அஜித் அம்மா மரணம்.. ஏகே வீட்டில் பெரும் சோகம்.. அப்பாவை இழந்த 2 வருடங்களில் தாயை இழந்துட்டாரு
சென்னை: தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் அஜித்குமார். அவரது தந்தை சுப்ரமணியம். தாய் மோகினி. சுப்ரமணியம் சில வருடங்களுக்கு முன்பு உயிரிழந்தார். சூழல் இப்படி இருக்க அஜித்தின் தாய் மோகினியும் இன்று வயோதிகம் காரணமாகவும், உடல்நல குறைவு காரணமாகவும் உயிரிழந்தார். அவரது உயிரிழப்பு ஏகே குடும்பத்தை மட்டுமின்றி அவரது ரசிகர்களையும் சோகத்தில் ஆழ்த்தியிருக்கிறது.
அஜித்குமார் எந்த பின்னணியும் இல்லாமல் சினிமாவுக்கு வந்தவர். ஏகப்பட்ட தோல்விகள், விபத்துக்களை எல்லாம் சந்தித்தபோதும் ஃபீனிக்ஸ் போல் மேல் எழுந்து வந்தவர். அப்படி அவர் வருவதற்கு அவரது தன்னம்பிக்கை ஒரு காரணம் என்றாலும்; அவரது பெற்றோரும் இன்னொரு காரணம். சிறு வயதிலிருந்து அஜித்துக்கு தங்களால் முடிந்த ஆதரவை கொடுத்து வந்தார்கள். அதனால்தான் அவருக்குள் எதையும் சாதிக்கும் துணிவு பிறந்திருக்கிறது என்று அவருக்கு நெருக்கமானவர்கள் சொல்வார்கள்.

தாய், தந்தை மீது பாசம்: தான் வளர்ந்த பிறகு அஜித் தன்னுடைய தாய் மோகினியையும், தந்தை சுப்ரமணியத்தையும் பத்திரமாகவே பார்த்துக்கொண்டார். தனக்கு திருமணமான பிறகு கட்டிய வீட்டில் தன்னுடைய தந்தை, தாய்க்கு ஒரு தளம், தங்களுக்கு ஒரு தளம், ஷாலினியின் தந்தை, தாய்க்கு ஒரு தளம், தன்னுடைய சகோதரருக்கு ஒரு தளம் என கூட்டு குடும்பமாகவே இருந்துவருபவர். அவரது இந்த மாதிரியான குணங்களும், செயல்பாடுகளும்கூட அவருக்கான ரசிகர்களை அதிகப்படுத்தியது உண்டு.
தந்தையை இழந்த அஜித்: சூழல் இப்படி இருக்க சில வருடங்களுக்கு முன்புதான் அஜித்தின் தந்தை சுப்ரமணியம் உயிரிழந்தார். 85 வயதான அவருக்கு வயது முதிர்வு காரணமாக உடல்நல குறைவு ஏற்பட்டது. தொடர்ந்து உயர்தர சிகிச்சைகள் அளிக்கப்பட்டாலும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தன் கணவரை இழந்த மோகினியை அஜித் கண்ணும் கருத்துமாக பார்த்துவந்தார். மோகினி மணியும் கணவரை இழந்தாலும் மகனின் அரவணைப்பில் நிம்மதியாகவே இருந்து வந்தார்.
உயிரிழந்த தாய்: இந்நிலையில் அஜித்தின் தாய் மோகினி இன்று வயது முதிர்வு காரணமாக ஏற்பட்ட உடல்நல குறைவில் உயிரிழந்தார். அவருக்கும் வயது 85 என்பது குறிப்பிடத்தக்கது. அவரது இறுதிச்சடங்கு பாலவாக்கத்தில் இருக்கும் அஜித்தின் வீட்டில் இன்று நடைபெறவிருக்கிறது. தந்தையை இழந்த சில வருடங்களிலேயே தாயையும் இழந்த அஜித்துக்கு ரசிகர்கள் தங்களது அனுதாபத்தை தெரிவித்துவருகிறார்கள். அதுமட்டுமின்றி தந்தை இழப்பின்போது அஜித் ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தார். அதுபோன்று இப்போதும் வெளியிடுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
முதலமைச்சர் விஜய் வருவாரா?: முக்கியமாக அஜித் தந்தை இறந்தபோது நடிகராக இருந்த விஜய் நேரில் வந்து அஞ்சலி செலுத்தி; ஏகேவுக்கு ஆறுதல் சொல்லிவிட்டு சென்றார். இப்போது அவர் முதலமைச்சராகியிருக்கிறார். தனது நண்பர் அஜித்தின் தாய் இறந்ததற்கு அவர் நேரில் வந்து அஞ்சலி செலுத்துவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications
