அஜித்குமாரின் ரேஸிங் படம்.. கிளாடியேட்டர்ஸ் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது.. ஏகே மிரட்டுறாரு ப்பா!
சென்னை: அஜித்குமார் இப்போது தனது கவனத்தை ரேஸிங் பக்கம் திருப்பியிருக்கிறார். இதற்காக ஏகே ரேஸிங் என்ற பெயரில் ஒரு டீமை உருவாக்கி உலகத்தின் பல நாடுகளுக்கு சென்று வெற்றிகளை குவித்துவருகிறார். சூழல் இப்படி இருக்க அவரது ரேஸிங் தொடர்பாக ஆவணப் படம் ஒன்று உருவாகிவருகிறது. அதற்கு கிளாடியேட்டர் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகி இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளது.
அஜித்குமார் நடிக்க வந்த புதிதிலிருந்தே கார் ரேஸ் மீது அலாதி பிரியம் கொண்டிருந்தார். அவ்வப்போது போட்டிகளிலும் பங்கேற்றார். ஆனால் அதில் பெரிய வெற்றிகளை பெற முடியவில்லை. அதுமட்டுமின்றி விபத்துக்களையும் சந்திப்பது வழக்கமானது. இதனால் பாதி நாட்கள் மருத்துவமனையில் கழிக்கும் நிலைமைக்கு அவர் ஆளானார். இனிமேலும் இரண்டு விஷயங்களில் கவனத்தை செலுத்தினால் சினிமா நம்மை வெளியே அனுப்பிவிடும் என்ற முடிவில் ரேஸிங்கை மொத்தமாக ஒத்தி வைத்தார்.

மீண்டும் சர்க்யூட்டில்: அதனையடுத்து தொடர்ந்து படங்களில் நடித்துவந்த அவர்; கடந்த சில வருடங்களாக ரேஸிங் மீது மீண்டும் கவனத்தை திருப்பினார். இந்த முறை தன்னுடைய திட்டங்கள், பாதைகள் அனைத்தையும் சரியாக வகுத்திருந்தார். ஏகே ரேஸிங் என்கிற பெயரில் ஒரு டீமையும் உருவாக்கி உலகம் முழுவதும் சென்று பந்தயங்களில் கலந்துகொண்டுவருகிறார். சினிமாவில் எப்படி தரமான தடத்தை பதித்தாரோ அதே போன்று ரேஸிலும் பதித்துவருகிறார் என்பது மகிழ்ச்சியான ஒன்று.
பத்ம பூஷன் விருது: ரேஸில் கலந்துகொண்டதை பெருமைப்படுத்தும் விதமாக அவருக்கு பத்ம பூஷன் விருதும் வழங்கப்பட்டது. அதை நினைத்து அஜித் ரசிகர்கள் உச்சக்கட்ட மகிழ்ச்சியடைந்தார்கள். மேலும் ரேஸுக்காகத்தான் கடந்த ஒரே வருடத்தில் குட் பேட் அக்லி, விடாமுயற்சி ஆகிய இரண்டு படங்களிலும் நடித்து ஆச்சரியப்படுத்தினார். கடந்த 10 வருடங்களுக்கும் மேலாகவே ஏகே ஒரு வருடத்தில் இரண்டு பட ஷூட்டிங்கிலும் கலந்துகொண்டு; அதனை நல்லபடியாக முடித்து கொடுத்ததில்லை.
கிளாடியேட்டர்ஸ் படம்: இந்நிலையில் அவரது கார் ரேஸ் தொடர்பான படத்துக்கு கிளாடியேட்டர்ஸ் என்று பெயர் வைக்கப்பட்டிருக்கிறது. அதனை ஏ.எல்.விஜய் இயக்க; ஜிவி பிரகாஷ் இசையமைத்திருக்கிறார். அதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் தற்போது வீடியோவாக வந்திருக்கிறது. அதில் அஜித்குமாரின் கிராஃபிக்ஸ் உருவம் நடந்து வர; கார்கள் சீறி பாய்கின்றன. இந்த ஆவணப் படம் விரைவில் வரவிருக்கிறது. அஜித்தின் பிறந்தநாளை முன்னிட்டு இன்று ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது. அது ரசிகர்களிடையே பெரிய வரவேற்பை பெற்றிருக்கிறது.
அஜித்தின் திரை கரியர்: முன்னதாக அஜித்தின் லைன் அப்பை பொறுத்தவரை; ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க கமிட்டாகியிருக்கிறார். விரைவில் அந்தப் படம் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரவிருக்கிறது. அப்படத்தில் அஜித் இணை தயாரிப்பாளராகவும் பணியாற்றவிருக்கிறாராம். இந்தப் படத்தை முடித்துவிட்டு சிறுத்தை சிவா இயக்கத்தில் ஒரு படம் உறுதி என்றும்; வெங்கட் பிரபு இயக்கத்தில் மங்காத்தா 2 நடக்கவும் வாய்ப்புகள் இருப்பதாக திரைத்துறையிலிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.


Click it and Unblock the Notifications
