தேங்க்யூ தல.. கோட் படத்துக்கு முதல் வாழ்த்து சொன்ன அஜித்.. வெங்கட் பிரபு போட்ட குசும்பு ட்வீட்!
சென்னை: கங்கை அமரனின் மகனான வெங்கட் பிரபு ஆரம்பத்தில் ஹீரோவாக நடிக்க ஆரம்பித்து அதன் பின்னர் துணை நடிகராக மாறினார். ஆனால், ஒரு கட்டத்துக்கு மேல், இதெல்லாம் நமக்கு செட்டாகாது நம்மிடம் வேறு ஏதோ திறமை உள்ளது என யோசித்த அவர் அப்பாவை போலவே தானும் ஒரு இயக்குநராகி விடலாம் என்கிற முயற்சியில் சென்னை 600028 படத்தை எடுத்து மிகப்பெரிய வெற்றி இயக்குநராக மாறினார்.
இளைஞர்களை கவரும் விதமாக சரோஜா, கோவா என வரிசையாக படங்களை இயக்கி வந்த வெங்கட் பிரபு சூர்யாவை வைத்து மாஸ் என்கிற மாசிலாமணி, கார்த்தியை வைத்து பிரியாணி என சில சொதப்பல்களையும் கிண்டியுள்ளார்.

அஜித்தை வைத்து இவர் இயக்கிய மங்காத்தா திரைப்படம் தான் இவரை மாஸ் இயக்குநராக மாற்றியது. சிம்புவை வைத்து மாநாடு படத்தைக் கொடுத்த இவரால் ஹாலிவுட் தரத்தில் படங்களை கொடுக்க முடியும் என நம்பிய விஜய் கோட் படத்தில் இவருடன் இணைந்து பணியாற்றியுள்ளார். டீ ஏஜிங், ஏஐ தொழில்நுட்பம், மிஷன் இம்பாசிபிள் ஸ்டோரி என ஏகப்பட்ட பரிசோதனை முயற்சிகளுடன் இன்று வெளியாகி இருக்கும் கோட் படத்துக்கு அஜித் வாழ்த்து தெரிவிப்பதாக வெங்கட் பிரபு நன்றி கூறியுள்ளார்.
கோட் படத்தை வாழ்த்திய அஜித்: கோட் படத்தின் மட்ட பாடல் வீடியோவை அஜித் சாரை சந்திக்கும் போது காட்டினேன். அவர் ஹேப்பியாகி த்ரிஷா இங்க வந்து பாரேன் என்றெல்லாம் கூப்பிட்டு செட்டில் இருந்த பலருக்கும் அந்த காட்சிகளை காட்டினார். மங்காத்தா படத்தை விட 100 மடங்கு இந்த படம் வர வேண்டும் என வாழ்த்தினார் என்றெல்லாம் பேட்டிகளில் வெங்கட் பிரபு சொன்ன நிலையில், கோட் படத்தின் ரிலீஸ் தினமான இன்றும் அதிகாலையிலேயே முதல் ஆளாக கோட் படத்தை வாழ்த்திய தல அஜித்துக்கு நன்றி என வெங்கட் பிரபு ட்வீட் போட்டுள்ளார்.
வெங்கட் பிரபுவின் குசும்பு ட்வீட்: கோட் படத்தை பார்ப்பதற்கு முன்பாக எந்தவொரு படத்தையும் பார்க்க வேண்டாம் என்றும் ஜாலியா வந்து படத்தை பார்த்து தியேட்டரில் கொண்டாடுங்க, இது தளபதியோட படம் என்றும் ட்வீட் போட்டுள்ளார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான படங்கள் எல்சியூவில் இருந்த நிலையில், முந்தைய படங்களை அவர் பார்க்க சொன்னதை கிண்டலடித்துள்ளார் வெங்கட் பிரபு என கமெண்ட்டுகள் குவிந்து வருகின்றன. பேட்டி ஒன்றில் வெங்கட் பிரபுவிடம் ஹார்ட் டிஸ்க் தொலைஞ்சிடுச்சுன்னு சொல்வீங்களா, ஃபேக் ஃபிளாஷ்பேக் என சொல்வீங்களா என்றெல்லாம் கேட்கப்பட்ட போது எந்தவொரு இயக்குநரையும் காயப்படுத்தாமல் அவர் தனது ஸ்டைலில் அளித்த பதில் ரசிகர்களை ஹேப்பியாக்கியது குறிப்பிடத்தக்கது.

100 கோடியை தாண்டுமா?: கோட் திரைப்படம் முதல் நாளே 100 கோடி ரூபாய் வசூலை தாண்டுமா? என்கிற கேள்விகள் எழுந்துள்ளன. தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, கர்நாடகா, நார்த் இந்தியா மற்றும் ஓவர்சீஸ் என கோட் படத்தை அனைத்து இடங்களிலும் உள்ள தளபதி ரசிகர்கள் கொண்டாடி வரும் நிலையில், முதல் நாளில் 100 கோடி வசூல் சாத்தியம் என்றே அர்ச்சனா கல்பாத்தி நேற்று அளித்த பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். 150 கோடி வசூலை தாண்டுமா? என்கிற கேள்விக்கு படம் ரசிகர்களுக்கு பிடிக்கும் என்றும் லாங் ரன் இருக்கும் என்றும் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











