கேரவனுக்கு அழைத்து அஜித் செய்த விஷயம்.. மிஸ்டர் எக்ஸ் இயக்குநர் நெகிழ்ச்சி.. ஏகே இவ்வளவு நல்லவரா?
சென்னை: அஜித்குமார் அடுத்ததாக ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார். படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி அந்தப் படத்தில் அஜித் இணை தயாரிப்பாளராகவும் இருப்பார் எனவும் தகவல்கள் வட்டமடிக்கின்றன. ஏற்கனவே ஆதிக்கும், அஜித்தும் இணைந்த குட் பேட் அக்லி திரைப்படம் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்திருந்தது. எனவே இந்தப் படத்தின் மீதும் எக்கச்சக்க எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது. இந்நிலையில் மிஸ்டர் எக்ஸ் படத்தின் இயக்குநர் மனு ஆனந்த் பேசியிருக்கும் விஷயம் ட்ரெண்டாகியுள்ளது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அஜித்துக்கு கடந்த வருடத்தில் இரண்டு படங்கள் வந்தன. முதலில் வந்த விடாமுயற்சி மோசமான தோல்வியை சந்தித்தது. அடுத்ததாக வந்த குட் பேட் அக்லி ஏகே ரசிகர்களுக்கு மட்டும் உகந்ததாக இருந்தது. மற்றவர்களோ படத்தை பார்த்துவிட்டு இது படம் இல்லை ரிலீஸ்களின் தொகுப்பு. இஷ்டத்துக்கு எடுத்து வைத்திருக்கிறார் என்று சகட்டுமேனிக்கு விமர்சனத்தை வைத்தார்கள். ஆனால் படம் வணிக ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றதாக தயாரிப்பு தரப்பு அறிவித்து ஏகே ரசிகர்களுக்கு நிம்மதியை கொடுத்தது.

கார் ரேஸில் கவனம்: ஒரே வருடத்தில் இரண்டு படங்களில் நடித்த அஜித்; தற்போது கார் ரேஸில் முழு கவனத்தையும் செலுத்திவருகிறார். உலகத்தின் பல நாடுகளுக்கு சென்று ரேஸிங் டீமோடு களமிறங்கி வெற்றிகளையும் குவித்துவருகிறார். அதுமட்டுமின்றி ரேஸில் ஈடுபட்டதிலிருந்து அவருக்குள் சில மாற்றங்களும் வந்திருக்கின்றன. கடந்த பல வருடங்களாக விளம்பரத்தில் நடிக்காமல் இருந்த அவர்; சமீபத்தில் கேம்பா குளிர்பானத்துக்கு விளம்பரம் செய்தார். அதேபோல் சில ஆங்கில ஊடகங்களுக்கு பேட்டியும் கொடுத்தார்.
அடுத்த படம்: அடுத்ததாக அவர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிக்க கமிட்டாகியிருக்கிறார். இதில் ஹீரோயினாக ஸ்ரீலீலா நடிக்கலாம் என்று தெரிகிறது. இதுவரை படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரவில்லை. அதற்கு காரணமாக, 'இந்தப் படத்துக்கு தயாரிப்பாளர் யாரும் கிடைக்கவில்லை' என சொன்னார்கள். ஆனால் இப்போது தயாரிப்பாளர் கிடைத்துவிட்டதாகவும்; அஜித்தும் அந்தப் படத்தில் இணை தயாரிப்பாளராக பணியாற்றுவார் என்றும் தகவல்கள் வருகின்றன. இது அஜித் ரசிகர்களிடம் மேற்கொண்டு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மனு ஆனந்த் பேட்டி: இந்நிலையில் ஆர்யாவை வைத்து மிஸ்டர் எக்ஸ் படத்தை இயக்கியிருக்கும் மனு ஆனந்த் சமீபத்தில் தனியார் யூடியூப் சேனலுக்கு பேட்டியளித்தார். அந்தப் பேட்டியில் அவர், "எனக்கு ஒரு தம்பி இருந்தார். அவர் உயிரிழந்துவிட்டார். அவர் உயிரிழக்கும் முன்பு ஒரு கடிதம் எழுதியிருந்தார். அதில், 'நீ திரைப்படங்களில் பணியாற்ற வேண்டும்' என குறிப்பிட்டிருந்தார். அதனையடுத்துதான் சினிமாவுக்குள் வந்து கௌதம் மேனனை சந்தித்தேன். பிறகு என்னை அறிந்தால் படத்திலும் பணியாற்றினேன். இதற்கிடையே தம்பியின் பெயரில் பார்வை திறனற்றவர்கள், முதியவர்களுக்காக ஃபவுண்டேஷன் ஒன்றையும் நானும், அம்மாவும் நடத்திவந்தோம்.
அஜித் செய்தது: அந்தப் படத்தில் அஜித்தை அழைத்து வருவது உள்ளிட்ட விஷயங்களை நான்தான் செய்தேன். ஒருநாள் அஜித் உங்களை கேரவனுக்கு அழைக்கிறார் என்று சொன்னார்கள். உள்ளே போனவுடன் என்னை அமர வைத்துவிட்டு; ஐந்து லட்சம் ரூபாய்க்கு செக் கொடுத்தார். அதை என் கையில் வைத்துவிட்டு, 'உன் வாழ்க்கையில் ஏதோ நடந்திருக்கிறது என்று தெரியும். நீ நல்லது செய்கிறாய் என்றும் தெரியும். இதை வைத்துக்கொள்' என்று மட்டும்தான் கூறினார். அதை என் வாழ்க்கையில் மறக்கவே முடியாது" என்றார்.


Click it and Unblock the Notifications















