Ajith Shalini: 'உன்னோடு வாழாத வாழ்வென்ன வாழ்வு'.. திருமண நாளைக் கொண்டாடிய அஜித் - ஷாலினி.. வீடியோ!
சென்னை: தமிழ் சினிமா உலகில் மிகவும் க்யூட்டான தம்பதியர்களில் அஜித் - ஷாலினி தம்பதியரைச் சொல்லலாம். இவர்கள் இருவரும் கடந்த 1999ஆம் ஆண்டு வெளியான அமர்க்களம் படத்தில் இணைந்து பணியாற்றிய போது காதலித்து, 2000ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்கள். இவர்கள் இருவரும் நேற்று அதாவது ஏப்ரல் 24ஆம் தேதி தங்களது 25 வது திருமண நாளைக் கொண்டாடினார்கள். இது தொடர்பாக ஷாலினி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ வெளியிட்டுள்ளார்.
நடிகர், ரேஸர், புகைப்படக் கலைஞர் என சகலகலா வல்லவனாக இருப்பவர் அஜித் குமார். இவர் கடந்த 1993 ஆம் ஆண்டு முதல் திரையுலகில் உள்ளார். முதன் முதலில் பிரேம புஸ்தகம் என்ற தெலுங்கு படத்தில் அறிமுகமானாலும் அதே ஆண்டில் தமிழில் அமராவதி என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். 1993 ஆம் ஆண்டு தமிழ் சினிமாவில் அறிமுகமான அஜித்குமார் 1999 ஆம் ஆண்டுக்குள் மொத்தம் 26 படங்களில் நடித்திருந்தார்.
இதில் இவரது 25வது படம் தான் அமர்க்களம். இயக்குநர் சரண் இயக்கத்தில் உருவான இந்த படத்தில் கதாநாயகியாக நடித்தவர் ஷாலினி. இருவரும் இந்த படத்தின் படப்பிடிப்பின்போது தான் அறிமுகமாகிறார்கள். அதன் பின்னர் இருவரும் காதல் ஏற்பட, படப்பிடிப்பு முடிந்த பின்னர் இருவரும் தங்களது வீட்டில் பேசி கடந்த 2000ஆம் ஆண்டு ஏப்ரல் 24ஆம் தேதி திருமணம் செய்து கொண்டனர். அவர்களின் திருமணத்திற்கு மொத்த திரையுலகமும் திரண்டு சென்று வாழ்த்தியது. அரசியல் தலைவர்கள் தொடங்கி முன்னாள் முதலமைச்சர்கள் கருணாநிதி, ஜெயலலிதா உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

திருமண நாள்: நேற்றுடன் இவர்கள் திருமணம் செய்து கொண்டு 25 ஆண்டுகள் ஆகிறது என்பதால் ரசிகர்கள் பலரும் அவர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்து வந்தார்கள். பலரும் நடிகை ஷாலினியின் சமூகவலைதளப் பக்கத்தை அவ்வப்போது செக் செய்து கொண்டே இருந்தார்கள். இந்நிலையில் அஜித் குமார் மற்றும் ஷாலினி என இருவரும் தங்களது திருமண நாளை கேக் வெட்டி கொண்டாடியுள்ளார்கள். இது தொடர்பான வீடியோவை ஷாலினி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
கொண்டாட்டம்: இருவரும் கேக் வெட்டி ஒருவருக்கு ஒருவர் மாற்றி மாற்றி ஊட்டி விட்டுக் கொள்கிறார்கள். அஜித்தும் ஷாலினியும் இந்த வீடியோவில் செம க்யூட்டாக இருப்பதால் இணையவாசிகளும் ரசிகர்களும் அஜித்துக்கும் ஷாலினிக்கும் வாழ்த்துகளை தெரிவித்து வருகிறார்கள். சில ரசிகர்கள் வாழ்ந்தால் தல மாதிரி வாழனும் என்றெல்லாம் வாழ்த்தி வருகிறார்கள்.

படம் & ரேஸ்: அஜித் குமார் நடிப்பில் கடைசியாக வெளியான குட் பேட் அக்லி படம் மிகப்பெரிய வெற்றிப் படமாக மாறியுள்ளது. இந்த படம் வசூல் ரீதியாக உலக அளவில் சுமார் 290 கோடிகளுக்கு மேல் வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. இது மட்டும் இல்லாமல் தமிழ்நாட்டில் மட்டும் சுமார் 172 கோடிகளுக்கு மேல் வசூலித்துள்ளதாக படக்குழுவே அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மேலும் அஜித், தற்போது தனது அஜித் குமார் ரேஸிங் அணி மூலம் உலகம் முழுவதும் நடைபெறும் ஜி.டி 4 வகை கார் ரேஸில் கலந்து கொண்டு வருகிறார். அதில் அவரது அணி, துபாய் மற்றும் இத்தாலியில் நடைபெற்ற போட்டியில் மூன்றாவது இடத்தையும், பெல்ஜியமில் இரண்டாவது இடத்தையும் பெற்று நாட்டிற்கு பெருமை சேர்த்து வருகிறது.


Click it and Unblock the Notifications











