருந்து ஒதுங்கும் மனநிலையில் அஜித்?.. பேச்சில் அப்படி ஒரு வாடை அடிக்குதே பாஸ்
சென்னை: சினிமாவில் மட்டுமின்றி கார் ரேஸிலும் அஜித் இப்போது கவனத்தை செலுத்திவருகிறார். உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளுக்கு தனது ரேஸிங் டீமுடன் களமிறங்கி பந்தயம் அடிக்கும் அவர்; அடுத்ததாக ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிக்கிறார். இது ஒருபக்கம் இருக்க சமீபத்தில் கொடுத்த பேட்டி ஒன்றில் கார் ரேஸில் சந்தித்த அனுபவங்கள் குறித்து மனம் திறந்து பேசியிருக்கிறார். அது ரசிகர்களிடையே ட்ரெண்டாகியுள்ளது.
அஜித்குமாருக்கென்று பல லட்சம் பேர் ரசிகர்களாக இருக்கிறார்கள். கடந்த வருடத்தில் அவர் நடித்த குட் பேட் அக்லி, விடாமுயற்சி ஆகிய இரண்டு படங்களுமே பெரிய அளவில் திருப்திப்படுத்தவில்லை. குட் பேட் அக்லியை அவரது ரசிகர்கள் மட்டுமே கொண்டாடினாலும்; அவர்களிலேயே சில பேருக்கு படம் பிடிக்கவில்லை. திரைப்படமாக இல்லாமல் ரீல்ஸ்களின் தொகுப்பாக காட்சிகளை இயக்குநர் அடுக்கிவிட்டார் என விமர்சனங்கள் வலுத்தன.
அடுத்த படமும் ஆதிக்குடன்: சூழல் இப்படி இருக்க அடுத்த படத்திலும் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில்தான் நடிக்கிறார் ஏகே. கண்டிப்பாக இது குட் பேட் அக்லி மாதிரி இருந்துவிடக்கூடாது; தரமான கமர்ஷியல் படத்தை ஆதிக் கொடுக்க வேண்டும் என்பதுதான் ரசிகர்களின் விருப்பமாக இருக்கிறது. அவரும் அதற்கேற்றபடிதான் உழைத்துக்கொண்டிருக்கிறார் என அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. படத்தின் மேலதிக அறிவிப்புகள் விரைவில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கார் ரேஸில் அஜித்: இதற்கிடையே கார் ரேஸில் அஜித்தின் பெரும்பான்மையான கவனம் இப்போது கார் ரேஸில் இருக்கிறது. அவர் தனது கரியர் ஆரம்பத்திலேயே கார் ரேஸில் கவனம் செலுத்தி திரைத்துறையில் தடுமாறியவர். இத்தனை வருடங்கள் கழித்து மீண்டும் கவனத்தை அதில் திருப்பியிருக்கிறார். இந்த முறை சரியாக திட்டமிட்டு டீமுடன் களமிறங்கி பல நாடுகளில் நடக்கும் போட்டிகளில் கலந்துகொண்டு பந்தயம் அடிக்கிறார். இதுவும் அவரது ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றிருக்கிறது. எந்த நாட்டில் அவர் இறங்கினாலும் அவரைப் பார்ப்பதற்கு மொய்த்துவிடுகிறார்கள்.
அஜித்தின் பேட்டி: இந்நிலையில் சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில், "ஒருவர் புதிதாக ஒன்றை செய்யும்போது விமர்சனங்கள் வரத்தான் செய்யும். இப்போதும்கூட நான் விமர்சனங்களை எதிர்கொள்கிறேன். எங்களுக்கு ஆதரவளித்த அனைத்து ரசிகர்களுக்கும் நன்றி. மலேசியாவில் மட்டுமில்லை மற்ற நாடுகளிலும் இதுவரை எங்களை பார்க்க 6,000 பேர் வரை வந்திருந்தார்கள். சரியான பாதையில்தான் நான் சென்றுகொண்டிருக்கிறேன் என்பதை அவர்களது ஆதரவுதான் உறுதி செய்கிறது.
சினிமாவிலிருந்து ஒதுங்குகிறாரா?: இன்னும் நேர்மையாக சொல்ல வேண்டுமெனில் நான் இதை எனக்காக மட்டும் செய்யவில்லை. எனக்கு மோட்டார் ஸ்போர்ட் மீது நிறைய பிரியம். என்னால் முடிந்தவரை ஒரு ரேஸிங் டிரைவராகவே இருக்க விரும்புகிறேன்" என்றார். இந்தப் பேட்டி ரசிகர்களிடம் சில கேள்விகளையும் எழுப்பியிருக்கிறது. ரேஸிங் டிரைவராகவே இருக்க விரும்புகிறேன் என அவர் சொல்வதை பார்த்தால் சினிமா அஜித்துக்கு சலித்துவிட்டது போல் தோன்றுகிறது. மிஞ்சி போனால் இன்னும் மூன்றிலிருந்து ஐந்து வருடங்கள் மட்டும்தான் நடிப்பாரோ எனவும் கேள்வி எழுப்பிவருகிறார்கள்.


Click it and Unblock the Notifications











