சம்பளத்தைக் குறைத்தும் அஜித் படத்தை தயாரிக்க யாருமே முன்வரலையா?.. தயாரிப்பு நிறுவனம் ஆரம்பிப்பாரா?
சென்னை: லைகா தயாரிப்பில் வெளியான விடாமுயற்சி படம் தயாரிப்பு நிறுவனத்துக்கு இந்தியன் 2 கொடுத்ததை போல பெரிய பாதிப்பை கொடுத்து சோலியை முடித்து விட்டது. அதன் பின்னர், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் வெளியான குட் பேட் அக்லி திரைப்படமும் பெரிய லாபத்தை ஈட்டித் தரவில்லை என்கின்றனர்.
இந்நிலையில், ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அடுத்து அஜித் நடிக்கவுள்ள படத்திற்கு இந்தியில் தயாரிப்பாளர்களை தேடியும் கிடைக்கவில்லை. கடைசியாக ஏஜிஎஸ் நிறுவனத்திடம் பேச்சுவார்த்தை நடைபெற்றதாகவும் அஜித் தனது சம்பளத்தைக் குறைத்துக் கொள்ள சம்மதித்த நிலையிலும், இன்னமு ஏஜிஎஸ் ஓகே சொல்லவில்லை என தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதற்கிடையே அஜித் குமார் தனது பெயரில் சொந்தமாக தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கவும் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. யாருமே முன் வரவில்லை என்றால், அவர் தான் இத்தனை ஆண்டுகளாக தயாரிப்பில் எடுக்காத ரிஸ்க்கை எடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
அஜித்தை வைத்து தயாரிக்க மாட்டேன்: தாய் கிழவி படத்தின் வெற்றி விழாவில் சிவகார்த்திகேயனிடம் அஜித்தை வைத்து படம் தயாரிப்பீர்களா? என்கிற கேள்வி எழ, அதற்கு ஆடிப்போன அவர், தனது தயாரிப்பு நிறுவனம் இன்னமும் அந்தளவுக்கு பெரிதாக வளரவில்லை. அவருக்கு சம்பளம் கொடுத்து படம் தயாரிக்கும் அளவுக்கு வளர்ந்தால் பார்க்கலாம். இப்போதைக்கு அதற்கு வாய்ப்பில்லை ராஜா என மறுத்து விட்டார்.
சம்பளத்தைக் குறைத்த அஜித்: தமிழ் சினிமாவில் நடிகர்கள் சம்பளம் உயர முக்கிய காரணமே அஜித் மற்றும் ரஜினிகாந்த் தான். லியோ மற்றும் ஜெயிலர் படங்கள் 600 கோடி வசூல் வேட்டை நடத்திய நிலையில், இருவரது சம்பளமும் உயர்ந்தன. ஆனால், மற்ற முன்னணி நடிகர்களும் அவர்களது சம்பளத்தை அடிப்படையாக வைத்து தங்கள் சம்பளத்தையும் உயர்த்தியது தான் தயாரிப்பாளர்களுக்கு மிகப்பெரிய நெருக்கடியை கொடுத்தது. குறிப்பாக அஜித் குமார் விடாமுயற்சி, குட் பேட் அக்லி படங்களுக்கு 100 கோடிக்கு மேல் சம்பளம் வாங்கியது தான் தயாரிப்பு நிறுவனங்களுக்கு பலத்த அடி என்கின்றனர். இந்நிலையில், 165 கோடி சம்பளம் வேண்டாம் என்றும் 145 கோடி கொடுத்தால் போதும் என ஏஜிஎஸ் நிறுவனத்திடம் அஜித் தரப்பு பேசியதாகவும் ஆனால், அதற்கும் ஏஜிஎஸ் சம்மதிக்கவில்லை என்றும் இன்னமும் குறைக்கச் சொல்லி கோரிக்கை விடுத்துள்ளதாக பத்திரிகையாளர் பிஸ்மி கூறியுள்ளார்.
தயாரிப்பு நிறுவனம் தொடங்குவாரா அஜித்?: வருவது வரட்டும் தனது சம்பளத்தை கட் செய்துவிட்டு புரொடக்ஷனுக்கு மட்டும் 50 கோடி செலவில் ஆதிக் ரவிச்சந்திரனை வைத்து அஜித் குமார் சரியான திட்டமிடலுடன் படம் தயாரித்தால், அந்த படம் கண்டிப்பாக 200 முதல் 300 கோடி வரை வசூல் வாரி கொடுத்தால் அஜித் குமாருக்கு கொள்ளை லாபம் கிடைக்கும் என்றும் அதை தான் இறுதியில் அவர் செய்யப் போகிறாரா? என்கிற கேள்விகள் கிளம்பி உள்ளன.


Click it and Unblock the Notifications











